Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

ஆஷ்வின் 'ஆல் டைம் பெஸ்ட்' சுழற்பந்துவீச்சாளர் இல்லை! - சஞ்சய் மஞ்சரேக்கரின் வாதம் சரியா?

இந்திய கிரிக்கெட் அணியின் வரலாற்றை உற்று நோக்கினால் அதில் வேகப்பந்துவீச்சாளர்களை விட சுழற்பந்துவீச்சாளர்களே பெரும் ஆதிக்கத்தை செலுத்தி இருப்பார்கள். ஆம், இந்தியா வரலாற்றில் தலைசிறந்த ஸ்பின்னர்களை கிரிக்கெட் உலகிற்கு வழங்கி இருக்கிறது. அதில் வெங்கட்ராகவன், பிரசன்னா, பிஷன் சிங் பேடி, அனில் கும்பளே, ஹர்பஜன் சிங் என மிக நீண்ட பட்டியலும் வரலாறும் கிரிக்கெட் உலகில் இந்தியர்களுக்கு எப்போதும் உண்டு.

இந்திய கிரிக்கெட் அணிக்கு மட்டுமல்லாமல் உலகளவில் தலைசிறந்த சுழற்பந்துவீச்சாளராக கடந்த 10 ஆண்டாக திகழ்ந்து வருகிறார் தமிழ்நாட்டைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அஷ்வின். அண்மையில் ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் இயான் சாப்பல் கூட "ஆஸி.யின் நாதன் லயானை விட அஷ்வின்தான் சிறந்த சுழற்பந்துவீச்சாளர்" என புகழாரம் சூட்டினார். அது நிஜம்தான் என அவருடைய டெஸ்ட் ரெக்கார்டுகள் சொல்கிறது. அஷ்வின் இதுவரை 78 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 409 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

image

சந்தேகமே இல்லாமல் உலகின் பெஸ்ட் ஸ்பின்னர் அஷ்வின்தான் என பலரும் கூறி வரும் நிலையில், அதில் சேற்றை வாரி வீசும் வகையில் பேசியிருக்கிறார் இந்திய முன்னாள் பேட்ஸ்மேனும் வர்ணனையாருமான சஞ்ஜய் மஞ்சரேக்கர். இது குறித்து கூறும்போது, அவர் "எல்லா காலத்திலும் சிறந்த வீரர்' என மக்கள் அவரைக் கூறுவதை ஏற்றுக்கொள்ள மாட்டேன். அஷ்வினிடம் உள்ள பிரச்னை என்னவென்றால் SENA என கூறப்படும் தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய நாடுகளில் உள்ள மைதானங்கள் பேட்ஸ்மேன் மற்றும் பந்துவீச்சாளர்களுக்கு உகந்ததாகும்.

ஆனால் இந்த நாடுகளில் அஷ்வின் ஒரு முறை 5 விக்கெட் வீழ்த்தியதில்லை. கடந்த நான்கு ஆண்டுகளாக அவர் இந்திய ஆடுகளங்களில் மட்டுமே அதிகமான விக்கெட்டுகளை கைப்பற்றுகிறார். இந்திய ஆடுகளங்கள் அவருடைய சுழலுக்கு ஏற்றார்போல் இருப்பதால்தான் அவரால் இங்கு விக்கெட் வீழ்த்த முடிகிறது. அஷ்வினை போலவேதான் ரவீந்திர ஜடேஜாவும் இந்திய ஆடுகளங்களில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தும் திறமை கொண்டவர். அதனால் அஷ்வினை ஆல் டைம் சிறந்த பவுலர் என ஏற்க முடியாது" என்கிறார் சஞ்சய் மஞ்சரேக்கர்.

