முந்தைய திமுக ஆட்சியில் 13.89 சதவீதமாக இருந்த வருமானம், அதிமுக ஆட்சியின் இறுதியில் 4.65 சதவீதமாக சரிந்துள்ளது என்று தெரிவித்துள்ளார் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.
சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அதிமுக ஆட்சியின் நிதி நிலைமை குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட்டார். வெள்ளை அறிக்கையில் வெளியாகியுள்ள தகவல்கள் குறித்து அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறுகையில், ''கடந்த 10 ஆண்டுகளில் மாநில வரி வருவாய் வளர்ச்சி 4.4 சதவீதமாக சரிந்துள்ளது. திமுக ஆட்சிக்காலத்தில் மாநில வரி வருவாய் வளர்ச்சி 11.4 சதவீதமாக உயர்ந்திருந்தது. 4 வழிகளில் மாநில அரசுக்கு வருமானம் வருகிறது. மாநில வரி, வரியில்லா வருவாய், மத்திய அரசின் வரிப்பங்கீடு, திட்ட மானியம் ஆகியவையே வருமானத்திற்கான வழிகள். இதில் மாநில வரி வருவாயில் மிகப்பெரிய சரிவு ஏற்பட்டிருக்கிறது.
மின்துறை, போக்குவரத்துத்துறை ஆகியவற்றின் கடன் எச்சரிக்கை மிகுந்த சூழலில் உள்ளது. மாநில உற்பத்தியில் எத்தனை சதவிகிதம் என்பதை கொண்டே வருவாய் சதவிகிதம் கணக்கிடப்படுகிறது.
முந்தைய திமுக ஆட்சியில் உற்பத்தியில் 13.89 சதவீதமாக இருந்த வருமானம், அதிமுக ஆட்சியின் இறுதியில் 4.65 சதவீதமாக சரிந்துள்ளது. 2018-19 அதிமுக ஆட்சியில் வருமானம் அதிகளவில் சரிந்துள்ளது.
கடந்த 5 ஆண்டுகளில் ரூ. 39,079 கோடி மறைமுக கடனாக எடுக்கப்பட்டுள்ளது. மறைமுக கடனாக ரூ.39,079 கோடி எதற்காக எடுக்கப்பட்டது என்ற கேள்வி உள்ளது. தமிழக அரசின் நிதிப்பற்றாக்குறை ரூ.92,305 கோடியாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் ரூ.2,63,976 கடன் சுமை உள்ளது'' என நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்