Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

"அப்பா என்பது ஒரு அதிசய புத்தகம்" - தந்தையர் தின சிறப்பு பகிர்வு

1882-ஆம் ஆண்டு அமெரிக்க ராணுவ வீரரான வில்லியம் ஜாக்சன் ஸ்மார்ட் மற்றும் ஹெலன் தம்பதியினருக்கு மகளாகப் பிறந்தவர் சோனோரா ஸ்மார்ட் டாட். சோனோராவின் 16 வது வயதில் தனது தாய் அவரின் 6-வது பிரசவத்திற்குச் செல்லும்போது அவரைப் பிரிய நேரிட்டது. அன்று முதல் மறுமணம் செய்து கொள்ளாமல் தனது 6 பிள்ளைகளுக்கும் தாயும், தந்தையுமாக இருந்து காத்து வந்தவர் வில்லியம். தன் தந்தையின் அர்ப்பணிப்பு உணர்வால் பெரிதும் கவரப்பட்டார் சோனோரா.

1900 களில் சர்வதேச அன்னையர் தினமானது கொண்டாட அனுமதியளிக்கப்பட்டதைத் தொடர்ந்து தன் தந்தையின் தியாகமானது ஒரு தாயின் தியாகத்திற்கு எந்த விதத்திலும் குறைந்ததல்ல என வாதித்து, தன் தந்தையின் பிறந்த நாளினை தந்தையர் தினமாகக் கொண்டாட வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தார் சோனோரா. பல போராட்டங்களுக்குப் பிறகு சோனோராவின் பெரும் முயற்சியால் 1972 ஆம் ஆண்டு தந்தையர் தினம் அங்கீகரிக்கப்பட்டது. அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 3-வது ஞாயிற்றுக்கிழமை தந்தையர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அன்று சோனோரா எடுத்த முயற்சி இன்று நம் கனவுகளுக்கு உருவம் கொடுத்த தந்தையர்களை நினைவு கூற ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தித் தந்துள்ளது.

அதன்படி இந்த ஆண்டு ஜூன் மாதம் 20 ஆம் தேதி தந்தையர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. உயிர் கொடுத்தவர் அன்னை என்றால் உலகை அறிமுகப்படுத்தியவர் தந்தை. குடும்பம் என்ற சிலையை உருவாக்கத் தன்னையே சிற்பியாக மாற்றிக் கொள்பவர்கள் தந்தையர்கள்.ஒரு குடும்பத்தை எடுத்துக் கொண்டால் தாயுடன் ஒப்பிடுகையில் தந்தைக்கு அந்த வீட்டில் வழங்கப்படும் அந்தஸ்து சற்று குறைவே எனலாம். முதியோர் இல்லங்களில் கூட பெண்களை விட ஆண்களின் சதவிகிதமே அதிகமாகக் காணப்படுகிறது. காரணம், தாயின் பாசத்தினை அறிந்த நாம் தந்தையின் பாசத்தை அறியாமல் போனது தான். எத்தனையோ இன்னல்கள் பட்டாலும்,அதனை வெளிக்காட்டாமல் அனைத்தையும் தன் தோள்களில் சுமந்து ராத்தூக்கம், பகல் தூக்கமுமின்றி பிள்ளைகளை வளர்த்து ஆளாக்குபவர்கள் தந்தையர்கள்.

தாய் நம்மை பத்து மாதம் கருவில் சுமந்து பெற்றால் என்றால் நம்மையும், நம் தாயையும் இறுதிவரை தம் தோள்களில் சுமப்பவர்கள் தந்தையர்கள். ஒரு குடும்பத்தைக் கட்டி எழுப்புவதோடு மட்டுமின்றி பொருளாதாரம்,கல்வி,வாழ்க்கைத்தரம் என அனைத்தையும் பெற்றுத்தந்து பாதுகாப்பதும் தந்தையே.ஒரு குடும்பத்தில் தந்தை மட்டும் Breadwinner(தனது குடும்பத்தை ஆதரிக்கும் பணம் சம்பாதிக்கும் ஒருவராக)ஆக இருக்கும் பட்சத்தில் அவர்கள் படும் கஷ்டங்களையும், சுமைகளையும் நாம் புரிந்து கொள்ளுவது மிகவும் கடினம். இத்தோடு மட்டுமில்லாமல் கண்டிப்பானவர்,வளைந்து கொடுக்காதவர்,கர்வம் கொண்டவர் போன்ற பேர்களையும் நம்மால் அவர் சுமக்க வேண்டியிருக்கிறது.

