"கட்டணத்தை உயர்த்துவதற்கு தயாராகவே இருக்கிறோம். நாங்கள் தயங்கவில்லை. ஆனால், நாங்கள் மட்டுமே தன்னிச்சையாக கட்டணத்தை உயர்த்த முடியாது; மற்ற நிறுவனங்கள் இணையும்போது கட்டணத்தை உயர்த்த முடியும்" என்று பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் தலைவர் சுனில் பார்தி மிட்டல் தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, "பெரிய அளவுக்கு கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்பது திட்டமில்லை. சந்தையின் நிலவரத்துக்கு ஏற்பவே கட்டணத்தை உயர்த்த இருக்கிறோம்.
கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் தொலைத்தொடர்பு துறையில் உள்ள மூன்று நிறுவனங்களும் கட்டணத்தை உயர்த்தியது. ஆனால், அதன் பிறகு தொலைத்தொடர்பு துறையில் கட்டணங்கள் உயரவில்லை.
தொலைத்தொடர்பு துறை சிக்கலில் இருக்கிறது என்பது கள நிலவரத்தை குறைத்து காண்பிப்பதாகும். இந்த துறை கடும் நிதி சிக்கலில் உள்ளது என்பதுதான் யதார்த்தம். டிஜிட்டல் இந்தியா திட்டம் வெற்றிகரமாக செயல்படுவதற்கு மூன்று நிறுவனங்களும் சிறப்பாக செயல்படுவது அவசியம். அரசும் ஆணையமும் கவனம் செலுத்தவேண்டும்.
கடந்த 6 ஆறு ஆண்டுகள் இந்தத் துறைக்கு மிகவும் சிக்கலான காலகட்டமாகும். இந்தியாவில் 10 நிறுவனங்கள் இருந்த நிலையில், தற்போது இரண்டு பெரிய நிறுவனங்கள் மட்டுமே உள்ளது. மூன்றாவதாக இரண்டு நிறுவனங்கள் ஒன்றாக இணைந்து போராடிக்கொண்டிருக்கிறது.
கட்டணத்தை உயர்த்துவது என்பது தவறான நடவடிக்கை அல்ல. குறைந்தபட்சம் கட்டணத்தை முந்தைய நிலைக்காவது உயர்த்த வேண்டும். எத்தனை நாட்களுக்கு ஒருவரை அழித்து ஒருவர் வாழ முடியும். அனைவரும் நிலைத்திருக்க வேண்டும் என்றால் பழைய நிலைமைக்கு கட்டணம் திரும்ப வேண்டும்" என்று சுனில் பார்தி மிட்டல் தெரிவித்திருக்கிறார்.
ரிலையன்ஸ் நிறுவனம் செப்டமப்ர் 10-ம் தேதி குறைந்தவிலையில் 4ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த சூழலில் கட்டணத்தை உயர்த்தினால் மேலும் சந்தையை இழக்க வேண்டி இருக்கும் என சந்தை வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்