Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

”திராவிட மாடல் எது?” - பொருளாதார ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

அனைத்து சமூகங்கள், மாவட்டங்கள், பிரிவினரை உள்ளடக்கிய வளர்ச்சி தான் திராவிட மாடல் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் தமிழ்நாட்டில் ஏற்கனவே இருக்கும் வளங்களைக் கொண்டு, மாநிலத்தை இன்னும் வளப்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவின் முதல் கூட்டம் காணொலி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. குழுவின் உறுப்பினர்கள் எஸ்தர் டஃப்லோ, ரகுராம் ராஜன், அரவிந்த் சுப்ரமணியன், ஜீன் டிரீஸ், எஸ்.நாராயண் ஆகியோருடன் தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றார். தலைமைச் செயலாளர் இறையன்பு, நிதித்துறை கூடுதல் செயலர் கிருஷ்ணன் ஆகியோரும் பங்கேற்ற கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முதல்வர் என்பது ஸ்டாலின் மட்டுமல்ல, அது ஒரு கூட்டுப் பொறுப்பு என்று நினைப்பதாகக் கூறினார்.

image

அனைத்து சமூகங்களையும், மாவட்டங்களையும், பிரிவினரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்பது தான் திராவிட மாடல் என்ற மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு அரசு 5 லட்சம் கோடி ரூபாய்க்கு மேலும், பொதுத் துறை நிறுவனங்கள் 2 லட்சம் கோடி ரூபாயும் கடனில் இருப்பதாக சுட்டிக்காட்டினார். நிதி ஆதாரம் விரல் விட்டு எண்ணத்தக்க சில துறைகள் மூலமாக மட்டுமே வரும் நிலையில், வரி வசூலில் இருந்த மாநில உரிமைகளை ஒன்றிய அரசு ஜிஎஸ்டி மூலமாக பறித்து விட்டதாகவும் முதலமைச்சர் கூறியுள்ளார். வளர்ச்சி என்பது பொருளாதார வளர்ச்சியாக மட்டுமல்ல, சமூக வளர்ச்சியாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ள மு.க.ஸ்டாலின், பொருளாதாரம், கல்வி, சமூகம், சிந்தனை, செயல்பாடு ஆகிய ஐந்தும் ஒருசேர வளர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

சமூக நீதி, சமத்துவம், சுயமரியாதை, மொழிப்பற்று, இன உரிமை, மாநில சுயாட்சி ஆகிய தத்துவங்களின் அடித்தளத்தில் நிற்கும் இயக்கம் திமுக என்று கூறியுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வளர்ச்சியும் அதன் அடிப்படையில்தான் இருக்க வேண்டும் என்றும் தொழில் வளர்ச்சி, சமூக மாற்றம், கல்வி மேம்பாடு ஆகிய அனைத்தும் ஒரே நேரத்தில் நடக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். இதற்காக தொடர்ந்து சந்திப்போம், சிந்திப்போம், வளமான தமிழ்நாட்டை உருவாக்குவோம் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பின்னர் பேசிய பொருளாதார அறிஞர் எஸ்தர் டஃப்லோ, பொருளாதார வளர்ச்சிக்கான கொள்கைகள் தகுந்த புள்ளி விவரங்களின் அடிப்படையில் வகுக்கப்பட வேண்டும் என்றும், முதியோரின் நலனுக்கு அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும் எனவும் கூறினார்.

Why Tamil Nadu is roping in a 'dream team' for its economic advisory council - The Week

ஆர்பிஐ முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் பேசும் போது, கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சிறு குறு தொழில்களை மீட்டெடுக்க தேவையான உதவிகளை அரசு செய்திட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

உற்பத்தித்துறை, சேவைத்துறை, உயர்கல்வி போன்ற பல துறைகளிலும் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தக்கூடிய வகையில் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி பன்முகத்தன்மை கொண்டதாக அமைந்திட வேண்டும் என ஒன்றிய அரசின் முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் கூறினார்.

அவரைத் தொடர்ந்து பேசிய பேராசிரியர் ஜீன் டிரீஸ், ஏழை எளியோர்க்கான சமூக பாதுகாப்புத் திட்டங்கள் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும் என தெரிவித்தார்.

அரசுத் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கான செயல்திறனை உயர்த்திட வேண்டும் என்றும், வரி நிர்வாகம் முறைப்படுத்தப்பட்டு அரசின் வருவாய் பெருக்கப்பட வேண்டும் எனவும் ஒன்றிய முன்னாள் நிதிச் செயலாளர் நாராயண் கருத்து தெரிவித்தார்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்