சர்வதேச கிரிக்கெட் தளத்தில் தலைச்சிறந்த பேட்ஸ்மேன்கள் வரிசையில் இருப்பவர்கள் விராட் கோலியும், நியூசிலாந்தின் கேன் வில்லியம்சனும். இப்போது இவர்கள் தலைச் சிறந்த பேட்ஸ்மேன் என்ற அங்கீகாரத்தை தாண்டி யார் இப்போது டெஸ்ட் கிரிக்கெட்டின் தலைச்சிறந்த கேப்டன் என நிர்ணயிக்கும் நிலைக்கு உயர்ந்துவிட்டனர். ஆம், விராட் கோலியின் தலைமையிலான இந்திய அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் நாளை தொடங்கவிருக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதியாட்டத்தில் களம் காண்கின்றனர். இரண்டு ஆண்டுகளாக கடுமையாக போராடி இரு அணிகளும் இறுதி ஆட்டத்துக்கு தகுதிப்பெற்றுள்ளனர்.
இந்த இறுதிப் போட்டியில் ஒரு சுவாரஸ்யம் இருக்கிறது. அதாவது கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் கோலியின் தலைமையிலான இந்திய அணியும், வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் மோதி வருகின்றனர். இந்தப் போட்டி இருவரும் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை போட்டி நடைபெற்றபோதே தொடங்கிவிட்டதாக கூற வேண்டும். 2008 ஆம் ஆண்டு ICC U-19 உலகக் கோப்பை தொடரில் இருவரும் தத்தமது அணிகளுக்கு கேப்டனாக இருந்தனர். அப்போது நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் கோலி தலைமையிலான இந்திய அணி நியூசிலாந்தை வென்றது.
பின்பு, இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதிப்பெற்று U-19 உலகக் கோப்பையையும் வென்று கோலி சாதித்தார். அதன் பின்புதான் கோலி, ஐபிஎல்லில் உயர்ந்து பின்பு இந்திய அணிக்கு தேர்வானார். ஏறக்குறைய அதேபோல வில்லியம்சனும் 2010 ஆம் ஆண்டு இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து அணிக்காக அறிமுகமானார். ஆனால் வில்லியம்சனைவிட கோலி சர்வதேச போட்டிகளில் இரண்டு ஆண்டுக்கு முன்பாகவே அறிமுகமாகிவிட்டார். அதனால் கோலி சீனியர். பின்பு இருவரின் தலைமையிலான கிரிக்கெட் அணிகள் 2019 உலகக் கோப்பை போட்டி அரையிறுதியில் மோதியது. ஆனால் அதில் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து வெற்றிப் பெற்றது.
கோலி - வில்லியம்சன் எனும் "நண்பேன்டா"
எதிரெதிர் அணிக்கு தலைமை தாங்கினாலும் கோலி - வில்லியம்சன் இடையே மைதானத்தின் உள்ளேயும் வெளியேவும் நல்ல நட்பு இருக்கிறது. இந்த உறவு 2008 ஆம் ஆண்டு U-19 உலகக் கோப்பையில் இருந்து தொடர்வதாகதான் இதற்கு காரணம் என சொல்ல வேண்டும். இது குறித்து ஒரு முறை வெளிப்படையாக பேசிய வில்லியம்சன் "நாங்கள் ஒருவருக்கொருவர் எதிர் அணிகளில் விளையாடினோம். இளம் வயதிலேயே நாங்கள் சந்தித்துக் கொண்டது சிறப்பானது. அந்தப் பயணம் தற்போது வரையிலும் நன்றாகத் தொடர்கிறது. எங்களுக்குள் நட்பு ஏற்பட்டது மிகவும் சுவாரஸ்யமானது. கடந்த சில வருடங்களாக கிரிக்கெட் தொடர்பான தங்கள் புரிதல்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொள்கிறோம்" என்றார். மேலும் நேர்மையான எண்ணங்கள் மற்றும் ஆட்டக்களம் தொடர்பான வியூகங்களையும் பரிமாற்றம் செய்துகொள்வதாகக் கூறினார். தாங்கள் இருவரும் விளையாடுவதில் சிறிய மாற்றங்கள் இருந்தாலும், அதுவே தங்கள் தனித்துவமாக இருக்கலாம் என்றார் வில்லியம்சன்.
