அறிவியல், கலை, மருத்துவத்தில் மிகச் சிறந்து விளங்கிய நாடு இந்தியா. நம்முடைய முன்னோர்கள், அவர்களின் வாழ்வியலோடு கலையையும் பாதுகாத்து வாழ்ந்து வந்தனர். அவர்களின் படைப்புகளால் உருவான சிற்பங்கள், ஓவியங்கள் அனைத்தும் இன்றளவும் நம்முடைய பாரம்பரியத்தின் பெருமைகளைப் பறைசாற்றி வருகின்றன. பொதுவாக ஒரு ஓவியமோ அல்லது சிற்பமோ கலாசாரத்தையும், மக்களின் வாழ்க்கையையும் பிரதிபலிக்கக்கூடியவை. தான் கற்றுக்கொண்டதையும், அதனால் கிடைத்த அறிவையும் அடுத்த தலைமுறைக்கு விட்டுச்செல்லும் குறிப்புகளாக மட்டுமே கலையைப் பார்த்தனர் நம் முன்னோர்கள். அதன் அடிப்படையில், மகாராஷ்டிரா மாநிலம் ஔரங்காபாத்தில் உள்ள அஜந்தா குடைவரைக் குகைகளில் உள்ள ஓவியங்களும், சிற்பங்களும், நம் முன்னோர்கள் நமக்கு விட்டுச் சென்ற கலைப் பொக்கிஷங்கள் என்றே கூறலாம்.
மகாராஷ்டிரா மாநிலம் குப்தர்கள், லோடிகள், மராத்தியர்கள், ஆங்கிலேயர்கள் என பல்வேறு ஆட்சிக்குக் கீழ் இருந்தாலோ என்னவோ கலாசாரங்கள், கலைகள், கட்டிடக் கலைகள் எனப் பலவற்றிலும் சிறப்பு மிக்கதாகவே உள்ளது. அஜந்தா குடைவரைக் குகைகளை 1983-ஆம் ஆண்டு யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய இடமாக ஏற்கப்பட்டு, இந்தியாவின் பாதுகாக்கப்பட்ட இடங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டது. அழகும், வசீகரமும், எண்ணிலடங்கா பிரமாண்டங்களையும் பிரதிபலிக்கும் அஜந்தா குகைகளின் வரலாற்றைப் பற்றியும், அதில் உள்ள சிறப்புகளைப் பற்றியும் இந்த அத்தியாயத்தில் விரிவாக அறிவோம் வாருங்கள்.
மகாராஷ்டிரா மாநிலம் ஔரங்காபாத்திலிருந்து 110 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது அஜந்தா என்னும் கிராமம். அஜந்தா கிராமத்திலிருந்து, 12 கி.மீ தொலைவில் உள்ள மலைச்சரிவுகளில் பாறைகளைக் குடைந்தெடுத்து உருவாக்கப்பட்ட 30 குடைவரைக் கோயில்கள் அஜந்தாவை அலங்கரிக்கின்றன. இந்த குடைவரைக் கோயில்கள் அனைத்தும் மழைக் காலங்களில் புத்தமதத் துறவிகள் ஓய்வெடுக்கும் உறைவிடங்களாகவும், தியானம் செய்யும் இடங்களாகவும் பயன்படுத்தியதற்கான குறிப்புகள் இருக்கின்றன. ஒவ்வொரு குடைவரைக் குகையிலும் புத்தரின் வாழ்க்கையில் நிகழ்ந்த பல்வேறு வரலாற்றுச் சம்பவங்களைச் சித்தரிக்கும் வகையில் சிற்பங்களும், ஓவியங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. இவையனைத்தும் கி.மு 2 முதல் கி.பி. 6 ஆம் நூற்றாண்டு வரை பல்வேறு கட்டங்களாக சிற்பங்களும் ஓவியங்களும் உருவாக்கப்பட்டதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அஜந்தா மீட்கப்பட்ட வரலாறு:
