மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் தேடப்பட்டுவந்த சிவசங்கர் பாபா டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா, பள்ளி மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டது. பின்னர் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றப்பட்டது. எஸ்.பி விஜயகுமார் தலைமையில் சி.பி.சி.ஐ.டி போலீசார் இந்த வழக்கை விசாரித்து வரும் நிலையில், உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள மருத்துவமனையில் சிவசங்கர் பாபா சிகிச்சை பெற்று வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனைத்தொடர்ந்து சிவசங்கர் பாபாவை கைது செய்ய சிபிசிஐடி டிஎஸ்பி குணவர்மன் தலைமையிலான தனிப்படையினர் நேற்று டேராடூன் விரைந்தனர். ஆனால், இன்று காலை சிபிசிஐடி போலீசார் டேராடூனில் உள்ள அந்த குறிப்பிட்ட மருத்துவமனைக்கு சென்றபோது சிவசங்கர் பாபா அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளது தெரியவந்துள்ளது.
ஏற்கெனவே சிவசங்கர் பாபா வெளிநாடுகளுக்கு எங்கும் தப்பிச்செல்லாமல் இருக்க அனைத்து விமான நிலையங்களுக்கும் சிபிசிஐடி போலீசார் நேற்று லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டதால், சிவசங்கர் பாபாவுக்கு சொந்தமான ஆசிரமங்களில் மறைந்திருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் தேடி வந்தனர்.
இந்நிலையில், தற்போது டெல்லியில் சிவசங்கர் பாபா போலீஸாரிடம் சிக்கியதையடுத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்