கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளும் முன்னும் பின்னும், செய்யவேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவையாக மருத்துவர்கள் பரிந்துரைக்கும் சில தகவல்களை இங்கே தெரிந்துக்கொள்ளலாம்.
கோவிட் 19 தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டுமென நினைப்பவர்கள், முதலில் உங்களுக்கான முன்பதிவை கோவின் இணையம் மூலமாக செய்துக்கொள்ளுங்கள். மொபைலில், ஆரோக்கிய சேது செயலி இருந்தால், அதுவழியாகக்கூட முன்பதிவை செய்துகொள்ளலாம். தடுப்பூசி போட செல்லும்முன், ஒருமுறை உங்கள் குடும்ப மருத்துவ அறிவுரையையும் பெற்றுக்கொள்வது நல்லது.
தடுப்பூசிக்கு முன் செய்யவேண்டியவை, கூடாதவை:
- வெறும் வயிற்றுடன் தடுப்பூசி எடுக்காதீர்கள். ஆரோக்கியமான உணவுகள், பச்சை நிற காய்கறிகள், ஆன்டிஆக்சிடண்ட்ஸ் அதிகமிருக்கும் உணவுகள் போன்றவற்றை சாப்பிட்டுவிட்டு, தடுப்பூசி செலுத்திக் கொள்ளுங்கள்.
- நிறைய தண்ணீர் குடிக்கவும்.
- வேறு ஏதேனும் பாதிப்புக்காக, வலி நிவாரணி எடுப்பவர்கள், தடுப்பூசி செலுத்துவதற்கு முன்னும் பின்னும் அவற்றை மருத்துவர் அறிவுரையுடன் தவிர்ப்பது நல்லது.
- முந்தைய நாள் இரவு, நல்ல உறக்கம் கட்டாயம்.
- மது அருந்திவிட்டு தடுப்பூசி செலுத்தும்போது, உடலில் நீர்வறட்சி ஏற்படலாம். ஆகவே அதை தவிர்ப்பது நல்லது.
- தடுப்பூசி செலுத்திக் கொண்ட பிறகு, ஓய்வு கட்டாயம். ஆகவே பணியிடத்தில், வேலைப்பளுவை குறைக்கும்படி சூழல் ஏற்படுத்திக் கொள்வது நல்லது.
- கொரோனாவுக்கான அறிகுறிகளான இருமல் – காய்ச்சல் போன்றவை தெரியவந்தால், அவை சரியாகும்வரை தடுப்பூசி போட்டுக்கொள்வதை தற்காலிகமாக நிறுத்திவைக்கவும்.
தடுப்பூசிக்குப் பின் செய்யவேண்டியவை, கூடாதவை:
- தடுப்பூசி மையத்தில், 15 முதல் 30 நிமிடங்கள் வரை காத்திருக்கவும். ஏதேனும் உடல் அசௌகரியம் ஏற்பட்டால், உடனடியாக அங்கிருக்கும் மருத்துவப் பணியாளரிடம் தெரியப்படுத்தி ஆலோசனை பெறவும்.
- உடலில் நீர் வறட்சி ஏற்படாமல் இருக்கும்படி, நீராகரம் நிறைய எடுத்துக்கொள்ளவும்.
- மது அருந்துதல், புகைப்பிடித்தலை தவிர்க்கவும்.
- தடுப்பூசி போட்டபின், 2 – 3 நாள்களுக்கு, உடல் வலி – லேசான காய்ச்சல் – தலைவலி – உடல் சோர்வு – தசைப்பிடிப்பு போன்றவை ஏற்படக்கூடும். அவற்றை எதிர்கொள்ள தயாராக இருங்கள். இப்படியான சூழலில் என்ன செய்யவேண்டும் என்பதை தடுப்பூசி செலுத்திய இடத்திலேயே கேட்டு தெரிந்துக்கொண்டு, செயல்படவும். தேவைப்பட்டால், அங்கேயே மருந்து மாத்திரைகள் வாங்கி வந்து, சூழலை கடக்கவும்.
- மூன்று நாள்களுக்கும் மேல் பக்கவிளைவுகள் தொடர்ந்தால், மருத்துவ ஆலோசனை கட்டாயம். சுய மருத்துவம் கூடாது.
- தடுப்பூசியில், இரண்டு டோஸ்ஸையும் எடுத்துக் கொண்டவர்களுக்கும்கூட, சில நேரங்களில் கொரோனா தொற்று ஏற்படலாம். இந்த தடுப்பூசி, தொற்றின் வீரியத்தை குறைப்பவைதான். ஆகையால், தடுப்பூசி போட்டாலும், மாஸ்க் அணிவது – சுயசுகாதாரத்தோடு இருப்பது – சமூக இடைவெளியை கடைபிடிப்பதை போன்றவற்றை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
- நோய் எதிர்ப்பு திறனை குறைக்கும் சக்திக்கொண்ட மருந்துகளை வேறேதேனும் பாதிப்புக்காக உட்கொள்பவர்கள், மருத்துவரிடம் அனுமதி பெற்றுக்கொண்ட பிறகே தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். ஒருவேளை அம்மருந்துகளை இடையில் நிறுத்திக்கொள்ள வேண்டுமென்ற சூழல் கூட ஏற்படலாம். ஆகவே, மருத்துவ ஆலோசனை கட்டாயம்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்