Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

'சோதனை மேல் சோதனை'... கிடெக்ஸ் குழுமம் Vs கேரள அரசு - ஒரு பின்புலப் பார்வை

கிடெக்ஸ் குழுமம் - கேரள அரசு இடையேயான மோதல்தான் தொழில்துறையினர் மத்தியில் 'ஹாட் டாபிக்' ஆக இருக்கிறது. அந்தக் குழுமத்துக்கு தமிழ்நாடு, கர்நாடகா, தமிழ்நாடு என பல மாநிலங்களிலிருந்தும் அழைப்பு வருவதாக சொல்லப்படும் நிலையில், மோதலின் பின்புலத்தையும் இரு தரப்பின் பார்வையையும் இங்கே அறிவோம்.

கிடெக்ஸ் குழுமத்தின் கீழ் இயங்கும் கிடெக்ஸ் கார்மெண்ட்ஸ் ஆலை, கேரளாவை தளமாக கொண்டு இயங்கி வருகிறது. உலகின் இரண்டாவது பெரிய குழந்தைகள் ஆடை தயாரிப்பு நிறுவனமாக பெயர் பெற்றது இந்த நிறுவனம். தொடர்ந்து 50 வருடங்களுக்கு மேலாக கேரளாவில் இயங்கி வந்த இந்த நிறுவனத்தின் அதிபர் சாபு எம்.ஜேக்கப் என்பவர். இவரும் கேரளாவை பூர்விகமாக கொண்டவர்தான். இதனால்தான் கேரளாவை அடிப்படையாக கொண்டு தனது ஜவுளி தொழிலை நடத்தி வந்தார். சில மாதங்கள் முன்புதான் கேரளாவில் ரூ.3,500 கோடி மதிப்பில் புதிய முதலீட்டுக்கான ஒப்பந்தத்தை கேரள அரசுடன் மேற்கொண்டு, அதன்படி புதிய ஆலைக்கான முதல்கட்ட பணிகளை துவங்கியது கிடெக்ஸ் நிறுவனம்.

image

இந்தநிலையில் சாபு எம்.ஜேக்கப், சில நாட்கள் முன்பு கேரளாவில் முதலீடு செய்வதாக அறிவித்த ரூ.3500 கோடி திட்டத்தை ரத்து செய்வதாக அறிவித்தார். அதற்கான காரணமாக, அவர் தெரிவித்தது: 'இரண்டாம் முறையாக, கம்யூனிஸ்ட் அரசு பதவியேற்ற இத்தனை நாட்களுக்குள் கிடெக்ஸ் ஆலையில் 11 முறை கேரள அரசு சோதனை நடத்தியுள்ளது. அதுவும் எந்தவொரு முன்னறிவிப்புமின்றி இந்த சோதனை நடத்தியது. கேரள அரசின் இந்த நடவடிக்கை அதிருப்தியை தருகிறது. அரசின் இந்த அத்துமீறலால் முதலீட்டை ரத்து செய்து இருப்பதுடன், கேரளாவை விட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்'.

கிடெக்ஸ் இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக அறிவித்த உடன் மற்ற மாநிலங்களான தெலங்கானா, தமிழ்நாடு போன்றவை இந்த திட்டத்தை தங்கள் மாநிலத்தில் அமைக்க ஆர்வம் காட்டின. இதில் தெலங்கானா ஒரு படி மேலே சென்று, சாபு எம்.ஜேக்கப்பிற்காக தனி விமானம் ஒன்றை அனுப்பி தெலுங்கானாவில் முதலீடு செய்வதற்கான பேச்சுவார்த்தைக்கு அழைத்துச் சென்றது. கர்நாடகாவோ மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சராக பதவியேற்றுள்ள ராஜீவ் சந்திரசேகர் மூலம் சாபு எம்.ஜேக்கப்பிடம் பேச வைத்து முதலீடு செய்ய அழைத்தது. இந்த அழைப்பின் பேரில் தனி விமானம் மூலம் தெலங்கானா சென்று சாபு, அடுத்த இரண்டு ஆண்டுகளில் ரூ.1000 கோடி அங்கு முதலீடு செய்யப்படும் என்பதை அறிவித்தார்.

பிரச்னையின் பின்னணி என்ன?