அதேபோல வில்லியம்சன் குறித்து கோலி கூறும்போது "2008 உலகக் கோப்பை தொடர் மட்டுமல்ல, 2007-ஆம் நியூசிலாந்து சென்று விளையாடியதில் இருந்து வில்லியம்சனை நான் கவனித்து வருகிறேன். அவர் பேட்டிங் செய்யும் போது நான் ஸ்லீப்பில் நிற்பேன். அவர் பேட்டிங் விதத்தை பார்த்து அப்போதே வியந்தேன். அவ்வளவு நேர்த்தியாக விளையாடினார். தற்போது, உலகக் கோப்பை தொடரில் பல இக்கட்டான சமயங்களில் அணியை வழிநடத்தி வெற்றிக்கு கொண்டு செல்கிறார். அவர் வீரர் மட்டுமல்ல, நல்ல மனிதரும் கூட. நாங்கள் நல்ல நண்பர்கள். நாங்கள் உணர்வுகளால பேசிக்கொள்ள கூடியவர்கள்" என்றார் நெகிழ்ச்சியுடன். இதேபோல சொந்த வாழ்க்கையிலும் வில்லியம்சன் தம்பதியினருக்கு 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் குழந்தை பிறந்தது. அதேபோல விராட் கோலி தம்பதிக்கு 2020 ஜனவரி மாதம் குழந்தை பிறந்தது.
ஒரு தலைவனாக இருவரின் ரெக்கார்டுகள்
டெஸ்ட் போட்டிகளில் வெற்றிகளின் விகிதத்தில் பார்த்தால் விராட் கோலியே முன்னிலை வகிக்கிறார். இதுவரை கோலியின் தலைமையின் கீழ் இந்திய அணி 60 போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில் 36 போட்டிகளில் வெற்றிப்பெற்றள்ளது. இது ஒரு கேப்டனாக சவுரவ் கங்குலி பெற்ற வெற்றியை விட அதிகம். அதேவேளையில் கேன் வில்லியம்சன் தலைமையில் நியூசிலாந்து அணி 36 போட்டிகளில் விளையாடி 21 வெற்றிகளையும் 7 தோல்விகளையும் சந்தித்துள்ளது. இதில் கோலியின் வெற்றி சதவிதம் 60 %, வில்லியம்சனின் வெற்றி சதவவிதம் 58.33 % ஆகவும் இருக்கிறது. அதேபோல வெளிநாடுகளில் சென்று விளையாடிய கோலி தலைமையிலான இந்திய அணி 30 போட்டிகளில் விளையாடி 13 இல் வெற்றிப் பெற்று இருக்கிறது. கேன் வில்லியம்சன் தலைமையிலான அணி 11 போட்டிகளில் விளையாடி 3 இல் மட்டுமே வெற்றிப் பெற்றுள்ளது.
ஒரு பேட்ஸ்மேனாக இருவரும் சம பலம் வாய்ந்தவர்களாக இருக்கிறார்கள். கோலி 91 டெஸ்ட்களில் 27 சதம் உள்பட தன்னுடைய ஆவரேஜ் 52.37 ஆக வைத்திருக்கிறார். கேன் வில்லியம்சன் 84 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 24 சதம் விளாசியிருக்கிறார். ஆனால் கோலியை விட ஆவரேஜ் 53.6 என முன்னிலையில் இருக்கிறார். இப்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி இங்கிலாந்தில் நடைபெறுவதால் கோலியின் கையே ஓங்கியிருக்கிறது. 2014 இங்கிலாந்து தொடரில் சொதப்பிய கோலி 2018-இல் நடைபெற்ற தொடரில் விஸ்வரூபம் எடுத்தார். அந்தத் தொடரில் மட்டும் கோலி 563 ரன்கள் எடுத்தார். ஆனால் இங்கிலாந்து ஆடுகளங்களில் வில்லியம்சன் ரெக்கார்ட் படுமோசமாக இருக்கிறது. இதுவரை 5 டெஸ்ட் போட்டிகளில் 261 ரன்களையே சேர்த்துள்ளார் அவர். அண்மையில் நடைபெற்ற டெஸ்ட்டில் கூட வில்லியம்சன் பெரிதாக ரன்களை சேர்க்கவில்லை.
பொதுவாக இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளுடன் வார்த்தை மோதல்கள், சீண்டல்கள் என இருக்கும். ஆனால் நியூசிலாந்துடன் பொதுவாக அதுபோன்ற நிகழ்வகள் இருக்காது. அண்மைக்a காலமாக இரு அணிகள் பெற்ற வெற்றிகள் சம பலம் கொண்டவையாக இருக்கிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் கோலி - வில்லியம்சன் உணர்வுகளால் பேசிக்கொள்வார்களா? இறுதியில் யார் வெற்றிப் பெறுவார்கள் என்பதை பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்