சகமனிதன் மீதான உங்கள் அபிப்ராயங்கள் எதுவாக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும். ஒருவனது இயலாமையை கிண்டல் செய்யும்போது உங்களது வக்கிரம்தான் பல்லைக் காட்டுகிறது. வெள்ளந்தியான மனிதர்களைக் கொண்டு உலகம் தொடர்ந்து தன்னை மறுசீரமைப்பு செய்து கொள்கிறது. சூழ்ச்சிகள் அறியாத மனிதர்களால் இந்த பூமி ரட்சிக்கப்படுகிறது. வாழ்க்கையினை அதன் போக்கில் காற்றில் பறக்கும் இறகு போல வாழ்ந்துவிட்டுப் போவது எத்தனை பெரிய வரம். இறகு போன்ற மனோநிலை வாய்க்கப் பெற்றவர்களுக்கே அந்த வரம் வசப்படும். அப்படியான வரத்தை வசப்படுத்திக் கொண்டு தன்நம்பிக்கையுடன் யாரையும் இம்சிக்காமல் வாழ்கிறவன் குறித்த சினிமாதான் ஃபாரஸ்ட் கம்ப் (Forrest Gump). தற்போது நெட்பிளிக்ஸில் காணக் கிடைக்கும் இந்த சினிமா 1994ல் வெளியானது.
பேருந்து நிறுத்த இருக்கையில் அமர்ந்திருக்கிறான் இளைஞன் ‘ஃபாரஸ்ட் கம்ப்’ வெள்ளை இறகொன்று காற்றில் மிதந்து வந்து அவனது காலடியில் விழுகிறது. தனது அருகில் வந்து அமரும் கருப்பின இளம்பெண்ணிடம் இளைஞன் ஃபாரஸ்ட் தனது அதுநாள் வரையிலான கதையை சொல்லத் துவங்குகிறான். அக்கதையில் ஜென்னியின் காதல் மிளிர்கிறது. அவனுக்கும் கதைகேட்கும் பெண்ணுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றாலும், அவன் தொடர்ந்து தனது சிறுவயது வாழ்கையிலிருந்து நடந்தவற்றை சொல்லத் துவங்குகிறான்.
ஒருவர் மாற்றி ஒருவராக அந்தப் பேருந்து நிறுத்த இருக்கையில் வந்து அமர்கிறார்கள் அவரவர் பேருந்து வந்ததும் ஏறிச் சென்றுவிடுகிறார்கள். ஆனால் ஃபாரஸ்ட் எந்த இடையூறுமின்றி அவர்களது பதிலை எதிர்பார்க்காமல், விட்ட இடத்திலிருந்து தனது கதையை அடுத்தடுத்தவர்களுக்கு சொல்லிக்கொண்டே இருக்கிறான். இப்படி தனக்கு விருப்பமான காரியங்களை மட்டும் செய்து எந்த பிரதிபலனும் எதிர்பாக்காமல் வாழ்பவன் தான் ஃபாரஸ்ட் கம்ப். படம் முழுவதும் ப்ளாஷ்பேக் காட்சிகளாக அவனது வாழ்கையை பேசுகிறது. ஆனால் இதை வெறும் பேசும் சித்திரமா நம்மால் கடந்து போய்விட முடியாது என்பதுதான் இப்படத்தின் அட்டகாச அம்சம்.
”லைப் இஸ் லைக் எ பாக்ஸ் ஆஃப் சாக்லேட்ஸ், யூ நெவர் நோ வாட் யூ ஆர் கோயிங் டு கெட் நெக்ஸ்ட்” - இது தான் ‘ஃபாரஸ்ட் கம்ப்’ன் தாய், வாழ்க்கை பற்றி அவனுக்கு சொல்லிக் கொடுத்த தித்திப்பான போதனை. வாய்ப்பு கிடைக்கும் இடங்களிலெல்லாம் அவன் இவ்வரிகளை உபயோகிக்கிறான்.
அறிவுத்திறன் அளவெண் குறைவாக உள்ள 6 வயது சிறுவன் ஃபாரஸ்ட். அவனுக்கு அப்பா கிடையாது. அம்மா அவனை எப்படியாவது வளர்த்து ஆளாக்க நினைக்கிறாள். அவனுக்கு சுயமாக அதிகம் சிந்திக்கத் தெரியாது, ஏதாவது சொன்னால் அதை செய்வான், அவ்வளவு தான். சரியாக நடக்க வராது. பள்ளிக்கு முதல் நாள் பேருந்தில் ஏறினால், இவனைப் பார்த்து யாருமே அருகில் அமர இடம் தரவில்லை, ஜென்னி மட்டுமே அவனுக்கு நெருங்கிய தோழியாகிறாள். அவள் கொடுக்கும் ஊக்கத்தில் அவனது கால்கள் கல்லூரி வரை ஓடுகிறது. இருவரின் நட்பும் தொடர்கிறது. ஜென்னியுடன் காமத்தை பகிர்ந்து கொள்ள சந்தர்ப்பம் கிடைக்கும் போது கூட ஃபாரஸ்ட் அதை தவிர்த்து விடுகிறான்.
