மூன்று மாதங்களுக்குப் பிறகு சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகள் வரத் துவங்கியுள்ளனர். இதனால் இந்த பகுதியில் வியாபாரம் செய்யும் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கொரோனா பரவல் காரணமாக சுற்றுலாத்தலங்கள் கடந்த மூன்று மாதங்களாக மூடப்பட்டிருந்தது. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருவதால் தமிழக அரசு தளர்வுகளை அறிவித்து வருகிறது. இந்த நிலையில் விடுமுறை நாளான இன்று சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் திரிவேணி சங்கமம் கடலில் அமைக்கப்பட்டுள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள பகுதியில், கடலில் இருந்து எழும் சூரிய உதயத்தை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் திரிவேணி சங்கமம் பகுதியில் குவிந்தனர்.
இதையடுத்து இங்கு காத்திருந்த சுற்றுலா பயணிகள் காலை 6 மணி 2 நிமிடத்தில் சூரியன் உதயம் ஆவதை பார்த்து ரசித்தனர். விடுமுறை நாளான இன்று ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வந்ததால் இந்த சுற்றுலா தலத்தில் சுற்றுலா பயணிகளை நம்பி வியாபாரம் செய்துவரும் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனாலும் இங்கு வந்த சுற்றுலா பயணிகளில் சிலர் முகக் கவசம் அணியாமல் வருவது வியாபாரிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் இந்த பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகள் அரசு விதித்துள்ள கொரோனா விதிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும். இதை கண்காணிக்க கன்னியாகுமரி பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்