Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

கோவை: முன்னாள் அட்டர்னி ஜெனரல் பெயரில் காசோலை மூலம் ரூ. 6 கோடி மோசடி செய்ய முயற்சி

கோவையில் மத்திய அரசின் முன்னாள் அட்டர்னி ஜெனரலும் உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞருமான முகுல் ரோத்தகியின் பெயரில் 6 கோடி ரூபாய் காசோலை கொடுத்து மோசடி செய்ய முயன்ற நபரை குற்றபிரிவு காவல் துறையினர் கைது செய்தனர்.

கோவை புதூர் மீனாட்சி நகர் பகுதியை சேர்ந்தவர் முருகானந்தம். இவர் அதே பகுதியில் உள்ள எச்.டி.எப்.சி வங்கியில் கடந்த மே 26-ம் தேதி 6 கோடி ரூபாய்க்கான காசோலையை, திருமங்கை சேரிட்டபிள் டிரஸ்ட் என்ற கணக்கில் செலுத்தியுள்ளார். விரைவாக காசோலையை பரீசிலித்து திருமங்கை அறக்கட்டளை கணக்கில் பணத்தை வரவு வைக்கும்படி கேட்டுள்ளார். வங்கி அதிகாரி சூரஜ் இந்த காசோலையை ஆய்வு செய்து பார்த்தபோது அது போலியானது என்பதும், காசோலையின் உரிமையாளர் முகுல் ரோத்தகி என்பவருடையது என்பதும் தெரியவந்தது.

இதனையடுத்து இது தொடர்பாக வங்கி மேலாளர் சூரஜ் கோவை குற்றபிரிவு காவல் துறையில் புகார் அளித்தார். மேலும் வங்கி அதிகாரி சூரஜ், காசோலையை டெபாசிட் செய்த முருகானந்தத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, காசோலை தொடர்பாக சில சந்தேகங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து முருகானந்தம் கோவைபுதூர் வங்கி கிளைக்கு வந்தபோது அங்கிருந்த காவல் துறையினர் அவரை கைது செய்தனர்.

இதைத்தொடர்ந்து அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் சாதிக், வடிவேலு ஆகியோர் இந்த காசோலையை தயார் செய்து, முன்னாள் அட்டர்னி ஜெனரலின் போலி கையொப்பத்தை போட்டு, முருகானந்தம் மூலம் வங்கியில் செலுத்தி, சென்னையைச் சேர்ந்த திருமங்கை அறக்கட்டளைக்கு பணத்தை பெற முயற்சித்து இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து முருகானந்தத்தை கைது செய்த குற்றபிரிவு போலீசார் அவர் மீது கூட்டுசதி, மோசடி, ஏமாற்றுதல், போலி ஆவணம் தயாரித்தல் உட்பட 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.

இதில், தலைமறைவாகியுள்ள வடிவேல், சாதிக் உள்ளிட்ட சிலரை கைது செய்ய இரு தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. மத்திய அரசின் முன்னாள் அட்டர்னி ஜெனரலாக இருந்த பிரபல வழகறிஞர் பெயரில் 6 கோடி ரூபாய் மோசடி நடக்க இருந்த நிலையில் வங்கி அதிகாரிகளும், காவல் துறையினரும் இணைந்து செயல்பட்டு மோசடியை தடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்