டோக்கியோ ஒலிம்பிக்கில் மகளிர் 69 கிலோ குத்துச்சண்டை எடைப் பிரிவின் காலிறுதிப் போட்டியில் இந்தியாவின் லவ்லினா வெற்றிப்பெற்று அரையிறுதிக்கு தகுதிப் பெற்றார்.
ஒலிம்பிக்கில் மகளிருக்கான 69 கிலோ பிரிவுக்கான குத்துச்சண்டை போட்டியின் காலிறுதி ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் சீன தைபேவின் வீராங்கனை நின் சின் சென் என்பவரை 4-1 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்திய லவ்லினா அரையிறுதிக்கு முன்னேறினார். இதனையடுத்து மகளிர் குத்துச்சண்டையில் 69 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் பதக்க வாய்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது, குறைந்தபட்சம் வெண்கலம், மேற்கொண்டு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் வெள்ளி அல்லது தங்கப்பதக்கம் கிடைக்க வாய்ப்புள்ளது. அவர் தங்கப்பதக்கம் வெல்ல வேண்டும் என்பதே இந்திய ரசிகர்களின் ஏகோபித்த எண்ணம்.
யார் இந்த லவ்லினா?
இந்திய நாட்டின் ஒலிம்பிக் பதக்க ஏக்கத்தை போக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட வீரர்கள் எல்லாம் முதல் சுற்றோடு ஒதுங்கிவிட நிச்சயம் ஒரு பதக்கத்தை தனது துல்லியமான ஆட்டத்தின் மூலமாக உறுதி செய்துள்ளார் 23 வயதான குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா போர்கோஹைன்.
இப்போது ஒலிம்பிக் விளையாட்டை கூர்ந்து கவனித்து வரும் ஒவ்வொரு இந்தியரும் சொல்லி வருவது, லவ்லினாவின் பெயரைதான்.
கோலாகாட் டூ டோக்கியோ ஒலிம்பிக்: அசாம் மாநிலம் கோலாகாட் மாவட்டத்தில் உள்ள பாரோமுகியா கிராமத்தை சேர்ந்தவர் லவ்லினா. கடந்த 1997-இல் மகாத்மா காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2 அன்று பிறந்தவர். மிடில் கிளாஸ் குடும்பம். அவரது அப்பா திக்கேன் சிறிய அளவில் தொழில் செய்து வருகிறார். அவரது அம்மா மமோனி போர்கோஹைன் இல்ல நிர்வாகி. அவருக்கு இரண்டு மூத்த சகோதரிகளும் உள்ளனர்.
சிறு வயது முதலே விளையாட்டில் ஆர்வமாக செயல்பட்டு வந்த அவர் இன்று அசாம் மாநிலத்தின் சார்பாக ஒலிம்பிக்கில் பங்கேற்றுள்ள முதல் விளையாட்டு வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். அவரது வெற்றிக்காக இன்று பலரும் காத்துள்ளனர்.
குத்துச்சண்டையில் ஆர்வம்: தொடக்கத்தில் தனது உறவுக்கார பெண் ஒருவரின் வழியை பின்பற்றி தற்காப்பு கலையான முவாய் தய் (Muay Thai) விளையாட்டில் தான் அவர் பயிற்சி செய்து வந்துள்ளார். “அப்போது அவளுக்கு 13 வயது இருக்கும். ஒரு நாள் அவளது தந்தை இனிப்பு பலகாரத்தை நியூஸ் பேப்பரில் சுற்றிக் கொண்டு வந்து கொடுத்தார். அந்த பேப்பரில் முகமது அலி குறித்த செய்தி இருந்தது. அதை அவள் படித்ததும் தானும் முகமது அலி போல ஆக வேண்டுமென சொன்னாள். அதற்காக உழைத்தாள்” என லவ்லினா பாக்சிங் விளையாட்டுக்குள் வந்த கதையை சொல்கிறார் அவரது அம்மா. அவரும் முகமது அலியின் ரசிகையாம்.
லவ்லினா ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நடத்திய டிரையலில் தனது திறனை நிரூபித்து காட்டியுள்ளார். அதன் மூலம் முறையான பயிற்சி பெறும் வாய்ப்பை அவர் பெற்றுள்ளார்.
அவரது திறன் லைம்லைட்டுக்குள் வந்தது எப்போது? - 2017-இல் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலம் வென்றதன் மூலம் புகழ் வெளிச்சத்திற்கு வந்தார் லவ்லினா. தொடர்ந்து 2018 மற்றும் 2019-இல் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப்பிலும் வெண்கலம் வென்றார். கடந்த மே மாதம் துபாயில் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப்பிலும் வெண்கலம் வென்றுள்ளார்.
ஒலிம்பிக்கில் எப்படி? - வால்டர் வெயிட் (Welterweight) என சொல்லப்படும் 69 கிலோ எடைப்பிரிவில் ஜெர்மனியின் அபெட்ஸ் நடைனை 3 - 2 என்ற கணக்கில் அவர் வென்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். காலிறுதியில் சீன தைபே வீராங்கனையான சென் நீன் சின்னை இன்று வீழ்த்திய லவ்லினா பதக்கம் வெல்வது உறுதி ஆகியுள்ளது.
நிச்சயம் முகமது அலி பாணியில் அவரது ரசிகையும் தன் நாட்டுக்காக தங்கப் பதக்கம் வென்று கொடுப்பார் என நம்புவோம்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்