சாதாரண நாட்களிலும் கூட தன் பிள்ளைகளோடு நேரம் செலவிட முடியாதவர்களாய் விளங்குபவர்கள் காவலர்கள், மருத்துவர்கள் போன்ற முக்கிய சேவையாற்றுபவர்கள்.அதிலும் இந்த கொள்ளை நோய்த் தொற்று கோவிட்19 ஏற்பட்ட பிறகு அவற்றைப் பற்றிச் சொல்ல வேண்டியதேயில்லை.
அப்பாவின் இந்த நிலையினை எடுத்துக்கூற வேண்டிய கடமை தாயிடமே உள்ளது. பிள்ளைகளுக்குப் புரிய வைக்க வேண்டும். இவை புரிந்து கொள்ளப்படாத நிலையிலேயே அப்பாவுக்கும்,பிள்ளைகளுக்கும் இடையே இடைவெளி தோன்றி விடுகின்றன.
ஒரு தாயானவள், தான் பார்த்து ரசித்த இவ்வுலகைத் தன் பிள்ளைகளும் பார்த்து ரசிக்க வேண்டும் என்று எண்ணுபவள்.ஆனால் தான் பார்த்து ரசிக்காததைக் கூட தன் குழந்தைகள் பார்க்க வேண்டும் என்று எண்ணி அவர்களைத் தன் தோள் மீது சுமப்பவரே தந்தை.

உன்னை எதிர்பார்த்துப் பெற்றெடுப்பாள் அன்னை,உன் எதிர்காலத்தைப் பெற்றுத் தருபவர் தந்தை. தந்தையர்களின் உலகம் தியாகங்களாலும், வியர்வையாலும் சூழப்பட்டது.அடுத்தவர்களின் ஆனந்தத்திற்காக தங்கள் ஆயுள் முழுவதும் அர்ப்பணித்தவர்களில் தந்தைகளுக்கு முக்கிய இடம் உண்டு.நாம் ஆசையாய் கேட்பவனவற்றை தன் ஆசையைத் துறந்து வாங்கித் தருபவர் தான் அப்பா.

இப்பேர்ப்பட்ட தந்தையர்களைப் பெருமைப்படுத்தும் ஒரு திருநாள் தான் "சர்வதேச தந்தையர் தினம்". எனவே அவரின் நீண்டநாள் ஆசையை நிறைவேற்றி வைப்பேன் என்று இந்நாளில் உறுதி எடுத்துக் கொள்வோம்.

"அப்பா என்பது ஒரு அதிசய புத்தகம்.
அது கிடைக்கும் வயதில் நம்மால் புரிந்து கொள்ள முடிவதில்லை.
புரிந்து கொள்ள நினைக்கும் போது அது கிடைப்பதில்லை."

உங்கள் தந்தை உங்கள் அருகில் இல்லை என்றால் அவரை இன்றைய தினம் நினைவு கூறுவதே உங்கள் தந்தைக்கு நீங்கள் அளிக்கும் விலைமதிப்பில்லா பரிசு.

மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்னோற்றான் சொல்எனும் சொல்.

என்ற வள்ளுவரின் வாக்கிற்கிணங்க,நாம் இனியாவது செயல்பட்டு நம் தந்தையின் முதிய காலத்தில் அவர் மனம் நோகாமல் அவரை நன்கு கவனித்துக் கொள்வோம். தாய் நம் உயிர் என்றால் தந்தை நமது உடல்.இவை இரண்டிலும் எது குறைந்தாலும் நமக்கு வாழ்வில்லை.

உலகெங்கும் வாழும் அனைத்து தந்தையர்களுக்கும் இனிய தந்தையர் தின நல் வாழ்த்துக்கள்.

- ஜெ.ஜெயசூர்யா, ராமநாதபுரம்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்