பெகாசஸ் உளவு மென்பொருளை பயன்படுத்தி பத்திரிகையாளர்கள், அரசியல் பிரமுகர்களின் செல்பேசிகள் உளவு பார்க்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் வலுத்து வரும் நிலையில், இந்த விவகாரத்தை விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என மூத்த பத்திரிகையாளர் என்.ராம் வழக்கு தொடர்ந்துள்ளார்.
ஏசியாநெட் நிறுவனர் சசி குமாருடன் இணைந்து உச்சநீதிமன்றத்தில் இதற்கான மனுவை என்.ராம் தாக்கல் செய்துள்ளார். உச்சநீதிமன்ற நீதிபதி அல்லது ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஒருவர், இந்த விசாரணைக்கு தலைமை ஏற்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. சென்னையை தலைமையகமாக கொண்டு செயல்படும் 'தி இந்து' நாளிதழின் ஆசிரியராகவும், பல்வேறு பொறுப்புகளிலும் இருந்தவரான பத்திரிகையாளர் என்.ராம் தாக்கல் செய்துள்ள இந்த மனு, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
ஏசியாநெட் நிறுவனரான சசி குமார் தற்போது ஊடகத்துறை பயிற்சி பள்ளி ஒன்றில் இயக்குநராக செயல்பட்டு வருகிறார். ஏற்கெனவே பெகாசஸ் உளவு விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் இரண்டு வழக்கறிஞர்கள் மனுத் தாக்கல் செய்துள்ள நிலையில், சசி குமாருடன் இணைந்து என்.ராம் தாக்கல் செய்துள்ள மனு இவற்றுடன் சேர்த்து விசாரிக்கப்படும் எனத் தெரிகிறது.
இஸ்ரேலிய பெகாசஸ் உளவு மென்பொருள், இந்தியாவில் பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோரின் செல்பேசிகளை உளவு பார்க்க பயன்படுத்தப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டு சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்றத்திலும் இது குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முழக்கங்கள் எழுப்பி, அரசியல் புயலை உண்டாக்கி உள்ளன.
ராகுல் காந்தி உள்ளிட்டோரின் செல்போன்கள் உளவு பார்க்கப்பட்டதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி வரும் நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் அலைபேசிகளும் உளவு பார்க்கப்பட்டதாக திரிணாமூல் காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. இந்நிலையில், மேற்கு வங்க அரசு ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி மதன் லோகூர் தலைமையில் விசாரணை கமிஷன் அமைத்து, பெகாசஸ் விவகாரத்தை விசாரிக்க உத்தரவிட்டுள்ளது.
மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் அடங்கிய நாடாளுமன்ற சிறப்புக் குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்றும், மத்திய அரசு இந்த உளவு மென்பொருளை பயன்படுத்தியதா என்பதை தெளிவுபடுத்த வேண்டும் எனவும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. மத்திய அரசின் ஐடி மற்றும் எலக்ட்ரானிக்ஸ் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஏற்கெனவே நாடாளுமன்றத்தில் இதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்து இருந்தாலும், எதிர்க்கட்சிகள் அதை நிராகரித்துள்ளன.
அரசு உளவு பார்க்கவில்லை என்றால் வெளிநாட்டிலிருந்து யாரேனும் உளவு பார்த்தார்களா என்று விசாரணை நடத்த வேண்டும் என்றும், வெளிநாடுகளில் இருந்து யாரேனும் இந்தியர்களை உளவு பார்த்து இருந்தால் அது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எனவும் எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன. ஆகவே, ராம் மற்றும் சசி குமார் ஆகியோர் தாக்கல் செய்துள்ள மனு தொடர்பான விவரங்கள் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகின்றன.
- கணபதி சுப்ரமணியம்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்