Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

விரைவுச் செய்திகள்: +2 மதிப்பெண் கணக்கீடு விவரம் வெளியீடு | சதமடித்த பெட்ரோல் விலை

தமிழகத்தில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறை அறிவிக்கப்பட்டுள்ளது. 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மதிப்பெண்ணில் 50 விழுக்காடும், 11ஆம் வகுப்பு மதிப்பெண்ணில் 20 விழுக்காடும், 12ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வில் 30 விழுக்காடும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது.

விருப்பப்படுவோருக்கு தேர்வெழுத வாய்ப்பு: மாணவர்கள் விரும்பினால் பிளஸ் டூ தேர்வை எழுதலாம் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் விளக்கமளித்துள்ளார். கொரோனா தொற்று குறைந்தபிறகு தனித்தேர்வர்களுடன் சேர்ந்து தேர்வு நடத்தப்படும் என்றும் கூறியுள்ளார்.

27 மாவட்டங்களில் தொலைதூர பேருந்துகள்: தமிழகத்தில் 27 மாவட்டங்களில் திங்கள்கிழமை முதல் தொலைதூர பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை மற்றும் தென் மாவட்டங்கள் இடையே அரசுப் பேருந்து சேவை மீண்டும் தொடங்குகிறது.

அதிக நாடுகளில் பரவிய டெல்டா வகை கொரோனா: இந்தியாவில் உருமாற்றம் பெற்ற டெல்டா வகை கொரோனா வைரஸ்தான், அதிக நாடுகளில் பரவியது என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஒலிம்பிக்கில் தங்கம் வென்றால் ரூ. 3 கோடி: உலக அரங்கில் தங்கப்பதக்கம் வெல்லும் தமிழக வீரர்-வீராங்கனைகளுக்கு 3 கோடி ரூபாய், வெள்ளி வென்றால் 2 கோடி ரூபாய், வெண்கலம் வென்றால் ஒரு கோடி ரூபாய் பரிசாக அளிக்கப்படும் என்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

20 மாவட்டங்களில் சதமடித்த பெட்ரோல் விலை: தமிழகத்தின் 20 மாவட்டங்களில் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டியது. நாளுக்கு நாள் விலை அதிகரிப்பதால் பொதுமக்கள் கவலையில் உள்ளனர்.

மத்திய அரசின் வரிக்கொள்ளை என விமர்சனம்: பெட்ரோல் விலை உயர்விற்கு மத்திய அரசின் வரிக்கொள்ளையே காரணம் என முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கடுமையாக விமர்சித்துள்ளார்.

சொத்துக்குவிப்பு புகார் - 3வது நீதிபதி நியமனம்: அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சொத்துக்குவிப்பு வழக்கு பதிவுசெய்ய கோரும் மனுவை விசாரிக்க 3ஆவது நீதிபதியாக நிர்மல்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இரு நீதிபதிகள் அமர்வு மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதால் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சதிகாரர்களுக்கு கட்சியில் இடமில்லை - கமல்ஹாசன்: மக்கள் நீதி மய்யம் கட்சியில் தலைவர் கமல்ஹாசனுக்கு கூடுதலாக பொதுச்செயலாளர் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. சதிகாரர்களுக்கு கட்சியில் இடமில்லை என்று கமல்ஹாசன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

அதிமுக- பாஜக கூட்டணி தொடருமா?: உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைப்பது குறித்து சூழலுக்கு ஏற்ப முடிவு செய்யப்படும் என பாஜகவின் தமிழகத் தலைவர் எல். முருகன் பேட்டியளித்துள்ளார்.

காவல்துறையினரை தாக்கிய மூவர் கைது: திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே காவல்துறையினரை தாக்கிய இளைஞர்கள் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் மூன்று பேரை போலீஸார் வலைவீசி தேடிவருகின்றனர்.

ஏடிஎம் கொள்ளை- மேலும் ஒருவர் கைது: எஸ்பிஐ வங்கி ஏடிஎம் கொள்ளை தொடர்பாக மேலும் ஒரு நபர் டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே கைதான அமீரிடம் காவல்துறை இரண்டாவது நாளாக விசாரணை நடத்திவருகின்றனர்.

சிவசங்கர் பாபா மீண்டும் சிறையில் அடைப்பு: சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிவசங்கர் பாபா டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதால் மீண்டும் புழல் சிறையில் காவல்துறையினர் அடைத்தனர்.

டெல்டா பிளஸ் பாதித்தோர் குணமடைந்துவிட்டனர்: டெல்டா பிளஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் குணமடைந்துவிட்டதால் அவர்கள் வசித்த இடம், கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்படவில்லை என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கமளித்துள்ளார்.

6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

பெரு அதிபர் தேர்தலில் கடும் மோதல்: பெரு அதிபர் தேர்தலில் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டதில் கொடி, மரக்கட்டையால் தாக்கிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்