Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

ஓடிடி திரைப் பார்வை: 'வெள்ளம்' - மதுப் பழக்கமும் திசைமாறிய முரளிகளின் வாழ்க்கையும்!

மது போதை ஏறிய மனித மூளையை பேரீச்சம்பழத்திற்கு கூட போடமுடியாது. மது ஒரு வசீகர சாத்தான். அது உங்களின் வேண்டப்பட்ட துரோகி. உங்கள் தோளில் கை போட்டு காலை வாறும் விரோதி அது. பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்பார்கள். மது வெறியும் அதனையே செய்யும். கடந்த ஜனவரியில் வெளியான 'வெள்ளம்' எனும் மலையாள சினிமா மதுப் பழக்கம் ஒரு மனிதனை எப்படியொரு கீழ்நிலைக்குத் தள்ளி, அவனது வாழ்வை சூரையாடுகிறது என பதிவு செய்திருக்கிறது.

தற்கொலை செய்வதற்காக முரளி கிணற்றின் மேல் ஏறி நிற்கும் முதல் காட்சியே நம்மை சீட் நுணிக்கு கொண்டு வருகிறது. பிறகு கதை ப்ளாஷ்பேக்கில் சொல்லப்படுகிறது. முரளி தனது கிராமத்தில் தன் மனைவி, மகள், தாய், தந்தையுடன் வசிக்கும் சராசரி குடியானவன். 24 மணிநேரமும் குடியுமானவனும் கூட. நண்பர்களோடு சேர்ந்து சதா குடிக்கும் முரளி தன் குடும்பம், தொழில், நற்பெயர், சுயமரியாதை என அனைத்தையும் தனது குடிப்பழக்கத்தால் இழக்கிறார். பிறகு குடிநோயிலிருந்து முரளி மீண்டாரா இல்லையா என்பதே முழுமையான திரைக்கதை.

ப்ரஜேஷ் சென் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த சினிமா ஓர் உண்மைக் கதை என்று சொல்லப்படுகிறது. அதற்கான தரவுகளும் படத்தில் இணைக்கப்பட்டுள்ளன. பலமுறை முரளி மதுப்பழக்கத்திலிருந்து வெளியேற முயன்று தோற்றுப் போகிறார். அவருக்கு அந்த அழுக்கு நாள்கள் பிடிக்கவில்லை என்றாலும், மதுவின் பிடி மூர்க்கமானதாக இருக்கிறது. குடும்பத்தால் நிராகரிக்கப்படும் முரளி எங்கெங்கோ அலைகிறார். தற்செயலாக நண்பரின் கண்ணில் முரளி படவே முரளியின் நண்பர் முரளியை மறுவாழ்வு மையத்தில் சேர்க்கிறார். இப்படியாக மதுவிலிருந்து மீள் முயலும் முரளியின் துயரநாள்களின் கனமான பதிவாக நீள்கின்றன காட்சிகள்.

image

முரளியாக ஜெயசூர்யா நடித்திருக்கிறார். அசல் குடிகாரனை தனது உடல் மொழியில் கொண்டு வந்திருக்கிறார் அவர். முரளியின் மனைவி சுனிதாவாக வரும் சம்யுக்தாவின் நடிப்பு அருமை. சமகாலத்தோடு ஒப்பிட்டுச் சொல்லவேண்டுமானால். பெரும்பான்மையான தமிழ்ப் பெண்களின் முகமாக அவர் இருக்கிறார். ஒரு காட்சியில் இன்னொரு பெண்ணிடம் முரளியின் மனைவி சுனிதா சொல்கிறார் “திருடனைக் கூட கல்யாணம் பண்ணிக்கலாம், ஆனா குடிகாரனைக் கூடாது.”

மதுவின் பிடியில் தள்ளாடும் முரளி ஒரு கட்டத்தில் மருத்துவப் பயன்பாட்டிற்கு வைத்திருக்கும் ஸ்பிரிட்டைக் குடிக்கிறார். அந்த காட்சி கலங்கடிக்கிறது. ஆனால் மதுவின் முழுமையான தாக்குதலுக்கு ஆளான ஒருவரின் வாழ்க்கையினை இப்படம் இன்னுமே சரியாக பதிவு செய்யவில்லை என்றே தோன்றுகிறது. மதுவினால் ஒருவர் குடும்பத்தை இழக்கிறார், தன்மானம் போகிறது என்ற கோணம் ஒருபுறமிருந்தாலும் மது அடிமைகளுக்கு இருக்கும் ஹாலூசினேஷன் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்தும் கொஞ்சம் பதிவு செய்திருக்கலாம். அதற்குத் தகுதியான குடிகாரராகத்தான் முரளி இக்கதையில் இருக்கிறார். தற்கொலை முயற்சியே அந்த நோயின் முத்திய நிலைதான் என்றாலும் கூட ஏதோ ஒரு போதாமை இப்படத்தில் இருப்பதை உணர முடிகிறது.

