Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

தொடர் புறக்கணிப்பு, தலைமை கொடுத்த விரக்தி... - பாஜகவில் ஜிதின் பிரசாதா சேர்ந்த பின்னணி!

காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய முன்னாள் மத்திய அமைச்சர் ஜிதின் பிரசாதா பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளது உத்தரப் பிரதேச அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஜிதின் பிரசாதா அக்கட்சியிலிருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் நேற்று இணைந்துள்ளார். இந்த இணைப்பு உத்தரப் பிரதேச அரசியலில் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது. ஜிதின் பிரசாதா பாஜகவில் இணைந்தது உத்தரப் பிரதேச காங்கிரஸுக்கு இழப்பாக பார்க்கப்படுகிறது. ஜிதின் பிரசாதா உத்தரப் பிரதேசத்தில் 10 சதவீத மக்கள் தொகை கொண்ட பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர். தனது அரசியல் வாழ்க்கையில் தோல்வியை கண்டிராத, ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் மொத்த பிரதிநிதியாக இருக்கும் பிரசாதாவின் உறுதுணை பாஜகவுக்கு இந்தச் சூழலில் அதிகம் தேவைப்பட்டது.

image

ஏனென்றால், பாஜகவில் அடல் பிஹாரி வாஜ்பாய், முரளி மனோகர் ஜோஷி மற்றும் கல்ராஜ் மிஸ்ரா ஆகிய பிராமண சமூகத்தைச் சேர்ந்த தலைவர்களின் சகாப்தம் முடிந்துவிட்டது. பிராமணர்கள் - உ.பி.யின் மக்கள் தொகையில் 10 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அவர்களை கவர உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பிராமணத் தலைவர்கள் எவரும் பெரிதாக இல்லை. முன்னாள் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் பிரஜேஷ் பதக் போன்ற சில பிராமண முகங்களை பாஜக முன்வைத்தது. ஆனால் அவர்களில் எவரும் பிரசாதா அளவுக்கு அந்த சமூகத்தின் மக்களிடம் பெரிய புகழ் மற்றும் அந்தஸ்தை கொண்டிருக்கவில்லை. இதுபோன்ற காரணங்களால் பிரசாதாவின் இருப்பு, பாஜகவுக்கு தேவைப்பட்டது. இதேபோன்று ஒரு நிலையில்தான் பிரசாதாவும் இருந்துவந்தார்.

அதேநேரம், ஜிதின் பிரசாதாவுக்கு அவரின் அரசியல் தேவையாகவும் இந்த மாற்றம் தேவைப்படுகிறது. உத்தரப் பிரதேச மாநிலத்தை சேர்ந்த ஜிதின் பிரசாதா கடந்த 2001-இல் இளைஞர் காங்கிரஸ் பிரிவின் பொதுச் செயலாளராக தனது அரசியல் பணியை தொடங்கியவர் என்றாலும் அவரின் தந்தை, தாத்தா என அவரின் பரம்பரையே காங்கிரஸை சேர்ந்தவர்கள்தான்.

காங்கிரஸ் முன்னாள் துணைத் தலைவரும், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் அரசியல் ஆலோசகராக பணியாற்றிய மறைந்த ஜிதேந்திர பிரசாத்தின் மகன்தான் இந்த ஜிதின் பிரசாதா. 2004 மற்றும் 2009 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வென்றவர். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அமைச்சரவையில் இணை அமைச்சராக பதவி வகித்தவர். இப்படி பாரம்பரிய காங்கிரஸ் பின்னணி கொண்ட பிரசாதா திடீரென பாஜகவில் இணைந்துவிடவில்லை. 2019 மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக, பாரதிய ஜனதா கட்சியில் சேர ஜித்தின் பிரசாதா முடிவெடுத்து அதற்கான வேலைகளில் இறங்கினார் என செய்திகள் வெளியானது.

image

அப்போது அந்த முடிவில் இருந்த பின்வாங்கினார். உ.பி.யில் இளம் தலைவருக்கு காங்கிரஸ் சரியான கட்சி அல்ல என்பதை நன்கு அறிந்த பின் தற்போது கட்சி மாறும் முடிவை எடுத்துள்ளார். 2019-ம் ஆண்டிலேயே அவர் சேராததற்கு அந்த சமயத்தில் ராகுல் காந்தியிடம் இருந்த நெருக்கம், காங்கிரஸ் பின்னணி கொண்ட குடும்பம் என்பது போன்ற பல காரணங்கள் பேசப்பட்டன. ஆனால், சில காலங்களாக பிரசாதா மீது காங்கிரஸ் காட்டிய பாகுபாடு, காங்கிரஸ் நிலைப்பாட்டில் அவர் கொண்டிருந்த அதிருப்தி பெரிதாக பேசப்பட்டு வந்தது.

