Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

“என் மீது விமர்சனமா? தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டதால் வி.ஆர்.எஸ் கொடுத்தார்கள்” - ஐ.லியோனி

திண்டுக்கல் ஐ.லியோனியை தமிழ்நாடு பாடநூல் கழக தலைவராக நியமித்துள்ளது குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு விமர்சனங்கள் வந்தது குறித்து கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி மற்றும் லியோனியிடம் பேசினோம்.

ஜெயபிரகாஷ் காந்தி: திண்டுக்கல் ஐ.லியோனியை தமிழ்நாடு பாடநூல் கழக தலைவராக நியமித்துள்ளதை நான் வரவேற்கிறேன். அவர் சிறப்பாக பணியாற்றுவர் என்றே நம்புகிறேன். இது அரசியல் நியமனமாகவே இருந்தது. படித்தவர்கள் யாரும் இதுவரை இந்த பொறுப்புக்கு நியமிக்கப்படவில்லை. லியோனியை நியமனம் செய்திருப்பது ஒன்றும் தப்பில்லை.

இதற்கு முன்புகூட வளர்மதி இருந்தாங்க. அதனால, லியோனியை நியமித்து இருக்கலாமா கூடாதா என்பதெல்லாம் கிடையாது. அரசியல் நியமனத்தில் யார் வேண்டுமானாலும் இந்த பொறுப்புக்கு வரலாம். ஆனால், நான் என்ன சொல்கிறேன் என்றால் அவருக்கு துணையாக நன்றாக படித்த அனுபவமுள்ள கல்வியாளரை நியமனம் செய்யலாம். அவர்கள் இருவரும் சேர்ந்து பயணித்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். அப்படி ஒருவரை உதவித் தலைவராக நியமனம் செய்வதில் எந்த தவறும் இல்லை.

திண்டுக்கல் ஐ.லியோனியும் ஆசிரியராக பணியாற்றி இருக்கிறார். அதனால் கல்வி பற்றி அவருக்கு கண்டிப்பாக தெரிந்திருக்கும். அதனால் அவரை விமர்சனம் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. அவரது நியமனத்தை நான் மிகவும் வரவேற்கிறேன்.

சமூக வலைதளங்களில் வந்த பல கடும் விமர்சனங்கள் தொடர்பாக திண்டுக்கல் ஐ.லியோனியிடம் கேள்வி எழுப்பினோம். அதற்கு பதிலளித்த அவர்: என்னை பட்டிமன்ற நடுவர், பேச்சாளராக மட்டும்தான் நிறைய பேருக்குத் தெரியும். நான் 33 வருடம் திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றியிருக்கிறேன் என்பது நிறைய பேருக்குத் தெரியாது. அதனால்தான் என்னை தமிழ்நாடு பாடநூல் கழக தலைவராக நியமித்ததை சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்துள்ளார்கள். என்னை விமர்சனம் செய்தவர்களுக்கு இப்போது தெரிந்திருக்கும் நான் ஆசிரியர் என்பது. நான் ஆசிரியராக பணியாற்றியது தெரிந்துதான் முதல்வர் அவர்கள் இந்த பொறுப்பை எனக்கு கொடுத்திருக்கிறார்.

நான் 2011ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டதால் எனக்கு விஆர்எஸ் கொடுத்து ஸ்கூலை விட்டு வெளியேற்றிவிட்டார்கள். ஆனால் இப்போது அதே பள்ளிக்கல்வி தொடர்புடைய தமிழ்நாடு பாடநூல் கழக தலைவராக என்னை நியமித்து இருக்கிறார்கள். இதை நினைக்கும்போது எனக்கு சந்தோசமாகவும் பெருமையாகவும் இருக்கிறது.

நான் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றிய காலத்தில் ஒரு பாட புத்தகத்தை முழுவதுமாக 33 வருடங்கள் நடத்தியிருக்கிறேன். அதனால் பாட திட்டத்தில் என்னென்ன மாறுதல்கள், எப்படியெல்லாம் பாடம் இருந்தால் மாணவர்கள் விரும்புவார்கள் என்பது எனக்கு நன்றாக தெரியும். அதனால் இந்த துறையில் நிறைய புதுமைகளை மாறுதல்களை கொண்டுவர முடியும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது.

புத்தகம் என்று சொன்னாலே மாணவர்களுக்கு ஒரு கசப்பான பொருளாக தெரிகிறது. அதனால், பாடங்களை மிகவும் எளிமை படுத்தி, மாணவர்கள் ரசிக்கும்படியான பாடங்களை கொண்டுவரவேண்டும். அதேபோல மாணவர்கள் புத்தகத்தை வாசிக்கும் போது அதை விரும்பி வாசிக்கும்படி வடிவமைக்க வேண்டும். அப்போதுதான் மாணவர்களுக்கு வாசிக்கும் ஆர்வம் வரும்.

இப்போது வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப புத்தகங்களை அச்சடித்து கொடுப்பதை விட இ-புக் வடிவில் கொடுத்தால் எந்த நேரத்தில் வேண்டுமானலும் எடுத்து எளிதாக தங்களது சந்தேகங்களை மாணவர்கள் தீர்த்துக் கொள்ளலாம். ஒரு புத்தகத்தில் 200 பக்கம் இருந்தால், மாணவனுக்குத் தேவையான பாடப்பகுதியைத் தேடி எடுக்கும் நிலை உள்ளது. இதை நாம் இ-புக் வடிவில் கொடுக்கும்போது மாணவனுக்கு எந்த பாடம் வேண்டும் என்பதை டைப் செய்தால் போதும் அந்த பாடம் அவன் கைக்கு வந்துவிடும். அதுபோன்ற ஒரு இ-புக்கை அறிமுகப்படுத்தி முதல்வரின் ஆலோசனையுடன் பாட திட்டத்தில் புதுமையை செய்ய இருக்கிறோம்.

என்னுடைய அப்பா உடற்கல்வி ஆசிரியராக இருந்ததால் பள்ளிகளில் உடற்கல்வி வகுப்பு எப்படி இருக்கிறதென்பது எனக்கு நன்றாக தெரியும். பள்ளிகளில் உடற்கல்வி வகுப்பு என்பது வாரத்தில் ஒருநாள் இரண்டுநாள் தான் உடற்கல்வி ஆசிரியர்களின் கீழ் மாணவர்கள் இருப்பார்கள். அதுபோல் இல்லாமல் விளையாட்டுத் துறைக்கென்று தனியாக ஒரு வகுப்பு, அதாவது விருப்பப் பாடத்தை தேர்ந்தெடுப்பது போல் விளையாட்டை விருப்பப் பாடமாக எடுத்து விளையாட்டில் ஆர்வமுள்ள மாணவர்களை தனியாக ஒரு வகுப்பில் வைத்து அவர்களை உற்சாகப்படுத்தி அதிக அளவிலான மாணவர்கள் விளையாட்டுத் துறையில் பல சாதனைகளை புரிய வேண்டும் என்பது எனது ஆசை. அதை நிறைவேற்ற முயற்சி மேற்கொள்வோம்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்