Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

விரைவில் ஆன்லைன் ரம்மியை தடைசெய்யும் புதிய சட்டம் - அமைச்சர் ரகுபதி

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியை தடைசெய்ய விரைவில் புதிய சட்டம் கொண்டுவரப்படும் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்திருக்கிறார்.

கோவையில் தனியார் வங்கியில் பணியாற்றிவந்த ரவி என்ற இளைஞர், கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்ததால மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்டது. இவரைப்போலவே, அடுத்தடுத்து ஆன்லைன் ரம்மியால் இருவர் தற்கொலை செய்துகொண்டனர் எனவும் கூறப்பட்டது.

இதனால் ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு தடை விதித்து அப்போதைய அதிமுக அரசு அவசர சட்டம் பிறப்பித்தது. இதற்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தும் ஒப்புதல் அளித்திருந்தார். அதன்படி, ஆன்லைன் ரம்மி விளையாடுவோருக்கு ரூ.5 ஆயிரம் அபராதமும், 6 மாத சிறைத்தண்டனையும் அளிக்கப்படும். ரம்மி விளையாட்டை நடத்தும் நிறுவனப் பொறுப்பாளர்கள் ரம்மி விளையாட்டரங்கம் வைத்திருந்தால், 10 ஆயிரம் அபராதத் தொகையும் 2 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்றும் கூறப்பட்டிருந்தது.

ஆன்லைன் ரம்மி, போக்கர் போன்ற சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதித்து கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் 21-ம் தேதி தமிழக அரசு சட்டம் இயற்றியது. இந்த சட்டத்தை ரத்து செய்யக்கோரி ஜங்லி கேம்ஸ், ப்ளே கேம்ஸ், ரீட் டிஜிட்டல் ஆகிய நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடைவிதித்து பிறப்பிக்கப்பட்ட சட்டத்தை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. மேலும், ஆன்லைன் விளையாட்டுகளுக்கு ஒட்டுமொத்தமாக தடை விதிக்கமுடியாது எனவும், புதிய சட்டம் கொண்டுவர தமிழ்நாடு அரசுக்கு எந்த தடையும் இல்லை எனவும் உயர் நீதிமன்றம் தெரிவித்தது.

இந்நிலையில், தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியை தடைசெய்ய விரைவில் புதிய சட்டம் கொண்டுவரப்படும் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தற்போது தெரிவித்திருக்கிறார். அவசர கதியில் அதிமுக அரசு சட்டம் கொண்டுவந்த காரணத்தினாலேயே சென்னை உயர்நீதிமன்றம் அதனை ரத்து செய்துள்ளது எனவும் அமைச்சர் ரகுபதி கூறினார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்