கல்லூரியில் ரக்ஃபீ விளையாட்டுக் குழுவில் சேர்ந்து ஃபாரஸ்ட் விளையாடுகிறான். உண்மையில் அவனுக்கு அந்த விளையாட்டு பற்றியெல்லாம் பெரிதாக தெரியாது. ஆனால் ”பந்தை அடுத்த எல்லை வரை கொண்டு ஓடு” என்றால் ஓடுவான் அவனை தடுக்க முடியாது. பந்தை அடுத்த எல்லைக்கு கொண்டு செல்வதுதான் அந்த விளையட்டில் வெற்றி என்பதெல்லாம் அவனுக்கு புரியாது. அவனது அபார ஆட்டம் அவனை தேசியக் குழுவில் இணைக்கிறது. ராணுவத்தில் கூட இணைகிறான். வியட்னாம் போரில் கலந்து கொள்கிறான். எல்லாம் குருட்டு நம்பிக்கை என்பார்களே அப்படித்தான்.
ஒருநாள் ஒரு ராணுவ அதிகாரி ஃபாரஸ்ட்டின் ராணுவ சேவை இன்றோடு முடிந்தது என அறிவிக்கிறார். அவன் எந்த வருத்தமும் இல்லாமல் வீடு திரும்புகிறான். அவனது தாய் அவனைக் காண ஸ்பான்சர்கள் வந்ததாகவும் அதனால் அவனுக்கு 25000 டாலர்கள் கிடைக்கப் போவது பற்றியும் சொல்கிறாள். எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் கேட்டுக் கொள்கிறான்.
படம் முதல் காட்சியை நோக்கி நகர்கிறது. இதையெல்லாம் கேட்டுகொண்டிருந்த பெரியவர், அமெரிக்காவின் பெரிய மீன்தொழில் நிறுவனத்திற்கு ‘ஃபாரஸ்ட் கம்ப்’ தான் முதலாளி என்பதை நம்பாமல் சிரித்துவிட்டுப் போகிறார். அவன் இதையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. தனது புகைப்படம் ’ஃபார்ச்சூன்’ நாளிதழில் வந்திருப்பதை அடக்கத்துடன் காட்டுகிறான். மீண்டும் கதை சொல்லல் தொடர்கிறது...
பாலியல் தொழிலாளியாக வாழ்க்கையை வாழ்வது என தேர்வு செய்துகொண்ட ஜென்னி தனது 6 வயது மகனுடன் வாழ்கிறாள். சரி செய்ய முடியாத வியாதியினால் தவணை முறையில் உலகைவிட்டு விடைபெற்றுக் கொண்டிருக்கிறாள் அவள். அவளது மரணத்திற்கு முன் இருவரும் திருமணம் செய்து கொள்கிறார்கள். ஜென்னியும், ஃபாரஸ்ட்டும் மகிழ்ச்சியாக தங்கள் நினைவுகளை பகிர்ந்து கொள்கிறார்கள். ஜென்னியை மரணம் அழைத்துக் கொள்கிறது. ஜென்னியின் மகனை வளர்க்கும் பொறுப்பை ‘ஃபாரஸ்ட்’ ஏற்கிறான். அச்சிறுவனை பள்ளி செல்லும் பேருந்தில் ஏற்றிவிடுகிறான். மீண்டும் அந்த வெள்ளை இறகு காற்றில் மிதந்து வருகிறது.
ஆறு ஆஸ்கர் விருதுகளை அள்ளிய இத்திரைப்படம் ஓர் இதமான காட்சி அனுபவத்தை உங்களுக்கு கொடுக்கும். இப்படம் உங்களுக்கு உங்களை மறு அறிமுகம் செய்து வைக்கும். உங்கள் கண்ணாடியில் உங்கள் முகமே தோன்றும். அத்தனை அற்புத மாயங்கள் செய்யும் இந்த தன்நம்பிக்கை சித்திரத்தை நாவலாக எழுதியவர் ’வின்ஸ்டன் க்ரூம்’. இயக்குனர் ராபர்ட் ஸுமெக்கீஸ் அவ்வெழுத்துகளை காட்சி மொழியாக்கினார். இப்படத்தின் சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கர் விருது ராபர்ட்டுக்கு கிடைத்தது., இவர் இயக்கிய அனிமேஷன் படமான ‘தி போலார் எக்ஸ்ப்ரஸ்’ இப்போதும் குழந்தைகளில் கனவில் ’கூ…குச்…குச்’ என குதூகலமாக பயணிக்கிறது.
'பஞ்சு மூடையை சுமந்து கொண்டு நீங்கள் நதியைக் கடக்கின்றீர்கள். எதையோ துரத்தித் துரத்தி தோற்றுப் போவதன் மூலம் எளிமையாக எடையற்று வாழ வேண்டிய உங்கள் வாழ்க்கையின் மீது பாரம் ஏற்றிக் கொள்கிறீர்கள். உங்கள் அச்சு முறிந்து வலியில் துடித்துப் போகிறீர்கள். உண்மையில் வாழ்க்கை என்பது சாகசங்கள் நிறைந்த சர்க்கஸ் அல்ல. வாழ்தல் என்பதொரு ஒரு எளிய கடமை அவ்வளவு தான். குழந்தை மனம் கொண்ட மகத்தான மனிதன் ஃபாரஸ்ட் கம்ப் நமக்கு சொல்லும் செய்தியும் அது தான். ”லைப் இஸ் லைக் எ பாக்ஸ் ஆஃப் சாக்லேட், யூ நெவர் நோ வாட் யூ ஆர் கோயிங் டு கெட் நெக்ஸ்ட்.”
- சத்யா சுப்ரமணி
முந்தைய ஓடிடி திரைப் பார்வை: உலகை நோக்கி காஸா குழந்தைகள் எழுப்பும் வலிமிகு கேள்வி - ’Born In Gaza’
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்