வைகை அணையில் இருந்து வரும் 4ஆம் தேதி முதல் பாசனத்திற்கு நீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், வைகை அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்க , பெரியாறு பிரதானக் கால்வாய் பாசனப் பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று , 120 நாட்களுக்கு 6 ஆயிரத்து 739 கனஅடி தண்ணீர் திறந்துவிட அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம், மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் 45 ஆயிரத்து, 41 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
71 அடி உயரம் கொண்ட வைகை அணையில், தற்போது 67.32 அடி நீர் இருப்பு உள்ளது. இதேபோல் கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சித்தார் அணைகளில் இருந்தும் பாசனத்திற்கு நான்காம் தேதி முதல் தண்ணீர் திறந்துவிட உத்தரவிடப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு பிப்ரவரி 28ஆம் தேதி வரை வினாடிக்கு 850 கனஅடி நீர் திறக்கப்படும் என்றும், இதனால் 79 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்