50 ஆண்டுகளுக்கும் மேல் பாரம்பரிய மிக்க ஆலையாக கேரளாவில் அறியப்படுகிறது கிடெக்ஸ் கார்மெண்ட்ஸ். எர்ணாகுளம், பெரும்பாவூர் பகுதிகளில் பெரிய ஆலைகளை வைத்திருக்கும் இந்த நிறுவனத்தின் நிறுவனர் சாபு - கேரள அரசு இடையேயான மோதலுக்கு அரசியல் பின்னணி சொல்லப்படுகிறது. இந்த சாபு ஜேக்கப் 2015-ல் 'ட்வென்டி20' (Twenty20) என்ற அரசியல் கட்சியைத் தொடங்கினார். தொடர்ந்து எர்ணாகுளம் மாவட்டத்தில் கிஷாகம்பலம் என்ற கிராமத்தையும் தத்தெடுத்தார்.

image

நடந்து முடிந்த கேரள சட்டமன்றத் தேர்தலில் தனது கட்சி சார்பில், ஆறு வேட்பாளர்களை நிறுத்தினார் சாபு. இதில் எந்த வேட்பாளரும் வெல்ல முடியவில்லை என்றாலும், ஊராட்சி அளவில் இந்தக் கட்சிக்கு எர்ணாகுளம் பகுதிகளில் நல்ல செல்வாக்கு இருந்து வருகிறது. இந்தப் பகுதி மக்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கி வருவதால் இப்பகுதி மக்களிடையே, நல்ல மதிப்பு தென்படுகிறது. இது ஊராட்சி அளவில் ஆளும் மார்க்சிஸ்ட் கட்சிக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் ஆபத்தாக பார்க்கப்படுகிறது.

இந்தப் பின்னணியை அடுத்துதான் சோதனை நடத்தப்பட்டுள்ளது. என்றாலும் இந்த ஆண்டு நடத்தப்பட்ட சோதனை மட்டுமே முழு காரணம் இல்லை என்கிறார் சாபு ஜேக்கப். 'தி க்வின்ட்' தளத்துக்கு அவர் அளித்த பேட்டியில், ``கேரளாவில் நாங்கள் பெற்ற அனுபவத்தின் படியே இந்த வெளியேற்றம் நிகழ்ந்துள்ளது. கிடெக்ஸ் குழுமம் 1970களில் இருந்தே கேரளாவில் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளது. 1973, 1977, 1988, 1993, 1997 மற்றும் 2001-ஆம் ஆண்டுகளில் கேரளாவில் இதேபோன்ற பிரச்னைகளை நாங்கள் எதிர்கொண்டோம்.

ஒவ்வொரு முறையும் அரசு மாநிலத்தில் மாறும்போது, நாங்கள் சிக்கலை எதிர்கொள்வது வாடிக்கையாகிவிட்டது. ஆனால் இந்த முறை, இயல்பை விட சற்று அதிகமாகவே எதிர்கொண்டோம். அதனாலேயே இந்த முடிவு. நான் ஒரு தொழிலதிபர். வணிகத்தையும் அரசியலையும் நான் கலந்து பார்க்க நினைக்கவில்லை. எனினும், எங்கள் நிறுவனங்களில் நடத்தப்பட்ட சமீபத்திய சோதனைகள் அரசியல் நோக்கம் கொண்டவை. அரசியல் தலையீடு மற்றும் அதிகாரத்துவ தலையீடு காரணமாக அரசு அலுவலக எழுத்தாளர்கள் முதல் உயர் பதவியில் இருப்பவர்கள் வரை, அனைவரையும் நாங்கள் மகிழ்விக்க நிலை இருக்கிறது.

Witchhunt by Kerala govt makes it tough to run business, Kitex Garments withdraws from Rs 3,500cr investment

வணிகத்தை எளிதாக்குவது மேம்படவில்லை என்றால் ஒட்டுமொத்தமாக மாநிலத்தை விட்டு வெளியேறலாம். கேரளாவிலிருந்து மொத்தமாக வெளியேறுதல் என்பது இல்லை. ஆனால் மெதுவாக அதைப் பற்றி சிந்திப்போம். இப்போது, வேறு இடங்களில் 3,500 கோடி ரூபாய் முதலீடு செய்ய யோசித்து வருகிறோம். எல்லாம் சீராக நடந்தால், விரைவில் மாற்றம் நடக்கும். ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு, தெலுங்கானா, குஜராத், மத்தியப் பிரதேசம், ஒடிசா, உத்தரப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட ஒன்பது மாநிலங்களில் இருந்து முதலீட்டுக்கு அழைப்புகள் வந்துள்ளன.

