உலக டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் உச்சத்தில் இருக்கும் இரு அணிகளான நியூசிலாந்து - இந்தியா, ஐசிசி முதல் முறையாக நடத்தும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் களம் காண்கிறது. இங்கிலாந்தின், சவுத்தாம்படன் நகரில் இருக்கும் ரோஸ் பவுல் கிரிக்கெட் மைதானத்தில் ஜூன் 18 முதல் 22 ஆம் தேதி வரை இந்த இறுதிப் போட்டி நடைபெறுகிறது. ஒரு கிரிக்கெட் வீரரின் உண்மையான திறமையை அறிய வேண்டுமென்றால் அவர் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாட வேண்டும் என கூறப்படுவதுண்டு. அதனால் திறமையின் அடிப்படையில்தான் இந்த இறுதிப் போட்டியில் நியூசிலாந்து - இந்திய கிரிக்கெட் அணிகள் மோதுகிறது.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியை அதன் சொந்த மண்ணிலும், இங்கிலாந்து அணியை உள்ளூரிலும் வீழ்த்திய உற்சாகத்துடன் களமிறங்குகிறது விராட் கோலி தலைமையிலான இந்திய அணி. அதேவேளையில் இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில் வீழ்த்திய கெத்துடன் டெஸ்ட் இறுதிப் போட்டியை எதிர்கொள்கிறது நியூசிலாந்து அணி. இந்திய கிரிக்கெட் அணி சொந்த நாட்டில்தான் புலி, வெளிநாடுகளில் எலி என்ற விமர்சனத்தை கடந்த சில ஆண்டுகளாகவே பொய்யாக்கி வருகிறது இந்திய அணி. அதனால் சவுத்தாம்டனில் நடைபெறும் இறுதிப் போட்டி பரபரப்புக்கு பஞ்சமிருக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா - நியூசிலாந்து டெஸ்ட் வரலாறு...!
1955 ஆம் ஆண்டு முதல் இருந்தே இரு அணிகளும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதுவரை இரு அணிகளும் 59 டெஸ்ட் போட்டிகளில் மோதியுள்ளன. இதில் இந்திய அணி 21 போட்டிகளிலும், நியூசிலாந்து அணிவ 12 போட்டிகளும், 26 போட்டிகள் டிராவிலும் முடிவடைந்துள்ளது. இதில் இந்தியாவில் நடைபெற்றுள்ள 34 டெஸ்ட் போட்டிகளில் நியூசிலாந்து அணி 2-இல் மட்டுமே வெற்றிப் பெற்றுள்ளது, ஆனால் இந்தியா 16 போட்டிகளில் வெற்றிப் பெற்று பலம் வாய்ந்த அணியாக இருக்கிறது. அதேபோல நியூசிலாந்தில் நடைபெற்றுள்ள 25 டெஸ்ட்டில் இந்தியா 5-ல் மட்டுமே வெற்றிப் பெற்றுள்ளது. நியூசிலாந்து 10-ல் வெற்றிப் பெற்று வலுவாக இருக்கிறது.
ஆனால் தோனி தலைமையிலான இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி 2009-ல் நியூசிலாந்தை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி தொடரை கைப்பற்றியிருக்கிறது. இதுவரை அந்நாட்டுக்கு எதிராக ராகுல் டிராவிட் அதிக ரன்களை குவித்துள்ளார். இப்போதுள்ள அணியில் விராட் கோலி முதலிடத்தில் இருக்கிறார். அதேபோல நியூிசலாந்தை பொறுத்தவரை பிளெண்டன் மெக்கலம் இந்தியாவுக்கு எதிராக அதிக ரன்களை சேர்த்துள்ளார். இரு அணியிலும் இப்போதுள்ள வீரர்கள் யாரும் பெரியளவில் ரன்களை சேர்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பவுலிங்கில் நியூசிலாந்தின் சர் ரிச்சர்ட் ஹாட்லி இந்தியாவுக்கு எதிராக 65 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். அதேபோல் இந்திய தரப்பில் பிஷன் சிங் பேடி 57 விக்கெட்டுகளும், அணில் கும்பளே 50 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர். இப்போதுள்ள இந்திய அணியில் ரவிச்சந்திரரன் அஸ்வின் 6 போட்டிகளில் விளையாடி 48 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். நியூசிலாந்துக்கு எதிராக மட்டுமே அஸ்வின் 6 முறை 5 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். ஆனால் நியூசிலாந்து தரப்பில் இப்போதுள்ள அணியில் இந்தியாவுக்கு எதிராக யாரும் அதிகளவு விக்கெட்டுகளை சாய்க்கவில்லை.
கடைசியாக இரு அணிகளும் 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதியது. இதில் நியூசிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் இந்தியாவை வீழ்த்தியது. அதேபோல ஐசிசி நடத்தியப் போட்டிகளில் நியூசிலாந்தை வென்று இந்தியாவுக்கு 18 ஆண்டுகள் ஆகிறது. கடைசியாக 2003 உலகக் கோப்பையில்தான் நியூசிலாந்தை இந்தியா வீழ்த்தியது. அதன்பின்பு ஐசிசி கோப்பைகளில் நியூசிலாந்தை இந்தியா வெல்லவே இல்லை. கடைசியாக 2019 உலகக் கோப்பை போட்டியின் அரையிறுதியில் கூட நியூசிலாந்திடம் தோற்றது இந்திய அணி. இப்படியொரு ஒரு ராசி இந்திய அணிக்கு இருப்பதால் அதனை பொய்யாக்குவது கோலியின் கடமையாக பார்க்கப்படுகிறது.
மேலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இங்கிலாந்தில் நடைபெறுவதால் அதன் சீதோஷண நிலை நியூசிலாந்துக்கு சாகமாக இருக்கும் என பலரும் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாகவே கோப்பையை வெல்வதற்கான சாத்தியக் கூறுகள் நியூசிலாந்துக்கு அதிகம் இருப்பதாகவும் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இப்படி சாதகங்கள் பல நியூசிலாந்துக்கு இருக்க, சில பாதகங்கள் இந்தியாவுக்கு இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் எப்போதும் இதுபோன்ற யூகங்களை உடைப்பதுதான் இந்தியாவின் சாதனையாக சில ஆண்டுகளாக இருந்து வருகிறது. அதனால் இதுபோன்ற கருத்துகளை உடைத்து கோலியின் படை உலக டெஸ்ட் சாம்பியன் பட்டத்தை வெல்லும் என நம்பலாம்.
- ஆர்.ஜி.ஜெகதீஷ்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்