Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

கர்நாடகாவின் புதிய முதல்வராக இன்று பதவியேற்பு: யார் இந்த பசவராஜ் பொம்மை?

கர்நாடக புதிய முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பசவராஜ் பொம்மை இன்று காலை 11 மணிக்கு பொறுப்பேற்கிறார்.
 
கர்நாடக முதலமைச்சராக இருந்த எடியூரப்பா பதவி விலகியதை தொடர்ந்து புதிய முதலமைச்சரை தேர்ந்தெடுப்பதற்காக பாரதிய ஜனதா எம்எல்ஏக்கள் கூட்டம் பெங்களூருவில் தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. மத்திய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான் மற்றும் கிஷண் ரெட்டி ஆகியோர் மேலிடப் பார்வையாளர்களாக பங்கேற்ற கூட்டத்தில், எடியூரப்பா அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக இருந்த பசவராஜ் பொம்மை புதிய முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார்.
 
இதையடுத்து, எடியூரப்பாவுடன் ஆளுநர் மாளிகை சென்ற பசவராஜ் பொம்மை, பாஜக எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்தை வழங்கினார். இன்று காலை 11 மணிக்கு ஆளுநர் மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சியில், ஆளுநர் தாவர்சந்த் கெலாட் பசவராஜ் பொம்மைக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.
 
image
யார் இந்த பசவராஜ் பொம்மை?
 
கர்நாடகா முதலமைச்சர் பதவியிலிருந்து விலகினாலும், தனக்கு நெருக்கமான, தனது சமூகத்தைச் சேர்ந்தவரையே முதலமைச்சராக்கியுள்ளார் எடியூரப்பா. 61 வயதான பசவராஜ், ஹாவேரி மாவட்டத்தில் உள்ள ஷிகான் தொகுதியிலிருந்து 3 முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
 
மத்திய அமைச்சர் பிரகலத் ஜோஷி, முன்னாள் மத்திய அமைச்சர் சதானந்த கவுடா, தேசியச் செயலர் சி.டி.ரவி ஆகியோரில் ஒருவர் முதலமைச்சராவார் என தகவல்கள் வெளியான நிலையில், எடியூரப்பாவின் சமூகமான லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்த பசவராஜ் பொம்மையே தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் கர்நாடக அரசியலில் தன்னுடைய இடத்தை உறுதி செய்துள்ளார் எடியூரப்பா.
 
மெக்கானிக்கல் இன்ஜீனியரான பசவராஜ் பொம்மை, ஜனதா தளம் கட்சியில் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கினார். கர்நாடக மேலவைக்கு இருமுறை தேர்ந்தெடுக்கப்பட்ட பசவராஜ், 2008-ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்து, எடியூரப்பாவின் நம்பிக்கைக்குரியவரானார்.
2008 முதல் நீர்பாசனத்துறை அமைச்சராக செயல்பட்ட பசவராஜின் தந்தை, சோமப்ப ராயப்ப பொம்மை 1988-89ஆம் ஆண்டில் ஜனதா தளம் சார்பில் கர்நாடக முதலமைச்சராக இருந்தார். தனது அரசு கலைக்கப்பட்டபோது, மத்திய அரசுக்கு எதிராக எஸ்.ஆர்.பொம்மை உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு, 356 பிரிவு தொடர்பாக பல்வேறு விளக்கங்களை அளித்தது குறிப்பிடத்தக்கது

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்