Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

இடத்தை தேர்வு செய்தால் மதுரை எய்ம்ஸில் நடப்பாண்டிலேயே மாணவர்  சேர்க்கை - மத்திய அரசு

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான தற்காலிக இடத்தை தேர்வு செய்தால் நடப்பாண்டிலேயே மாணவர் சேர்க்கை நடைபெறும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
 
தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று கடந்த 2015-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக நடந்த கூட்டத்தில் மதுரை அருகே தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான அறிவிப்பாணை தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
 
ரூ.1,264 கோடி மதிப்பிலான, சுமார் 201.75 ஏக்கர் நிலத்தில் அமையவுள்ள மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து, இதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் தொடங்கி நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், தமிழகத்தோடு சேர்ந்து அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனைகள் மற்ற மாநிலங்களில் கட்டி முடிக்கப்பட்டு விட்ட நிலையில், மதுரையில் மட்டும் கட்டுமானப் பணிகள் மந்தகதியில் நடைபெற்று வருகிறது.
 
இதனிடையே, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிரந்தர கட்டடம் கட்டும் வரை தற்காலிக இடத்தில் தொடங்கவும், எம்.பி.பி.எஸ். மாணவர் சேர்க்கை மற்றும் வெளிநோயாளிகள் பிரிவை தொடங்கவும் உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு வரும் 30-ம் தேதி விசாரணைக்கு வரும் நிலையில், மதுரை எய்ம்ஸ் மாணவர் சேர்க்கை தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன், தமிழக தலைமைச் செயலாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
 
அந்தக் கடிதத்தில், ''மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான தற்காலிக இடத்தை தேர்வு செய்தால் நடப்பாண்டிலேயே மாணவர் சேர்க்கை நடைபெறும். செலவினம், அலுவலர் தேர்வு, உட்கட்டமைப்பு ஆகியவற்றை மத்திய சுகாதாரத்துறை ஏற்றுக்கொள்ளும். நடப்பாண்டில் மாணவர் சேர்க்கைக்கு தேவையான வசதி, வகுப்பறை, அலுவலகத்துக்கான இடத்தை தேர்வு செய்க. தற்காலிக இடத்தை தமிழக அரசு தேர்வு செய்தால் மதுரை எய்ம்ஸில் 50 முதல் 100 மாணவர் சேர்க்கை நடைபெறும்'' என அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்