image

அதாவது வெளிநாடுகளில் அதிகளவில் அஷ்வின் வீழ்த்தவில்லை என்பது மஞ்சரேக்கரின் குற்றச்சாட்டாக இருக்கிறது. அஷ்வினின் ரெக்கார்டுகளை எடுத்தப் பார்த்தால் அவர் உள்நாட்டில் 47 டெஸ்ட் போட்டியில் 286 விக்கெட்டுகளும், வெளிநாடுகளில் 31 போட்டிகளில் 123 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார். மஞ்சரேக்கர் சொல்வது போல வெளிநாடுகளில் அஷ்வின் குறைவான விக்கெட்டுகளை வீழ்த்தியிருப்பது தெரிந்ததுதான். அதற்கு உபயோகப்படுத்தும் பந்து முதல் ஆடுகளம் வரை பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. அதனால் அஷ்வின் சிறந்த பவுலர் இல்லை என்று ஆகிவிடாது.

அப்போது அனில் கும்பளேவும் தலைச் சிறந்த பவுலர் இல்லையென கூறிவிடுவாரா மஞ்சரேக்கர்? கும்பளே 132 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 619 விக்கெட்டுகளை எடுத்தவர். பெரும் சாதனைகளுக்கு சொந்தக்காரர். அத்தனை புகழ்வாய்ந்த சுழற்பந்துவீச்சாளரான கும்பளே உள்நாட்டில் 63 போட்டிகளில் 350 விக்கெட்டும், வெளிநாடுகளில் 69 போட்டிகளில் 269 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்துள்ளார். அதனால் உலகின் ஆல் டைம் பெஸ் பவுலர் இல்லையா ? உலகின் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளராக இப்போதும் முன்னிலையில் இருக்கும் முரளிதரனும், ஷேன் வார்னேவின் ரெக்கார்டும் இதைத்தான் சொல்லும்.

image

பேட்ஸ்மேன்களுக்கும் இதே நிலைதான். சச்சின், ரிக்கி பாண்டிங், லாரா, ராகுல் டிராவிட்... ஏன் இப்போதிருக்கும் கோலி, வில்லியம்சன், பாபர் அசாம் என பல முன்னணி பேட்ஸ்மேகள் கூட உள்நாட்டில் அதிக ரன்களும் வெளிநாடுகளில் குறைவான ரன்களும் குவித்திருப்பார்கள். அதற்கான காரணம் என்ன என்பது சஞ்சய் மஞ்சரேக்கருக்கே தெரியும். ஏனென்றால் அவர் முன்னாள் பேட்ஸ்மேன் மட்டுமல்லாமல் கிரிக்கெட் விமர்சகரும் கூட. சர்ச்சையையும் சஞ்சயும் பிரித்து பார்க்க முடியாது. ஏனென்றால் அவர் பல முறை ஜடோஜாவை வம்புக்கு இழுத்து இருக்கிறார். அவராலேயே இப்போது ஜடேஜா மிகப் பெரிய வீரராக உருவெடுத்துகிறார்.

ஐபிஎல் போட்டிகளின்போது மும்பைக்கு ஆதரவாகவே வர்ணனை செய்வது, மற்றொரு வர்ணனையாளர் ஹர்ஷா போக்லேவை தரக்குறைவாக பேசியது என பல காரணங்களுக்காக சஞ்சய் மஞ்சரேக்கரை வர்ணனையாளர் குழுவில் இருந்து நீக்கியது பிசிசிஐ. கடந்த ஆண்டு தன்னை மீண்டும் குழுவில் சேர்க்கும்படி கங்குலியிடம் கெஞ்சிப் பார்த்தும் வாய்ப்பில்லை என்பதால் விரக்தியின் உச்சத்திலேயே இருக்கிறார் மஞ்சரேக்கர். எப்போதும் ரெக்கார்டுகள் பற்றியே பேசாதீர்கள் மஞ்சரேக்கர், உங்களுடைய ரெக்கார்டை தேடிப் பார்த்தால் உங்களுக்கு வேதனையே மிஞ்சும் என்கிறார்கள் கிரிக்கெட் ரசிகர்கள்.

- ஆர்.ஜி.ஜெகதீஷ

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்