'அரசு விதிமுறைகளை மக்கள் முறையாக முழுமையாக கடைபிடித்ததால்தான் இந்த அளவுக்கு கொரோனா கட்டுக்குள் வந்துள்ளது' எனத் தெரிவித்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
இதுதொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் மு.க.ஸ்டாலின் தோன்றி பேசுகையில், “அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளால் கொரோனா ஓரளவுக்கு கட்டுக்குள் வந்திருக்கிறது. அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளால் இரண்டு வார காலத்தில் அனைத்தும் கட்டுக்குள் வந்துள்ளது. ஊரடங்கு உத்தரவை மக்கள் முறையாக பின்பற்றியதால் குறைந்துள்ளது.
பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. போலி மது, கள்ள மது தமிழ்நாட்டை சீரழித்துவிடக் கூடாது என்பதில் அரசு கவனமாக உள்ளது. டாஸ்மாக் கடைகள் முழுமையாக கட்டுப்பாடுகளை பின்பற்றி இயங்கும். டாஸ்மாக் கடைகளில் கட்டுப்பாடுகள் மீறப்பட்டால் தளர்வுகள் திரும்பப் பெறப்படும். கட்டுப்பாட்டை மீறுபவர்கள் தங்களுக்கும் நாட்டுக்கும் தீமை செய்பவர்கள் என்பதை உணர வேண்டும்.
காவல்துறை கண்காணிப்பு இல்லாமலேயே மக்கள் கட்டுப்பாட்டோடு நடந்து கொள்ள வேண்டும். முழு ஊரடங்கிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மக்கள் நடந்துக் கொள்ள வேண்டும். பொதுபோக்குவரத்து விரைவில் இயக்கப்பட வேண்டும். பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட வேண்டும். தொற்று பரவலை தகர்க்கும் வல்லமை மக்களுக்கு உள்ளது.
அரசின் விதிகளை பின்பற்றி நடந்து கொண்ட மக்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி . 50 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்படலாம் என மருத்துவர்கள் எச்சரித்த நிலையில் 15 ஆயிரத்துக்கும் கீழ் தொற்று பதிவாகி உள்ளது. ஆக்ஸிஜன் பற்றாக்குறை படுக்கை வசதி இல்லை போன்ற நிலைமை தற்போது இல்லை. கொரோனா கட்டளை மையத்தை தொடர்பு கொள்வோரின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்