எங்கும் முதலீடு செய்வதற்கு முன் தளவாடங்கள், சாத்தியக்கூறுகள் மற்றும் பிற காரணிகளை நாங்கள் பரிசீலித்து வருகிறோம். அடுத்து தெலங்கானாவில் ரூ.1000 கோடி முதலீடு செய்கிறோம். தெலங்கானாவில் ஏற்படப்போகும் முதலீடு முதல் கட்டமாகும். தெலுங்கானாவின் பதிலைப் பொறுத்து இன்னும் அதிகமாக அந்த மாநிலத்தில் முதலீடு செய்யலாம். தமிழ்நாடு மற்றும் கர்நாடகா அரசுகளும் நல்ல ஆபர்களை வழங்கி வருகின்றன. முதலீடு செய்வதற்கு முன் தளவாடங்கள், சாத்தியக்கூறுகள் மற்றும் பிற காரணிகளை நாங்கள் பரிசீலித்து வருகிறோம்.

கேரளாவில் தொடர்ச்சியான சிக்கல்களை எதிர்கொண்டாலும், எனது பூர்விகம் என்பது போன்ற உணர்வுபூர்வமான காரணங்களுக்காக தொடர்ந்து இங்கு முதலீடு செய்துவந்தோம். அப்படி செய்வதால் எம்மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்து வந்தது. இந்த நோக்கத்தினால் தான் கடந்த 52 ஆண்டுகளில் எங்களுக்கு பல பிரச்னைகள் இருந்தபோதும், இங்கே முதலீட்டை தொடர்ந்தோம். இனி கேரளாவில் ஒரு ரூபாய் கூட முதலீடு செய்ய என் மனசாட்சி என்னை அனுமதிக்காது. ஏனென்றால், முதலீட்டை ரத்து செய்வதாக அறிவித்த பின் என்னை கேரளா அரசு சார்பில் யாரும் தொடர்புகொள்ளாவில்லை. ஆனால் தெலுங்கானா, கர்நாடக, தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் இருந்து என்னை அழைத்து பேசினர்" என்று கடும் அதிருப்தி தெரிவித்திருக்கிறார்.

சாபு ஜேக்கப் இப்படி கூற, கேரள கைத்தொழில் அமைச்சர் பி ராஜீவ்வோ, ``கிடெக்ஸ் குழுமத்தின் செயல்பாடுகள் குறித்து அரசு எந்த விசாரணையையும் தொடங்கவில்லை. தொழிலாளர்கள் தவறாக நிர்வகிப்பது குறித்து பல புகார்கள் மாநில மனித உரிமைகள் ஆணையங்களுக்கு வந்ததால் மட்டுமே அந்த நிறுவனத்தின் வசதிகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. தெலங்கானாவில் முதலீடு செய்வதற்கான தனது திட்டத்தை அறிவிப்பதற்கு முன்பு ஜேக்கப் உடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு முன்வந்தது" என்று விளக்கம் கொடுத்தார்.

Kitex exits Kerala: A multi-crore blow the state could ill-afford

அதேபோல் கேரளா முதல்வர் பினராயி விஜயனும், ``கிடெக்ஸ் திரும்பப் பெறுவது கேரள மாநில அரசு மற்றும் முதலீட்டாளர் - தொழில் முனைவோர் இடையே இருக்கும் நட்பு பிம்பத்தை தடுக்கும் முயற்சியாகும். ஜேக்கப் கற்பனை செய்து பேசிவருகிறார்" என்று கூறியிருந்தார்.

மாநில அரசு விளக்கம் கொடுத்தாலும் இந்த விவகாரம் ஓயாத ஒன்றாக இருந்து வருகிறது. ஆலை வெளியேற்றத்துக்கு கேரள மாநில அரசு மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன. காங்கிரஸ் எம்.பி. சஷி தரூர், ``தொழிலதிபர்கள் முதலீடு செய்யத் தயங்கினால் நமது மாநிலத்தின் திறமையான மக்களுக்கு தகுந்த வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியாது. முதலீட்டாளர்களை ஆதரிக்க தேவையான எல்லாவற்றையும் செய்ய வேண்டும்" என்றும் பேசியிருக்கிறார்.

- மலையரசு

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்