உ.பி.யில் உள்ள பிராமணர்களின் குறிப்பிடத்தக்க எண்ணிக்கை மற்றும் பிற சமூகங்கள் மீதான பிராமணத் தலைவர்கள் செலுத்தியிருந்த செல்வாக்கை உணர்ந்த காங்கிரஸ் எப்போதும் அதுபோன்ற தலைவர்களை கவர்ந்திழுக்க முயன்றது. அந்த அடிப்படையில்தான் ரீட்டா பகுன ஜோஷி மற்றும் பிரமோத் திவாரி போன்ற தலைவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கத் தொடங்கியது காங்கிரஸ். ஆனால் பிரசாதா, அவரது குடும்பத்தினர் பிராமணர்களிடையே நெருக்கமாக இருந்துவந்தாலும், அவர் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டார் என்ற பேச்சு உண்டு.

இந்தக் காலகட்டங்களில்தான், பாலகோட் வான்வழித் தாக்குதல்கள், ஜம்மு - காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கம், முத்தலாக் ஆகியவற்றை நீக்குவது போன்ற முக்கியமான விஷயங்களில் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டில் அதிருப்தி வெளிப்படுத்தினார் பிரசாதா. ``எனது தலைவர்களுக்கு பொதுமக்களின் மனநிலை புரியவில்லை. 370-வது பிரிவை ரத்து செய்ய முழு நாடும் ஆதரவளிக்கும் போது, எனது கட்சி அதை எதிர்க்கிறது! எங்கள் தலைவர்கள் மனதில் இருப்பதை கடவுளுக்குத் தெரியும்" என்று வெளிப்படையாக பேசினார். இந்த நேரத்தில் உ.பி. காங்கிரசில் பொறுப்புக்கு வந்த பிரியங்கா காந்தி ஆதரவாளர்கள் பிரசாதாவை கட்சியில் இருந்து ஓரம்கட்டும் முயற்சிகளில் ஈடுபட்டு வந்தனர்.

image

ஆனால், அதையெல்லாம் பொருட்படுத்தாத பிரசாதா, யோகி ஆதித்யநாத் அரசாங்கத்திற்கு எதிரான பிராமணர்களின் கோபத்தை அணி திரட்டும் முயற்சியாக பிராமண சேத்னா பரிஷத்தை நிறுவி, அதன்மூலம் பிராமணர்களையும், காங்கிரஸின் தொண்டர்களையும் மாவட்டம் மாவட்டமாக சென்று சந்திக்க செல்லத் தொடங்கியபோது, அவர் மேற்கு வங்கத்தின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். இதற்கிடையில், காங்கிரஸ் கட்சிக்கு நிரந்தர தலைவரை நியமிக்க கோரி அக்கட்சியின் தற்காலிக தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதிய 23 காங்கிரஸ் தலைவர்களில் ஜிதின் பிரசாதாவும் ஒருவராக குரல் கொடுத்தார். இதுபோன்ற விஷயங்களில் கட்சி தலைமையால் ஏமாற்றமடைந்த போதிலும், பிரசாதா மேற்கு வங்காள பொறுப்பாளராக தனது பொறுப்பை நிறைவேற்றினார்.

ஆனால், இந்த விஷயத்திலும் அவருக்கு கட்சி தலைமையின் செயல்பாடுகள் அதிருப்தியை கொடுத்தது. தேர்தல் பொறுப்பாளராக மேற்கு வங்கத்தில் பிரசாரம் செய்ய ராகுல் காந்தி மற்றும் பிற மத்திய தலைவர்களுக்கு வங்காளத்திற்கு வந்து பிரசாரம் செய்யுமாறு பலமுறை செய்திகளை அனுப்பிய போதிலும், டெல்லியில் இருந்து எந்த பதிலும் வரவில்லை என்று கூறப்படுகிறது. இதுபோன்ற காரணங்களால் தற்போது பாஜகவில் சேரும் முடிவுக்கு வந்துள்ளார். பாஜகவின் தலைமை அலுவலகத்தில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் முன்னிலையில் கட்சியில் இணைந்த அவர், ``எனது அரசியல் வாழ்வின் புதிய அத்தியாயம் இன்று முதல் தொடங்குகிறது. காங்கிரஸுடனான எனது தொடர்பு மூன்று தலைமுறை கொண்டது. என்றாலும் பலகட்ட ஆலோசனைக்கு பிறகே இந்த முடிவுக்கு வந்துள்ளேன்" என்று பேசியுள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்