திருவண்ணாமலையில் காவலர்களால் துரத்திச் செல்லப்பட்டதாக கூறப்படும் இளைஞர் சடலாமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவல் துறையினர் தாக்கியதாலேயே இளைஞர் உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
காவலர்களால் விரட்டிச்செல்லப்பட்டு உயிரிழந்ததாக கூறப்படும் 30 வயதான முரளிக்கு ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் போளூரை அடுத்த வம்பலூர் கிராமத்திற்கு வந்த களம்பூர் காவலர்கள் மாட்டுவண்டிக்கு மாமூல் கேட்டதாக கூறப்படுகிறது. இரண்டு வண்டிகளுக்கு மட்டும் மாமூல் கொடுத்த முரளி, தனது சொந்த வண்டியை ஓட்டி ஓராண்டு ஆகிவிட்டதால் மாமூல் கொடுக்க முடியாது என கூறியதாகவும் இதனால் காவலர்களுக்கும் முரளிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து மாட்டுவண்டியை கட்டிக்கொண்டு வெளியே புறப்பட்ட முரளியை காவலர்கள் விரட்டிச் சென்றதாக கூறப்படுகிறது. காவலர்களால் விரட்டிச்செல்லப்பட்டதாக கூறப்படும் முரளி அதன்பிறகு வீடு திரும்பவில்லை. அடுத்தநாள் மாலை பம்பலூர் ஆற்றுப்படுகையில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. முரளியின் இறப்பிற்கு காவலர்களே காரணம் எனக்கூறி அவரது உறவினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் ரெட்டி, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி முரளியின் உடலை உடற்கூறு ஆய்விற்கு அனுப்பிவைத்தார்.
இதனிடையே முரளியை துரத்திச்சென்றதாக கூறப்படுவதை களம்பூர் காவல் துறையினர் மறுத்துள்ளனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்