கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை மின் மயானங்களுக்கு ஆம்புலன்ஸில் கொண்டுசெல்லும் சேவைப்பணியை செய்துவருகிறார் 20 வயதே ஆன கல்லூரி மாணவி ஒருவர்.
மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூரில் விவேகானந்தா கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் பிரியா பாட்டில், தனது ஆன்லைன் வகுப்பு நேரம் போக, உறவினர்களே நெருங்க அச்சப்படும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலை ஆம்புலன்ஸில் ஏற்றி மின் மயானங்களுக்கு கொண்டு செல்லும் பணியை தன்னார்வலாக செய்துவருகிறார். அதாவது, அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளிலிருந்து கொரோனாவில் உயிரிழந்தவர்களின் உடல்களை ஆம்புலன்ஸில் ஏற்றுவதோடு இவரே ஆம்புலன்ஸை ஓட்டிச்சென்று மயானங்களில் ஒப்படைக்கிறார்.
இதுகுறித்து, கல்லூரி மாணவி பிரியா பேசும்போது, “எனது தந்தை காப்பீட்டு முகவராக பணிபுரிகிறார். கடந்த, 15 நாட்களாகத்தான் இப்பணியை சேவையாக நினைத்து செய்துவருகிறேன். இதற்கு, பெற்றோரின் ஆதரவும் இருப்பதால்தான் செய்ய முடிகிறது. இதுவரை, கொரோனாவால் இறந்த 65 பேரின் உடல்களை மயானங்களுக்கு ஆம்புலன்ஸில் வைத்து ஓட்டி சென்றுள்ளேன். எனக்கு கார் ஓட்ட தெரியும் என்பதால் எனது வகுப்பு நேரம் போக சமூகத்திற்கு ஏதாவது செய்யவேண்டும் என்று முடிவு செய்தேன். சமூக செயற்பாட்டாளர் ஹர்ஷன் சர்வே, பிரசாந்த் கோகலே ஆகியோர் சி.பி.ஆர் மருத்துவமனைக்கு இலவசமாக ஆம்புலன்ஸ் கொடுத்து உதவினார்கள். அதைவைத்துதான், நானும் இலவசமாக இச்சேவையை செய்துவருகிறேன்.
ஆம்புலன்ஸ் ஓட்ட முதலில் பி.பி.இ உடையை நான் அணிந்தபோது கொஞ்சம் பதட்டமாகத்தான் இருந்தது. இப்போது, கொரோனா உடல்களை ஏற்றிச்சென்று பழக்கமாகிவிட்டது” என்கிறார்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்