image

இந்த சினிமாவில் குறிப்பிடத்தக்க ஒரு காட்சியுண்டு. நாம் அனைவருமே நன்றாக புரிந்து கொள்ள வேண்டிய விஷயமும் அது. முரளிக்கு மருத்துவம் பார்க்கும் மருத்துவர் விவரிக்கிறார் “மது என்பது நோய் மதுஅடிமைகளை நோயாளிகளாக பார்க்க வேண்டும்.” உண்மைதான் மதுவிற்கு அடிமையானவர்களை குற்றவாளிகளைப் போல பார்க்கும் மனநிலையினை பொது சமூகம் மாற்றிக்கொள்ள வேண்டும். குடிப்பழக்கம் இருப்பவர் நோயாளியே தவிர குற்றவாளி அல்ல. அன்பின் கரங்கள் கொண்டு முடிந்த மட்டும் அவர்களை மீட்க முயல வேண்டும்.

தென்னிந்திய சினிமாவை மட்டும் எடுத்துக்கொண்டாலுமே கூட மதுவின் தீவிரத் தாக்குதல் குறித்து அழுத்தமாக பேசிய சினிமாக்கள் என எதுவுமே இல்லை. உன்னால் முடியும் தம்பி, சிந்துபைரவி, நீர்ப்பறவை என சிலவற்றை குறிப்பிடும் போதும்கூட 'வெள்ளம்' உட்பட எந்த சினிமாவும் மதுவின் கோர முகம் குறித்த தெளிவான சித்திரத்தை வரையவில்லை என்றே தோன்றுகிறது. ஒரு க்ரே லைன் போல அது நிரப்பப்படாத வெற்றிடமாகவே இன்றளவும் உள்ளது.

image

மதுவைப் பொறுத்தவரை மருத்துவர்கள் சொல்லும் சில விஷயங்கள் அதிர்ச்சியானவை. “ஒருவர் மதுவிற்கு அடிமையாகிவிட்டால் அவரை மருந்துகளால் முழுமையாக குணப்படுத்தவே முடியாது. மருந்துகள் பத்து சதவிகிதம் மட்டுமே குடிநோயாளியை மீட்க உதவும். நிரந்தர நிவாரணம் கொடுக்க முடியாத சில நோய்களின் வரிசையில் மதுவும் இருக்கிறது. நோயாளி மனது வைத்தால் மட்டுமே கொஞ்சம் அதனை கட்டுக்குள் கொண்டுவர இயலும்.” - இதுவே மதுநோயாளிகளுக்கு மருத்துவம் பார்க்கும் பல மருத்துவர்களின் பதிலாக உள்ளது.

image

மனித வளத்தை பாழ்படுத்தி மாநில வளர்ச்சியினைக் கெடுக்கும் இத்தனை கொடிய நோயின் தலைவாசல் எப்போதுமே தமிழகத்தில் திறந்துதான் இருக்கின்றன. தமிழக முரளிகள் டாஸ்மாக் கடைகளை நோக்கி எப்போதும் படையெடுத்துக்கொண்டே இருக்கிறார்கள். மதுபானக் கடைகளுக்கு இணையாக இல்லாவிட்டாலும், மாவட்டத்துக்கு இரண்டு - மூன்று மறுவாழ்வு மையங்கள் இருக்க வேண்டிய அவசியத்தை உணரலாம். 

நம்மை எந்த இடத்திலும் அசதியை ஏற்படுத்தாத திரைக்கதையுடன், சொல்ல வந்ததை அழுத்தமாகச் சொல்லில்ச் செல்லும் 'வெள்ளம்' எனும் விவாதத்திற்குரிய இந்த சினிமா இப்போது சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.

- சத்யா சுப்ரமணி

முந்தைய ஓடிடி திரைப் பார்வை: 'ஸ்கேட்டர் கேர்ள்' - சில ப்ளஸ்களுடன் நிகழ்ந்த சறுக்கல்கள்!

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்