திமுக ஆட்சி பொறுப்பை ஏற்று கிட்டதட்ட 3 மாதங்களின் ஆகின்றன. இந்த நிலையில், திமுக கொடுத்த 505 வாக்குறுதி அறிவிப்புகளில் முக்கியமானவற்றைக் கூட நிறைவேற்றவில்லை எனக் கூறி அதிமுக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. நீட் தேர்வு, பெட்ரோல், டீசல் - விலை உயர்வு, மின்வெட்டு போன்ற காரணங்களை முன்வைத்து மாநிலம் தழுவிய அதிமுக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகிறது. இவையனைத்தும் அதிமுகவின் அறிக்கையில் இடம்பெற்ற காரணங்களாக இருந்தாலும்கூட இந்த ஆர்ப்பாட்டத்தின் பின்புலத்துக்கான காரணம் குறித்த கேள்வி இங்கே எழுகிறது.
ஏனென்றால், ஒருபுறம் அதிமுகவுடன் கூட்டணியில் இருக்கும் பாஜகவும் பாமகவும் தங்களை வலுவான எதிர்க்கட்சிகளாக காட்டிக்கொள்வதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. மேலும், சசிகலாவும் மீண்டும் அரசியல் களத்தில் குதிப்பேன் என தொண்டர்களுடன் உரையாடலில் ஈடுபட்டு ஆடியோக்களை வெளியிட்டு வருகிறார். அண்மையில்கூட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மதுசூதனனை சசிகலா நேரில் சென்று நலம் விசாரித்து வந்தார்.
இதனிடையே, சசிகலா தொடர்ந்த பொதுச்செயலாளர் வழக்கும் அப்படியே நிலுவையில் இருந்து வருகிறது. இந்த சமயத்தில்தான் அதிமுகவினர் கூட்டாக சென்று டெல்லியில் பிரதமரை சந்தித்து விட்டு வந்துள்ளனர். இதையடுத்துதான் போராட்டத்தை கையில் எடுத்துள்ளது அதிமுக.
இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் கூறுகையில், “எதிர்க்கட்சியாக தங்களை நிலைநிறுத்திக்கொள்ள வேண்டும் என நினைக்கிறார்கள். ஏனென்றால் எதிர்க்கட்சி அந்தஸ்துக்கே இப்போது போட்டி வந்துவிட்டது. பாமகவும், பாஜகவும், அதிமுகவும் கூட்டணிக் கட்சிகள். பாமக தினந்தோறும் திமுகவுக்கு எதிராக கண்டன அறிக்கையை வெளியிடுகிறது. திமுகவிற்கு அடுத்த நிலையில் நாங்கள்தான் இருக்க போகிறோம் என்றும் கூறுகிறது. அதனால் பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்ற சங்கடமான சூழ்நிலையில் அதிமுக இருக்கிறது. அதனால்தான் போராட்டத்தை கையில் எடுத்துள்ளனர்.
அரசு பொறுப்பு ஏற்றதும் இரண்டு மாதங்களாக கொரோனாவை கட்டுப்படுத்தும் பணியில்தான் ஈடுபட்டது. இப்போது ஒரு மாதம்தான் பிறப்பணிகளில் கவனம் செலுத்தி வருகிறது. அந்தக் காலத்தில் அண்ணா ஆட்சிக்கு வந்ததும் 6 மாதங்களுக்கு ஆட்சியைப்பற்றி எதுவும் கூறமாட்டேன் என்றார் காமராஜர். அதுபோல தற்போது ஸ்டாலினுக்கு முதலமைச்சராக நிர்வாக அனுபவம் கிடையாது” என்றார்.
பத்திரிகையாளர் ப்ரியன் கூறுகையில், “கட்சியில் இரட்டை தலைமை குழப்பம், சசிகலா அரசியலுக்கு வருவேன் என்பது, தேர்தல் தோல்வி, ஆட்சி இழப்பு, இவையெல்லாம் அதிமுக தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தை குறைத்துள்ளது. எனவே, இதுமாதிரியான போராட்டங்கள் தேவைப்படுகின்றன. எதிர்க்கட்சி என்பது ஆளுங்கட்சியின் குறைபாடுகளை எடுத்துச்சொல்லி போராட்டம் நடத்துவது தவறில்லை. ஆனால் ஒபிஎஸ் - இபிஎஸ் இடையே முரண்பாடு இருப்பதை காணமுடிகிறது.
23 ஆம் தேதி இருவரும் அறிக்கை ஒன்றை வெளியிடுகிறார்கள். அதில், நீட் தேர்வு, விலைவாசி உயர்வு, மின்வெட்டு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு பற்றி கூறியிருக்கிறார்கள். போராட்டம் பற்றியும் தெரிவித்திருக்கிறார்கள். ஆனால் டெல்லியில் பிரதமரை சந்தித்த எடப்பாடி பழனிசாமியிடம் திமுக ஆட்சியை பற்றி கேட்டதற்கு, ஆட்சிக்கு வந்து 3 மாதம் கூட ஆகவில்லை. அவர்களைப்பற்றி என்ன கூறுவது என கேட்கிறார். இதில் பெரிய முரண்பாடு இருக்கிறது.
நீட் தேர்வை நம்பி திமுகவிற்கு மக்கள் வாக்களிக்கவில்லை. அதைப்பற்றி அதிமுக கேட்கலா? அதிமுக அனுப்பிய 2 மசோதா கிட்டதட்ட 18 மாதம் மத்திய அரசிடம் பெண்டிங்கில் இருந்தது. அதற்கான நடவடிக்கை என்ன எடுத்தது? தமிழ்நாடு என்றும் மின்மிகை மாநிலமாக இருந்தது கிடையாது. அதிமுகவே சரியாக பரிமாரிக்க கிடையாது.
எதிர்க்கட்சியாக வலுப்படுத்திக்கொள்ளவும், சசிகலா வரவை தடுக்கவும், தொண்டர்கள் கட்சி மாறி செல்வதை தடுக்கவும், கட்சி தொண்டர்களை உற்சாகப்படுத்தவும் கட்சியை காப்பாற்றிக்கொள்ளவுமே இந்தப் போராட்டத்தை அதிமுக கையில் எடுத்துள்ளது” என்றார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்