தமிழக காவல் துறை டிஜிபி அலுவலகம் உட்பட தமிழகம் முழுவதும் காவல் தலைமை அலுவலகங்களில் பணிபுரியும் அமைச்சுப் பணியாளர்களின் பணித்திறனை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கும்படி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
தமிழக காவல் துறையில் காவல்துறை தலைமை அலுவலகங்களில் ஆவணப் பணிகளுக்காக அமைச்சுப் பணியாளர்கள் பணியில் உள்ளனர். சென்னை டிஜிபி அலுவலகம், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் மற்றும் தமிழகம் முழுவதும் எஸ்பி, டிஐஜி, ஐஜி அலுவலகங்களில் ஏராளமான அமைச்சுப் பணியாளர்கள் பணிபுரிகின்றனர்.
காவல் துறையினருக்கு சம்பளம் வழங்குதல், உத்தரவு ஆவணங்கள் தயாரித்தல் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகப் பிரிவு உள்ளிட்ட பணிகளை இவர்கள் மேற்கொள்கின்றனர். அந்த வகையில் காவல் அலுவலக பணியாளர்களான சூப்பிரண்டுகள், டைப்பிஸ்ட்டுகள், கம்ப்யூட்டர் ஆபரேட்டர்கள், அலுவலக இளநிலை உதவியாளர்கள் ஆகிய ஒவ்வொருவரின் தனிப்பட்ட பணித்திறன் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும்படி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
சிறப்பாக பணிபுரியும் நபர்களை பாராட்டி அவர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அடுத்த மாதம் 15ம் தேதிக்குள் அமைச்சுப் பணியாளர்களின் பணி தொடர்பான ஆய்வறிக்கையை அந்தந்த காவல் தலைமை அதிகாரியிடம் சமர்ப்பிக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.
அவர்களது பணித்திறன் அடிப்படையில் அவர்களுக்கு பதவி உயர்வு வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழகத்தில் உள்ள மாவட்ட எஸ்பிக்கள், சரக டிஐஜிக்கள், மண்டல ஐஜிக்களுக்கு, டிஜிபி அலுவலகத்தில் இருந்து அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்