Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

ஓடிடி திரைப் பார்வை: 'ஸ்கேட்டர் கேர்ள்' - சில ப்ளஸ்களுடன் நிகழ்ந்த சறுக்கல்கள்!

பொதுவாகவே விளையாட்டை மையமாக வைத்து உருவாக்கப்படும் திரைப்படங்களுக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளமே உண்டு. 'வெண்ணிலா கபடிக் குழு', 'ஜீவா', 'இறுதிச்சுற்று', 'சக்தே இந்தியா', 'எம்.எஸ்.தோனி', 'லகான்', 'டன்கல்' என அதன் பட்டியல் நீளம். அதே ஸ்போர்ட்ஸ் ஜானரில் எடுக்கப்பட்டு நெட்பிளிக்ஸில் நேற்று வெளியாகியிருக்கும் சினிமா 'ஸ்கேட்டர் கேர்ள்' (Skater Girl). மஞ்சரி மகிஜானி இயக்கி இருக்கும் இந்த சினிமா நம்மில் பலருக்கும் அதிகம் பரிச்சயப்படாத விளையாட்டான சறுக்கு விளையாட்டை மையமாக வைத்து பேசி இருக்கிறது.

image

இந்தி மொழியில் எடுக்கப்பட்டிருக்கும் இந்த சினிமா, ராஜஸ்தான் மாநிலத்தின் ஒரு தொலைதூர கிராமத்தில் படமாக்கப்பட்டுள்ளது. ப்ரெர்னா கிராமத்தில் தனது தம்பி, தாய், தந்தையுடன் வாழும் பதின் பருவத்துப் பெண். சாதிய வேறுபாடுகள் படிந்து கிடக்கும் அக்கிராமத்தில் வாழும் பின்தங்கிய குடும்பம் ப்ரெர்னாவினுடையது. அவளுடைய ஸ்கேட்டர் கனவிற்கான விதையை லண்டனில் இருந்து அக்கிராமத்திற்கு வரும் ஜெஸிகா விதைக்கிறாள். பொருளாதாரத்தில் பின்தங்கிய கிராமத்தில் வளரும் ப்ரெர்னா உள்ளிட்ட குழந்தைகளுக்கு அவ்வூரிலேயே ஸ்கேட்டர் விளையாட்டுக்கான மைதானம் அமையப் பெறுகிறது. அது எப்படி சாத்தியமானது. ப்ரெர்னாவின் கனவு பலித்ததா என்பதே இப்படத்தின் திரைக்கதை.

image

கதையாகப் பார்த்தால் கரு வலிமையானதுதான். ஆனால் இந்த சினிமா எதிர்பார்த்த திருப்தியை ரசிகர்களுக்குத் தரவில்லை. மொத்தமாக ஒரு மணி நேரம் 40 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த சினிமா, அதன் கதைக் கருவை வந்தடையவே ஒரு மணி நேரம் எடுத்துக்கொள்கிறது.

ஊரில் ஒரு ஸ்கேட்டர் மைதானம் அமைக்க வேண்டும்; அதற்கு உள்ளூர் அரசியல் பிரமுகர்கள் முதல் பலரது ஆதரவு தேவை. அந்த ஆதரவைத் திரட்ட ஜெஸிகா ஒவ்வொருவராக சந்தித்து உதவி கேட்கிறார். இரண்டு விதமான பதில்களும் கிடைக்கின்றன. பெங்களூருவில் இருந்து வரும் ஒரு குழு மைதானத்தை அமைத்துக் கொடுக்கிறது. இந்தக் காட்சிகள் யாவிலும் சற்றும் உயிரோட்டம் இல்லை. படத்தின் மையப் புள்ளியே அக்கிராமத்திற்கு ஒரு ஸ்கேட்டர் மைதனம் அமைப்பதுதான். ஆனால் அதற்காக அதிகபட்சமாக பத்து நிமிடங்களே இக்கதையில் செலவிடப்பட்டிருக்கின்றன.

image

அதேபோல லண்டனில் இருந்து அக்கிராமத்திற்கு வரும் ஜெஸிகா தனது தந்தையின் பூர்விக கிராமம் என்றும், அதன்பொருட்டே தான் அங்கு வந்திருப்பதாகவும் சொல்கிறார். இன்னொரு புறம் ஸ்கேட்டர் கேர்ள் ப்ரெர்னாவின் வறுமை கூடிய வாழ்வு பதிவு செய்யப்படுகிறது. கிராமத்தின் சாதிய அடுக்குகள் குறித்த பதிவும் உள்ளது. ஆனால், ஸ்கேட்டர் மைதானம் அமைக்க எது தடையாக உள்ளது, கதை எதை நோக்கிச் செல்கிறது என்ற தெளிவு திரைக்கதையில் இல்லை. ப்ரெரர்னாவைக் கொண்டு இதனை ஒரு எமோஷனல் ட்ராமாக அணுக சில இடங்களில் முயன்றிருக்கிறார்கள்; அதுவும் கூட ஓரளவிற்கே வொர்க் அவுட் ஆகியிருக்கிறது.

image

படத்தின் சிறப்பான விசயங்களாக ஒளிப்பதிவினைக் கூறலாம். இயக்கத்தில் சற்று சருக்கி இருந்தாலும் மோனிக்குமார், ஆலன் பூணுடன் இணைந்து மஞ்சரி மகிஜானி நல்ல ஒளிப்பதிவைப் பெற்று வழங்கி இருக்கிறார். சலீம், சுலைமானின் இசை இதம். ஒரு வறண்ட இந்தியக் கிராமத்தில் சுற்றுலாப் பயணியாக நாம் நுழைந்து பார்க்க இந்த சினிமா உதவும்.

இந்த சினிமாவில் மேலும் குறிப்பிட்டுச் சொல்ல சில விஷயங்கள் உண்டு. முக்கியமாக சாதிய வேறுபாட்டைக் குறிப்பிட எழுதப்பட்டிருக்கும் காட்சிகள். பட்டியல் சாதி குழந்தைகளுக்கும், மற்ற சாதி குழந்தைகளுக்குமான வேறுபாட்டைக் காட்ட இயக்குநர் கண்டறிந்திருக்கும் ஐடியா நெருடல். பட்டியல் சாதிப் பிள்ளைகள் அழுக்கு உடையுடன், மூக்கு ஒழுக, சேற்றில் விளையாடிக் கொண்டிருப்பதகவும், மற்ற சாதியினரும் அவர்களது பிள்ளைகளும் தூய்மையின் அடையாளமாகவும் இருப்பதாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இது சரியான அணுகுமுறை அல்ல.

நல்ல சிறப்பான ட்ரைலர், போஸ்டர் டிசைன் மூலம் எதிர்பார்ப்பை எகிறவைத்த 'ஸ்கேட்டர் கேர்ள்' எனும் இந்த சினிமா மேட்டிமைத்தன சிந்தனையின் கருணை வழங்கும் மனநிலையில் நின்று எடுக்கப்பட்டிருக்கிறது. ஸ்கேட்டர் கேர்ள் சறுக்கல்.

- சத்யா சுப்ரமணி

முந்தைய ஓடிடி திரைப் பார்வை: 'டூ டிஸ்டன்ட் ஸ்ட்ரேஞ்சர்ஸ்'- ஜார்ஜ் பிளாய்டின் மரணமும் அதிர்வுகளும்!

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்