சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாக சிறையிலிருந்து வெளியேவந்த சசிகலா தொடர்ந்து தீவிர அரசியலில் ஈடுபடுவேன் என சூளுரைத்தார். ஆனால் அதை அதிமுக தலைமை ஏற்கவில்லை. இதனால் தேர்தலுக்கு முன்பு அரசியலை விட்டு விலகுவதாக அறிவித்த சசிகலா அதிமுக தோல்விக்கு பிறகு அரசியலுக்கு வரப்போவதாக சசிகலா கட்சி தொண்டர்களிடையேயும் நிர்வாகிகளிடையேயும் பேசும் ஆடியோ தொடர்ச்சியாக வெளியாகி பரபரப்பை கிளப்பி வருகிறது.
இதற்கு நீண்ட காலமாக மவுனம் காத்து வந்த அதிமுக தலைமை தற்போது அதிரடி நடவடிக்கையில் இறங்கியிருக்கிறது. சசிகலாவுடன் தொடர்பு கொண்ட நிர்வாகிகளை கட்சி அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கம் செய்துள்ளது.
இதற்கு முன்னதாக, இன்று நடைபெற்ற அதிமுக கூட்டத்தில், “சசிகலாவுடன் தொலைபேசியில் உரையாடிய அனைவரையும் நீக்க வேண்டும். சசிகலாவுடன் உரையாடுவோர் யாராக இருந்தாலும் கட்சி ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.சசிகலா அதிமுகவை அபகரிக்கப் போவதாக ஒவ்வொரு நாளும் தொலைபேசியில் சிலருடன் பேசி வருகிறார். சசிகலா தொலைபேசியில் பேசுவதை தொலைக்காட்சியில் ஒளிபரப்பி விநோத நாடகத்தை அரங்கேற்றி வருகிறார். ஒரு குடும்பத்தின் அபிலாஷைகளுக்காக அதிமுக ஒருபோதும் தன்னை அழித்துக் கொள்ளாது” என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் துக்ளக் ரமேஷ் கூறுகையில், “சசிகலாவின் தொலைப்பேசி உரையாடல்கள் குறித்து அதிமுக மத்தியில் ஒரு கலக்கமும் பதட்டமும் இருப்பது இந்த தீர்மானத்தின் மூலம் வெளிப்பட்டிருக்கிறது. ஆனாலும்கூட ஓபிஎஸ்சும் மற்ற நிர்வாகிகளும் சேர்ந்து இந்த தீர்மானத்தை கொண்டுவந்திருப்பது போன்ற தோற்றம் அதிமுகவிற்கு கூடுதல் பலம். சசிகலா தனது அரசியல் நடவடிக்கையில் வகுத்துக்கொள்ள தொடங்கும்போது யாரெல்லாம் சந்திக்கிறார்களோ அதன்பிறகே அது வடிவம் பெறும். ஆரம்பத்தில் சசிகலாவுடன் பேசிக்கொண்டிருப்பது அமமுகவினர்தான் என சொன்னார்கள். ஆனால் அதிமுகவினரும் பேசிக்கொண்டிருந்தனர் என சசிகலா தரப்பில் ஆதாரங்களுடன் வெளியிடப்பட்டு வந்தது.
இந்தநிலையில் தான் முதலில் அலட்சியப்படுத்திய அதிமுக தற்போது சுதாரித்துக்கொண்டு இந்த தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.
இதுகுறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில், “எந்த ஒரு ஆடியோ பூச்சாண்டிக்கும் அதிமுக பயப்படாது. அதிமுகவில் என்ன நடக்கிறது என்ற எதிர்ப்பார்ப்பு அனைவருக்கும் இருக்கிறது. அது மிகப்பெரிய இயக்கமாக இருப்பதால்தான் அந்த எதிர்ப்பார்ப்பு நீடிக்கிறது. கட்சி கொள்கையை மீறி யார் செயல்பட்டாலும் நடவடிக்கை எடுக்கப்படும். சசிகலா ஆதரவுடன் அமமுக இயங்கி வருகிறது. அப்படி இருக்கும்போது அவருடன் தொடர்பில் யார் இருந்தாலும் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள். அறிக்கையில் கையெழுத்து இல்லாமல் வெளியானதில் எந்த உள்நோக்கமும் இல்லை” எனத் தெரிவித்தார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்