தலைவர்கள் பற்றி அவதூறு பரப்பிய புகாரில் கைதாகிய கிஷோர் கே சாமியை, வரும் 28-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையிலடைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் தலைவர்கள் குறித்து தொடர்ந்து அவதூறு பரப்பிவந்ததாக, கிஷோர் கே சாமி மீது, திமுகவின் காஞ்சிபுரம் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவின் நிர்வாகி ரவிச்சந்திரன், கடந்த 10-ஆம் தேதி காவல்துறையில் புகார் அளித்திருந்தார். அதன்பேரில், விசாரணை மேற்கொண்டு வந்த சங்கர் நகர் காவல்துறையினர், இன்று அதிகாலை கிஷோர் கே சாமியை சென்னை கேகே நகரில் உள்ள அவரது இல்லத்தில் கைது செய்தனர்.
அவரிடம் விசாரணை மேற்கொண்ட பின்னர், ஐ.பி.சி செக்ஷன் 153: கலகம் செய்ய தூண்டிவிடுதல், செக்ஷன் 505: பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல் மற்றும் 505: அவமதிக்கும் செயலில் ஈடுபடுதல், ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர், மாதவரத்தில் உள்ள தாம்பரம் நடுவர்மன்ற நீதிபதியின் வீட்டில் ஆஜர்படுத்தப்பட்ட கிஷோர் கே சாமியை, வரும் 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையிலடைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எம்.பி., எம்.எல்.ஏ., தலைவர்கள், பெண்கள், பத்திரிகையாளர்கள் பற்றி அருவருப்பாகப் பேசுவதை வாடிக்கையாகக் கொண்டிருந்த கிஷோர் கே சாமி, சாதி, மத ரீதியாகவும், பத்திரிகையாளர்கள் குறித்தும் அவதூறு ட்வீட்களை பதிவிடுபவர் என புகார்கள் உள்ளன. பெண் பத்திரிகையாளர்கள் பற்றி அவதூறு பேசியதாக ஏற்கெனவே கிஷோர் கே சாமி மீது பல வழக்குகள் உள்ள நிலையில், அது குறித்தும் விசாரிப்பதாக சென்னை காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முந்தைய வழக்கில் முன்ஜாமீன் கோரியபோது கிஷோர் கே சாமியின் குரூரமான, இழிவான எண்ணம் கொண்ட பதிவுகள், அவரது வக்கிரமான புத்தியையே காட்டுகிறது என நீதிமன்றம் கடுமையாக எச்சரித்தது. நீதிமன்றத்தின் எச்சரிக்கையையும் மீறி அவர் தொடர்ந்து அவதூறு பரப்பி வந்ததாக எழுந்த புகாரின் பேரில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்