ஆபாச பேச்சு தொடர்பாக போலீசார் சம்மன் அனுப்பிய நிலையில் 'பப்ஜி' மதன் என்கிற யூடியூபர் தலைமறைவாகியுள்ளார். அவரை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
ஆன்லைனில் பப்ஜி உள்ளிட்ட பல்வேறு லைவ் வீடியோ கேம்களில் எளிதில் வெல்வதற்கான டிப்ஸ் சொல்லித்தரும் வகையில் 'மதன்' எனும் யு-டியூப் சேனலை நடத்தி வருபவர் மதன் என்கிற இளைஞர். ஆரம்பத்தில் இவரது ஆபாசமான பேச்சுகளுக்கு கிடைத்த ஒரு சில மோசமான வரவேற்பு, 'டாக்ஸிக் மதன் 18+' என்கிற மற்றொரு யூ-டியூப் சேனலை தொடங்குவதற்கும் அடித்தளம் அமைத்திருக்கிறது. இந்த யூ-டியூப் சேனல்களில் இவர் பதிவேற்றியுள்ள பல வீடியோக்கள் ஆபாசத்தின் உச்சமாக இருக்கின்றன. தன்னோடு ஆன்லைனில் விளையாடும் சக போட்டியாளர்களை தரக்குறைவான வார்த்தைகளில் திட்டுவதை வாடிக்கையாகவே வைத்திருக்கிறார் மதன். அதிலும், பெண்கள் என்றால், அவரது வார்த்தைகளில் ஆபாசம் தலைவிரித்தாடுகிறது.
இந்நிலையில், மதனின் ஆபாச பேச்சுகள் குறித்து சைபர் கிரைமில் புகார் அளிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி புளியந்தோப்பு சைபர் பிரிவு போலீஸார் உத்தரவிட்டிருந்தனர். இந்த நிலையில் மதன் தலைமறைவாகியுள்ளார். அவரை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்