Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

சிபிஎஸ்இ +2 தேர்வு ரத்து; மதிப்பெண் முறை: உச்ச நீதிமன்ற கேள்விகளும் அறிவுரையும்

'சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், மாணவர்களின் தேர்ச்சி எவ்வாறு செய்யப்படும் என மத்திய அரசு விளக்காதது ஏன்?' எனக் கேள்வி எழுப்பியுள்ளது உச்சநீதிமன்றம். மேலும் இதுகுறித்து இரண்டு வாரங்களுக்குள் முடிவெடுக்க உத்தரவிட்டுள்ளது.

சிபிஎஸ்இ  பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்வது தொடர்பான பொது நல வழக்குகள் மீதான விசாரணை நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் கேகே வேணுகோபால், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் சிபிஎஸ் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகளை ரத்து செய்து முடிவெடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், "மாணவர்களின் பொது சுகாதாரத்தை மனதில்கொண்டு சிபிஎஸ் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் இந்த மாணவர்களை எப்படி தேர்ச்சி அடைய வைக்கப்போகிறீர்கள்? அவர்களின் மதிப்பெண்கள் எந்த அடிப்படையில் வழங்கப்பட போகிறது? இந்த விஷயங்கள் குறித்து ஏன் எதுவும் விளக்கப்படவில்லை?" எனக் கேள்வி எழுப்பினர்.

image

அதற்கு பதிலளித்த மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர், "இது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் தங்களுக்கு காலஅவகாசம் வேண்டும்" எனவும் கோரிக்கை வைத்தார்.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ள மதிப்பெண் மதிப்பீடு முறையை 2 வாரங்களுக்குள் தெரிவிக்க சிபிஎஸ்இ மற்றும் ஐசிஎஸ்இக்கு உத்தரவு பிறப்பித்தனர்.

அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் குறுக்கிட்டு, "பல்வேறு மாநிலங்களில் மாநில பாடப்பிரிவின் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு வருகிறது. இது குறித்தும் உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்" எனக் கோரிக்கை வைத்தார்.

அதற்கு பதில் அளித்த நீதிபதிகள், "சுமார் ஒரு கோடிக்கும் அதிகமாக மாநில பாடப் பிரிவில் படிக்கும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு மாணவர்கள் உள்ளனர். இந்த மாணவர்களின் நலனும் எங்களுக்கு மிகவும் முக்கியம். முதலில் சிபிஎஸ்இ மற்றும் ஐசிஎஸ்சி பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்ச்சி மதிப்பெண் கணக்கிடும் முறையை உருவாக்கட்டும். அதன் பிறகு இந்த விவகாரம் குறித்து முடிவெடுக்கலாம். இந்த விஷயத்தில் மனுதாரர் சற்று பொறுமையுடன் இருக்கவேண்டும்" என அறிவுறுத்தினர்.

இதனைத்தொடர்ந்த வழக்கு விசாரணை இரண்டு வார காலத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

- நிரஞ்சன் குமார்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்