Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

சீன வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு: எல்லையில் பதற்றம் தணியுமா?

இந்திய - சீன எல்லையில் பதற்றம் தொடரும் நிலையில், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி-யை சந்தித்தார். லடாக் உள்ளிட்ட பல்வேறு எல்லைப் பகுதிகளில் படைக் குறைப்பு தொடர்பாக இரு தரப்பிலும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜெய்சங்கர் - வாங் யி சந்திப்பு தஜிகிஸ்தான் நாட்டில் நடைபெற்றது. துசான்பே நகரில் தற்போது நடைபெற்று வரும் "ஷங்கை ஒத்துழைப்பு" ஒப்பந்த நாடுகள் மகாநாட்டில் இரண்டு வெளியுறவுத்தறை அமைச்சர்களும் கலந்து கொள்கிறார்கள். அந்த மாநாடு நடைபெறும் இடத்திலேயே இரு வெளியுறவுத் துறை அமைச்சர்களும் தனியாக சந்தித்து கொண்டார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Russia hosts India, China ministers tomorrow, Rajnath to attend parade | India News,The Indian Express

கடந்த செப்டம்பர் மாதத்திற்குப் பிறகு முதல் முறையாக ஜெய்சங்கர் நேரில் வாங் யி-யை சந்தித்துள்ளார். பத்து மாதங்களுக்கு முன்பு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர், ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் சீன வெளியுறவுத் துறை அமைச்சரை சந்தித்ததை தொடர்ந்து எல்லையில் பதற்றத்தை தணிக்க ஒப்பந்தம் உருவானது என அதிகாரிகள் நினைவுகூர்கிறார்கள். ஆகவே, இந்த முறை ஜெய்சங்கர் தஜிகிஸ்தான் நாட்டில் சீன வெளியுறவுத் தறை அமைச்சரை சந்தித்து ஆலோசனை நடத்தியதன் விளைவாக எல்லையில் பதற்றத்தை தணிக்க கூடுதல் நடவடிக்கைகள் எடுக்க வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது.

சமீபத்தில் லடாக் உள்ளிட்ட பல்வேறு எல்லைப் பகுதிகளில் சீனா ராணுவ வீரர்களை அதிக அளவில் குவித்துள்ளது. விமானங்களை இயக்குவதற்கான ஓடுதளங்களை அமைப்பது மற்றும் முகாம்கள் அமைப்பது போன்ற பணிகளில் சீன ராணுவம் ஈடுபட்டுள்ளது. லடாக், அருணாச்சலப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம், சிக்கிம், உத்தராகண்ட் ஆகிய பகுதிகளை ஒட்டியுள்ள எல்லைப் பகுதிகளில் சீன ராணுவம் புதிய சாலைகளை அமைத்து வருவதும், ரோந்து பணிகளை தீவிரப்படுத்தி உள்ளது கவலை அளிக்கக்கூடிய நடவடிக்கையாக உள்ளது.

image

இந்தியா எல்லையில் பல்வேறு பகுதிகளில் சீன ராணுவம் பீரங்கிகள் மற்றும் ஏவுகணைகள் உள்ளிட்ட ஆயுதங்களை குவித்து வருகிறது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள இந்திய அரசு கிழக்கு எல்லையில் உள்ள பல்வேறு முகாம்களுக்கு கூடுதலாக 50 ஆயிரம் வீரர்களை அனுப்பி வைத்துள்ளது. அத்துடன் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் லடாக் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள இந்திய முகாம்களுக்குச் சென்று அங்குள்ள கால நிலவரத்தை நேரடியாக கண்டறிந்துள்ளார்.

இத்தகைய பதற்றமான சூழ்நிலையில் இந்திய மற்றும் சீன வெளியுறவுத் துறை அமைச்சர்கள் சந்தித்துக் கொண்டது முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கையாகக் கருதப்படுகிறது. இவர்களுடைய ஆலோசனை மூலம் எல்லை பதற்றத்தை தணிக்க புதிய முன்னெடுப்புகள் உருவாகுமா என இரண்டு தரப்பிலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. இன்று பாகிஸ்தானில் நடைபெற்றுள்ள தீவிரவாத தாக்குதலில் பல சீனப் பொறியாளர்கள் உயிரிழந்துள்ள நிலையில், தற்போது ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் நிலவும் தீவிரவாத அச்சுறுத்தல் குறித்தும் இரண்டு வெளியுறவுத் துறை அமைச்சர்களும் கருத்துக்களை பரிமாறிக் கொண்டார்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

- கணபதி சுப்பிரமணியம்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்