வில்வித்தைப் போட்டிக்கான உலக தரவரிசையில் இந்திய வீராங்கனை தீபிகா குமாரி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.
உலகக் கோப்பை வில்வித்தை போட்டி பாரீஸ் நகரில் நடந்து வந்தது. கடைசி நாளான நேற்று நடந்த பெண்களுக்கான ரீகர்வ் அணிகள் பிரிவின் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் தீபிகா குமாரி, அங்கிதா பகத், கோமாலிகா பாரி ஆகியோர் அடங்கிய இந்திய அணி 5-1 என்ற செட் கணக்கில் மெக்சிகோவை தோற்கடித்து தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றது.
கலப்புப் பிரிவில் இந்தியாவின் நட்சத்திர தம்பதியான அதானு தாஸ்- தீபிகா குமாரி ஆகியோர் 5-3 என்ற கணக்கில், நெதர்லாந்தின் செப் வான் டென் பெர்க்-கேப்ரியலா கூட்டணியை வீழ்த்தி தங்கப் பதக்கத்தை வசப்படுத்தினர். தொடர்ந்து பெண்களுக்கான ஒற்றையர் ரீகர்வ் பிரிவிலும் ரஷியாவின் எலினா ஒசிபோவாவை வீழ்த்தி தங்கப் பதக்கத்தை தனதாக்கினார்.
ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த தீபிகா குமாரி ஒரே நாளில் 3 தங்கப் பதக்கத்தை சொந்தமாக்கி கவனத்தை ஈர்த்துள்ளார். இதன் மூலம் தீபிகா குமாரி ஒட்டுமொத்த உலக தரவரிசை பட்டியலில் கிடுகிடுவென புள்ளிகள் உயர்வை சந்தித்து முதலிடத்துக்கு முன்னேறினார். ரஷ்ய வீராங்கனை எலெனா ஓசிபோவா, அமெரிக்க வீராங்கனை மெக்கன்சி பிரவுன் ஆகியோரை பின்னுக்கு தள்ளி முதல் முறையாக முதல் இடத்துக்கு முன்னேறியிருக்கிறார் தீபிகா குமாரி.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்