தமிழக காவல்துறையில் இரண்டு ஐஜி-க்கள் உட்பட 12 காவல் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழக காவல் துறையில் 10 ஐபிஎஸ் அதிகாரிகள் உட்பட 12 காவல் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. குறிப்பாக ஊர்க்காவல் படை ஐஜியாக சுமித்சரண், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக தினகரன், காவல்துறை பயிற்சி பிரிவு டிஐஜியாக கயல்விழி, திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி-யாக சீனிவாசன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
சிபிசிஐடி எஸ்பியாக இருந்த விஜயகுமார், திருவாரூர் மாவட்ட எஸ்பி-யாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவர், சிபிசிஐடி-யில் பல்வேறு முக்கிய வழக்குகளை விசாரணை நடத்தியவர். டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு வழக்குகள், சிவசங்கர் பாபா மீதான வழக்கு, தொழில் அதிபரை காவல் அதிகாரிகள் கடத்திய வழக்கு, 103 கிலோ தங்கம் திருடப்பட்ட சுரானா வழக்கு, சாத்தான்குளம் தந்தை - மகன் வழக்கு உள்பட தமிழகத்தின் முக்கிய வழக்குகளை விசாரணை நடத்தியவர் விஜயகுமார். அவர் தற்போது இடமாற்றம் செய்யப்பட்டு திருவாரூர் எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.இவருக்கு பதிலாக அடையாறு காவல் துணை ஆணையராக இருந்த விக்ரமன் சிபிசிஐடி சிறப்பு பிரிவு எஸ்பி-யாக நியமிக்கப்ட்டுள்ளார்.
இதேபோல் திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி-யாக சீனிவாசன், தஞ்சாவூர் மாவட்ட எஸ்.பி-யாக ரவாளி பிரியா, ராணிப்பேட்டை மாவட்ட எஸ்.பி-யாக தேஷ்முக் சேகர் சஞ்சய், தமிழக காவல்துறை சைபர் கிரைம் பிரிவு-2 எஸ்.பி-யாக ஓம்பிரகாஷ் மீனா, சைபர் கிரைம் பிரிவு 3 எஸ்.பி-யாக தேவராணி, பரங்கிமலை துணை ஆணையராக அருண் பாலகோபாலன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் முக்கிய பொறுப்பாக கருதப்படும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு சென்னை காவல் துணை ஆணையராக சியாமளா தேவியை தமிழக அரசு நியமனம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்