“இன்றைய குழந்தைகளே நாளைய தலைவர்கள்! எதிர்காலத்தில் சமூகத்தில் தலைவர்களாக தங்களை தகவமைத்துக் கொள்ள குழந்தைகளுக்கு கல்வி மிக முக்கியமான ஆயுதம்” என முன்னாள் தென் ஆப்பிரிக்க பிரதமர் நெல்சன் மண்டேலா சொல்லியுள்ளார். ஆனால் உலகில் வாழ்ந்து வரும் பெரும்பாலான குழந்தைகள் ஒவ்வொரு நாளும் பல்வேறு வகையிலான அடக்குமுறைக்கு ஆளாகி வருகின்றனர். அப்படி ஆக்கிரமிப்பால் பாதிக்கப்பட்ட அப்பாவி குழந்தைகளுக்கான சர்வதேச நாள் இன்று.
இந்த நாளின் நோக்கம்?
ஆக்கிரமிப்பு மற்றும் ஒடுக்குமுறையால் உடல், மனம் மற்றும் உணர்ச்சி ரீதியாக பாதிக்கப்பட்ட மற்றும் பாதிக்கப்பட்டு வரும் குழந்தைகள் இத்தகைய மோசமான பாதிப்புகளில் இருந்து அகற்றப்பட வேண்டும் என்பதே இந்த நாளின் நோக்கமாகும்.
குழந்தைகள் எப்படி ஆக்கிரமிப்புக்கு ஆளாகின்றனர்?
போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நாடுகளில் தான் ஆக்கிரமிப்பு மற்றும் ஒடுக்குமுறையால் பாதிக்கப்படும் குழந்தைகள் அதிகம் என சொல்லப்படுகிறது. அந்த மாதிரியான பகுதிகளின் இருக்கும் குழந்தைகளின் வாழ்வே பாதுகாப்பற்ற நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும். குழந்தைகளை கடத்துவது, கொலை செய்வது, பள்ளிகள் மீதான தாக்குதல், பாலியல் வனபுணர்வு, கட்டாய திருமணம், மனிதாபிமான உதவிகளை மறுப்பது என ஆக்கிரமிப்புகள் நீண்டு கொண்டே இருக்கின்றன. இது தவிர தனிமனித விருப்பு, வெறுப்புகளாலும் குழந்தைகள் அடக்குமுறைக்கு ஆளாவதுண்டு.
ஆப்பிரிக்க நாடுகளான காங்கோ, நைஜீரியா, சாஹேல், சூடான் மற்றும் சிரியா, ஏமன் மாதிரியான பகுதிகளிலும், மியான்மரிலும், இஸ்ரேல் - பாலஸ்தீனத்திலும் வசிக்கின்ற குழந்தைகள் அடக்குமுறைக்கு அதிகம் ஆளாகி வருகின்றனர்.
இஸ்ரேல் - பாலஸ்தீன்
“பூமியில் நரகம் என ஒன்றிருந்தால் அது காசாவில் உள்ள குழந்தைகளின் வாழ்க்கை தான்” என கடந்த மே மாதம் தெரிவித்திருந்தார் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ்.
பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் குண்டு மழை பொழிந்து வருகிறது. அந்த வன்முறையால் பாலஸ்தீனத்தை சேர்ந்த 200க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 66 பேர் குழந்தைகள் (கடந்த மே19 விவரத்தின் அடைப்படையில்). பதில் தாக்குதலில் இஸ்ரேல் நாட்டிலும் இரண்டு குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தெரிகிறது. சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல்களில் பள்ளிக்கூடங்கள் முழுதாகவும், பாதி அளவிலும் பாதிக்கப்பட்டுள்ளன. அதனால் சுமார் 72000 பேர் வேறு இடங்களுக்கு பாதுகாப்பு வேண்டி தஞ்சம் அடைந்துள்ளனர்.
நைஜீரியா
கடந்த டிசம்பர் மாதம் முதல் சுமார் 700கக்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள் நைஜீரியாவில் ஆயுதம் ஏந்திய கடத்தல்காரர்களால் கடத்திக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். பெரும்பாலும் பணத்திற்காக இந்த கடத்தல் நடைபெறுகிறது. இருப்பினும் அந்த நாட்டின் அரசு அதனை மறுத்து வருகிறது. இப்போது கூட அங்கு 200 பள்ளிக்குழந்தைகள் கடத்தில் செல்லப்பட்டுள்ளனர்.
“அண்மைய காலமாக உலகில் அடக்குமுறைக்கு ஆளாகி வரும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பதட்டமான மற்றும் மோதல் சூழல் நிலவும் பகுதிகளில் வசித்து வரும் 250 மில்லியனுக்கும் மேற்பட்ட குழந்தைகளை பாதுகாக்கும் விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டி உள்ளது. அதற்காக சர்வதேச மனித உரிமை மீறல் சட்டத்தின் மூலம் இந்த வலுவாக ஒடுக்க வேண்டி உள்ளது” என ஐ. நா தெரிவித்துள்ளது.
சமூகத்தை வரும் நாட்களில் கட்டமைக்கின்ற சிற்பிகள் இன்றைய குழந்தைகள் தான். இந்த மாதிரியான அடக்குமுறைகள் குழந்தைகளுக்கு எதிர்மறையான எண்ணங்களை உருவாக்கலாம். அதனால் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்துவது உலக நாடுகளின் தலையாய பணியாகும்.
- எல்லுச்சாமி கார்த்திக்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்