ஆப்கானிஸ்தானின் இரண்டாவது பெரிய நகரமான கந்தஹாரை தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். இதன் மூலம் மொத்தம் உள்ள 34 மாகாண தலைநகரங்களில் 12 தலைநகரங்கள் தலிபான்கள் வசம் சென்றுள்ளன.
கந்தஹார் தலிபான் வசம் சென்றதை அடுத்து, அரசு அதிகாரிகள் விமானம் மூலம் அங்கிருந்து தப்பிச் சென்றிருப்பதாக தெரியவந்துள்ளது. அதே போல் தலைநகர் காபூல் அருகே உள்ள மூன்றாவது பெரிய நகரமான ஹீரத்தையும் தலிபான்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். அடுத்தடுத்து முக்கிய நகரங்களை தலிபான்கள் கைப்பற்றி வருவதை அடுத்து, அங்குள்ள அமெரிக்கப் படைகள் பாதுகாப்பாக நாடு திரும்புவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இது தொடர்பாக வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த பென்டகன் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி, காபூலில் இருந்து அமெரிக்க தூதரக அதிகாரிகள், ஊழியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார். அதே போல், பிரிட்டனும் தங்கள் நாட்டு மக்களை பாதுகாப்பாக அழைத்து வர 600 ராணுவ வீரர்களை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பி வைத்துள்ளது.
இதற்கிடையே மீண்டும் ஷரியத் சட்டத்தை அமல்படுத்தி கொடூர செயல்களில் தலிபான்கள் ஈடுபடலாம் என்ற அச்சத்தால் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்களை வீடுகளை காலி செய்து, வேறு நகரங்களுக்கு புலம்பெயர்ந்து வருகின்றனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்