Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

கொரோனா தோற்றம் சர்ச்சை: வெளிவந்த `மெயில்' பரிமாற்றங்களால் மீண்டும் உஷ்ணத்தில் ட்ரம்ப்!

கொரோனா தோற்றம் குறித்த சர்ச்சை மீண்டும் அமெரிக்காவில் வெடிக்க ஆரம்பித்துள்ளது. இந்தமுறை பெரிய அளவுக்கு பேசப்படுவதற்கு முக்கியமான மெயில் பரிமாற்றங்கள் காரணமாக அமைந்துள்ளன.

கொரோனா வைரஸ் பிறப்பிடம் குறித்த சர்ச்சை, வைரஸின் வீரியத்தை விட மிக உக்கிரமாக விவாதிக்கப்பட்டு வருகிறது. உலக நாடுகள் அனைத்தும் இந்த கேள்வியை எழுப்பினாலும், அமெரிக்காவும், அதன் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பும் இந்த விவகாரத்தை விடாமல் நோண்டி வருகின்றனர். கொரோனா வைரஸ் சீனாவின் வுஹான் ஆய்வகத்தில் தான் உருவானது என முன்பு முதலே கூறி வருகிறார் ட்ரம்ப். இதனை மீண்டும் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

image

``வுஹான் ஆய்வகத்திலிருந்து சீனா வைரஸ் வந்தது எனக் கூறுவதே சரியானது. இப்போது எல்லோரும், எதிரி என்று அழைக்கப்படுபவர்களும் கூட, வுஹான் ஆய்வகத்திலிருந்து வரும் சீனா வைரஸ் குறித்து ட்ரம்ப் சொல்வது சரிதான் என்று சொல்லத் தொடங்கியுள்ளனர். வுஹான் ஆய்வக கசிவு மூலம் அவர்கள் ஏற்படுத்திய மரணம் மற்றும் அழிவுக்கு சீனாவுக்கு அபராதம் விதிக்க வேண்டும். சீனா அமெரிக்காவிற்கும் உலகிற்கும் 10 டிரில்லியன் டாலர் செலுத்த வேண்டும். இது கொரோனா வைரஸால் அவர்கள் ஏற்படுத்திய மரணம் மற்றும் அழிவுக்காக!" என்றுள்ளார்.

ட்ரம்ப் அதிபராக இருந்தபோது கொரோனா வைரஸ் பரவிய ஆரம்பத்தில் கொரோனா வைரஸை `சைனீஸ் வைரஸ்' என்று அழைத்தார். அப்போதே அதற்கு கடும் சர்ச்சை எழுந்தது. இந்தநிலையில் தான், அமெரிக்காவின் வெள்ளை மாளிகை ஆலோசகர் மருத்துவர் அந்தோணி ஃபாசிக்கும் சீனாவின் ஆய்வகத்திற்கு இடையே, கொரோனா காலகட்டத்தில் நடந்த 3,000 இ-மெயில் பரிமாற்றங்கள் தொடர்பாக அமெரிக்க ஊடங்களில் செய்திகள் வெளியாகி சில தினங்களாக பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. தகவல் சுதந்திரச் சட்டம் (FOIA) கோரிக்கைகள் மூலம் வாஷிங்டன் போஸ்ட், பஸ்பீட் நியூஸ் மற்றும் சி.என்.என் ஆகியவற்றால் 2020 ஜனவரி முதல் ஜூன் வரையிலான தேதிகளில் 3,000 க்கும் மேற்பட்ட பக்கங்கள் மின்னஞ்சல்கள் பரிமாற்றங்களாக நடந்ததாக தெரியவந்தது.

இந்த மின்னஞ்சல்கள் அமெரிக்காவில் கொரோனா பரவிய ஆரம்ப நாட்கள் பற்றி வெளிப்படுத்தின. மேலும், சீனாவின் வுஹானில் உள்ள ஒரு ஆய்வகத்திலிருந்து கொரோனா கசிந்திருக்கலாம் என்ற கோட்பாட்டை ஆரம்ப நாட்களில் டாக்டர் ஃபாசியும் அவரது சகாக்களும் கூறிவந்தனர். இந்த மெயில் பரிமாற்றத்தில் அதற்கான சான்றுகள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் சமீப காலங்களாக டாக்டர் ஃபாசி இந்தக் கசிவு கோட்பாட்டை கடுமையாக மறுத்து வருகிறார்.

image

இந்த விவாகரம் செய்திகளாக வந்த பின்பே, ட்ரம்ப் மீண்டும் இந்த விஷயத்தில் கவனம் செலுத்தியுள்ளார். அவர் பேசியுள்ளத்தில், ``டாக்டர் ஃபாசிக்கும் சீனாவுக்கும் இடையிலான கடித தொடர்பு யாரையும் புறக்கணிக்க முடியாத அளவுக்கு சத்தமாக பேசுகிறது. முதன்முதலில் நான் வுஹான் ஆய்வகத்தில் இருந்து தான் கொரோனா வைரஸ் வெளியே கசிந்தது என்று நான் கூறியபோது கடுமையாக எதிர்த்தனர். இதில் என்னை விமர்சித்தவர்கள் பலர். எனது சொந்த நாடான அமெரிக்காவிலும்கூட எனது கருத்தை எதிர்த்தனர். ஆனால் இப்போது பாருங்கள், நான் கூறிய கருத்து என்பது உண்மைதான் என நிருபிக்கும் வகையில் ஆதாரங்கள் வந்த வண்ணம் உள்ளன.

டாக்டர் ஃபாசிக்கும் சீனாவுக்கும் இடையேயான மெயில் பரிமாற்றங்களும் நான் சொன்னதை உறுதி செய்கின்றன. இப்போது வைரஸ் பரவலுக்கு சீனாதான் காரணம் என்பதை தற்போது அனைவரும் உணரத் தொடங்கி விட்டனர்" என்றுள்ளார். ட்ரம்ப்பின் வாதம் அமெரிக்காவில் கொரோனா தோற்றம் தொடர்பான விவாதத்தில் எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல் அமைந்துள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்