Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

இந்தியாவில் ஆண்களை விட பெண்களுக்கு குறைவாகவே தடுப்பூசி போடப்பட்டுள்ளது: ஒரு தரவு அலசல்

இந்தியாவில் கொரோனா தடுப்பூசிகள் போடப்படும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தாலும், ஆண்களுடன் ஒப்பிடும்போது பெண்களுக்கு மிக குறைவான எண்ணிக்கையிலேயே தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது புள்ளிவிபரங்களின் வாயிலாக தெரியவந்துள்ளது.

கொரோனாவிற்கு எதிராக மனிதர்களிடம் இருக்கும் ஒரே ஆயுதமான தடுப்பூசியை முழுமையாக பயன்படுத்த ஒவ்வொரு நாடும் முனைப்பு காட்டி வருவது போலவே இந்தியாவும் அதிக முயற்சிகளை செய்து வருகிறது.

இந்தியாவில் இதுவரை 21 கோடிக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு இருப்பதாக மத்திய அரசு புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது. ஆனால் இதில் பல மாநிலங்களில் ஆண்களை விட பெண்களுக்கு குறைவான எண்ணிக்கையிலேயே தடுப்பூசிகள் செலுதப்பட்டிருக்கிறது தெரியவந்துள்ளது.

image

ஜூன் இரண்டாம் தேதி வரை நாட்டில் மொத்தமாக தடுப்பூசி எடுத்துக் கொண்ட ஆண்களின் எண்ணிக்கை 9,13,81,749 அதேவேளையில் தடுப்பூசி எடுத்துக் கொண்ட பெண்களின் எண்ணிக்கை 7,92,31,870. அதாவது மொத்தமாக தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களின் 53 சதவிகிதம் பேர் ஆண்களாகவும் 46 % பேர் பெண்களாக இருக்கின்றனர். இது குறைந்தபட்சம் ஒரு தவணை தடுப்பூசியை செலுத்தி கொண்டவர்களின கணக்கீடு படி எடுக்கப்பட்ட புள்ளி விவரம் என்பது கவனிக்கப்பட வேண்டியது.

இதே ஆய்வின் மற்றொரு கணக்கீட்டின் படி இந்தியாவில் 1000 ஆண்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டிருக்கிறது என்றால், அவர்களில் வெறும் 867 பெண்களுக்கு மட்டுமே தடுப்பூசிகள் செலுதப்பட்டிருக்கிறது. 2015 நிதி ஆயோக்கின் கணக்கீட்டின்படி இந்தியாவில் 1000 ஆண்களுக்கு 900 பெண்கள் உள்ளனர். அப்படி பார்த்தாலும் கூட தடுப்பூசி செலுத்தக் கூடிய அளவில் சமநிலை குறைவாக இருப்பதை பார்க்க முடிகின்றது.

குறிப்பாக டெல்லி, உத்தரப் பிரதேசம், பஞ்சாப், ஜம்மு காஷ்மீர், நாகாலாந்து உள்ளிட்ட மாநிலங்களில் ஆண்களை ஒப்பிடும்போது மிகக் குறைவான எண்ணிக்கையில்தான் பெண்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் ஆயிரம் ஆண்டுகளில் வெறும் 725 பெண்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஆயிரம் ஆண்களில் வெறும் 709 பேருக்கு மட்டும்தான் தடுப்பூசி போடப்பட்டு உள்ள நிலையில் உத்தர பிரதேசத்தில் 1000 ஆண்டுகளில் 769 பெண்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

image

கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு, உத்தராகண்ட், கோவா உள்ளிட்ட மாநிலங்கள் கிட்டத்தட்ட ஆண்கள் பெண்கள் என சமமாக தடுப்பூசிகளை வழங்கி வருகிறது. ஆனாலும் அவை மேம்படுத்தப்பட வேண்டிய நிலையில் உள்ளது.

இவை ஒருபுறம் இருக்க சட்டீஸ்கர், ஹிமாச்சல் பிரதேசம், கேரளா ஆகிய 3 மாநிலங்களில் ஆண்களைவிட பெண்களுக்கு அதிக அளவில் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் கேரளாவில் 1000 ஆண்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு இருக்கிறது என்றால் சராசரியாக 1,125 பெண்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தை பொறுத்தவரை 1000 ஆண்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு இருக்கிறது என்றால் 1045 பெண்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது ஹிமாச்சல் பிரதேசத்தில் ஆயிரம் ஆணுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு இருக்கிறது என்றால் அதில் 1003 பெண்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு உள்ளது.

image

சமீபத்தில் பாலூட்டும் தாய்மார்கள் கூட தடுப்பூசி எடுத்துக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவுரை வழங்கி இருந்தது. இருப்பினும் விழிப்புணர்வு இல்லாமை, குடும்ப சூழல், தேவையற்ற வதந்திகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பெண்களுக்கு தடுப்பூசி வழங்குவதில் இத்தகைய குழப்பங்கள் இருக்கலாம் என சொல்லும் பெண்கள் நல ஆர்வலர்கள், பெண்களுக்கும் அதிக அளவில் தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என்றும் இந்த விஷயத்தில் சமநிலை இருந்தால்தான் கொரோனாவிற்கு எதிரான போரின் வெற்றி பெறுவது சாத்தியம் எனவும் கூறுகின்றனர்.

- நிரஞ்சன் குமார்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்