தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவல் குறைவாக இருக்கும் 27 மாவட்டங்களில், சலூன்கள், டாஸ்மாக் கடைகள், தேநீர்க் கடைகளை இன்று முதல் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. என்னென்ன தளர்வுகள் என்பதை விரிவாக பார்க்கலாம்.
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த மே மாதம் 10ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் பல்வேறு கட்டங்களாக ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அதன் விளைவாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உட்பட 27 மாவட்டங்களில் தொற்று பரவல் வெகுவாக குறைந்துள்ளது. எனவே, இந்த மாவட்டங்களில் சலூன்கள், அழகு நிலையங்கள் ஆகியவை இன்று முதல் இயங்கலாம் என அரசு அறிவித்துள்ளது.
டாஸ்மாக் மதுக்கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை திறந்திருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தேநீர்க் கடைகளில் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இனிப்பு மற்றும் கார வகைகள் விற்பனை செய்யும் கடைகளை திறக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களின் நலன் கருதி அரசு அலுவலகங்களில் இருந்து சான்றிதழ்கள் மற்றும் சேவைகளைப் பெற இ-சேவை மையங்கள் இன்று முதல் இயங்க உள்ளன. பூங்காக்கள், விளையாட்டுத் திடல்களில் காலை 6 மணி முதல் காலை 9 மணி வரை நடைப்பயிற்சிக்காக மட்டும் அனுமதிக்கப்படும். பம்ப் செட் உள்ளிட்ட வேளாண் உபகரணங்கள் பழுது நீக்கும் கடைகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படலாம். மிக்சி, கிரைண்டர் உள்ளிட்ட வீட்டு உபயோக மின் பொருள்களை விற்பனை செய்யும் மற்றும் பழுதுநீக்கும் கடைகள், செல்பேசி மற்றும் அதுசார்ந்த பொருள்கள் விற்கும் கடைகள், கட்டுமானப் பொருள்களை விற்கும் கடைகள் ஆகியவை, காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை இயங்கலாம்.
மண்பாண்டம் - கைவினைப் பொருள்கள் தயாரிக்கும் கடைகளும் விற்கும் கடைகளும் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படலாம். பள்ளி, கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மாணவர் சேர்க்கை குறித்த நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள ஏற்றுமதி நிறுவனங்கள், அவற்றுக்கு இடுபொருள் தயாரித்து வழங்கும் நிறுவனங்கள் 50 சதவிகித பணியாளர்களுடன் தொடர்ந்து செயல்படலாம். இதர தொழிற்சாலைகள் 33 சதவிகித பணியாளர்களுடன் செயல்படலாம். தொழிற்சாலை ஊழியர்கள் தங்கள் வாகனங்களில் இ பதிவு மற்றும் அடையாள அட்டையுடன் பணிக்கு சென்று வர அனுமதிக்கப்பட்டுள்ளது.
ஐடி நிறுவனங்களில் 20 சதவிகித பணியாளர்கள் அல்லது 10 நபர்கள் மட்டும் பணிபுரிய அனுமதிக்கப்படுவர். வீட்டு வசதி நிறுவனம், வங்கி சாரா நிதி நிறுவனங்கள் மற்றும் அனைத்து காப்பீட்டு நிறுவனங்களும் 33 சதவிகித பணியாளர்களுடன் செயல்படலாம்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்