Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

"இதுதான் விடியலா..?" டாஸ்மாக் கடைகள் திறக்க தமிழக பாஜக எதிர்ப்பு

டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டதற்கு தமிழக பாஜக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
 
தமிழ்நாட்டில் கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஒருவாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மூன்று வாரங்களாக டாஸ்மாக் பூட்டப்பட்ட நிலையில், திங்கட்கிழமை முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட இருக்கிறது.
 
டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டதற்கு தமிழக பாஜக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், பாஜக தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன் தனது ட்விட்டர் பதிவில், ''ஒவ்வொரு நாளும் நோய் தொற்று ஆயிரக்கணக்கில், இறப்பு நூற்றுக்கணக்கில் இருக்கும்போது டாஸ்மாக் திறப்பு அவசியமா? ஒரு வருடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் போட்ட வேஷம் மாறியதோ? ஒலித்த கோஷம் மறந்ததோ? இதுதான் விடியலா?'' எனப் பதிவிட்டுள்ளார்.
பாஜக மாநில துணை தலைவர் அண்ணாமலை, கடந்த ஆட்சியில் டாஸ்மாக் திறந்த போது திமுக நடத்திய போராட்டத்தின் புகைப்படங்களை பதிவிட்டு. ''எதிர்க்கட்சியாக, டாஸ்மாக்கிற்கு எதிராக அறிவாலயம் கொடுத்த வாக்குறுதிகளும், நடத்திய நாடகங்களும், இன்று அடிக்கும் அந்தர் பல்டிகளும் தெளிவாகியுள்ளன'' எனக் குறிப்பிட்டுள்ளார்.
 
image
முன்னதாக பாஜக மாநில தலைவர் எல்.முருகனும் டாஸ்மாக் திறக்க எதிர்ப்பு தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஆண்டு நோய்த்தொற்றின்போது டாஸ்மாக் கடைகளை மூடவேண்டும் என திமுக போராடிவிட்டு இப்போது டாஸ்மாக் கடைகளை திறக்க முயல்வது என்ன நியாயம்? என கேள்வி எழுப்பி உள்ளார். சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் சொல்லிய வண்ணம் செயல் என்ற திருக்குறளை சுட்டிக்காட்டி விமர்சித்துள்ள எல்.முருகன், மதுக்கடைகள் திறப்பதை பெண்கள் எதிர்ப்பதை தமிழக முதல்வர் உணரவேண்டும் என்றும் அவர் கூறி உள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்