1819-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில், கோடை வெயிலில் புலி ஒன்றை துரத்திக் கொண்டு ஓடிக்கொண்டிருந்தார் பிரிட்டன் அதிகாரியான ஜான் ஸ்மித். காலையிலிருந்து அவரிடம் போக்கு காட்டியபடி புலி ஓடிக் கொண்டிருந்ததால், மிகவும் களைத்துப் போயிருந்தார். அப்போது அங்கே, மாடு மேய்த்துக் கொண்டிருந்த சிறுவனிடம் தண்ணீர் வாங்கி குடித்தார். அப்போது, அந்த சிறுவன் 'இங்க புலிங்க மறைஞ்சிருக்கும் குகைகள் நிறைய இருக்கு. அங்க பூதம், பேய்லாம் இருக்கும்னு சொல்லுவாங்க. அங்கதான், அந்தப் புலி ஓடிப்போயிருக்கும். அங்க வேணும்னா போய்ப் பாருங்க' என்று சொல்ல, வேட்டையாட தன்னுடன் துணைக்கு வந்தவர்களை கூட்டிக்கொண்டு அந்தக் குகைகள் இருக்கும் இடத்தை தேடி சென்றார் ஸ்மித். அங்குச் சென்றதும் வியப்பில் ஆழ்ந்தார். அவர் இருந்த இடத்தை சுற்றிலும் குடைவரைகள் வரிசையாக இருந்தன. அதில், வண்ண வண்ண ஓவியங்களும், பிரமாண்ட புத்தர் சிலைகளும் நிறைந்திருந்தன. அவர் சென்ற குகை நுழைவாயிலின் எண் 10. அந்தக் குகையினை அருகிலுள்ள கிராம மக்களின் உதவியுடன் சுத்தம் செய்து, ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக, பள்ளத்தாக்கில், புதர்களுக்குள் மறைந்து கிடந்த குடைவரைகள் அனைத்தையும் உலகிற்கு அறிமுகப்படுத்தினார் ஸ்மித். அன்று ஸ்மித் கண்டுபிடித்த குகைகளே, இப்போது உலகம் வியக்கும் அஜந்தா குகைகள்.
அஜந்தா குகைகள் வகோரா நதியின் பள்ளத்தாக்கில் சயாத்ரி குன்றின் மேல் அமைந்துள்ளன. போதிசத்வரின் ஓவியம் இருந்த குகை சுவர் ஒன்றில் ஸ்மித் தனது பெயரை எழுதிவைத்தார். எல்லா குகைகளும் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, இந்தக் குகைகள் அனைத்தும் 1 முதல் 29 வரை வரிசையாக எண்ணப்பட்டன. பின்னர், இடையிடையே வேறு சில குகைகளும் கண்டுபிடிக்கப்பட்டன. அவை 14A போன்ற எழுத்துகளின் பின்னொட்டுடன் எண்ணப்பட்டன. இது 14 ,15 எண் கொண்ட குகைகளுக்கு இடையில் காணப்பட்டது. இந்த எண்ணிக்கைகள் அனைத்தும், குகைகள் கட்டப்பட்ட வரிசை அல்ல, குகைகள் கண்டுபிடிக்கப்பட்ட வரிசை.
மிகப் பெரிய தூண்களுடன் கூடிய மண்டபங்கள், புத்தரின் சிலைகள், கண்கவரும் ஓவியங்கள் என ஒவ்வொரு குகையும் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. அஜந்தா ஓவியங்களில் அடர்ந்த ஆரஞ்சு, நீலம், பச்சை போன்ற நிறங்கள் அதிகமாகக் காணப்படுகின்றன. முதலில் உளியால் பாறைகளைச் செதுக்கி, அதன்மீது களிமண், சுண்ணாம்பு, வைக்கோல் துகள், சாணம் ஆகியவற்றால் தயாரித்த கலவையைப் பூசியுள்ளனர். அவையனைத்தும் ஈரமாக இருக்கும்போதே இயற்கையான வண்ணங்களை வைத்து ஓவியங்களைத் தீட்டியுள்ளனர். 1,500 ஆண்டுகள் கடந்தும் இந்த ஓவியங்கள் நிலைத்து இருப்பதற்குக் காரணம், அந்த கலைஞர்களின் இந்த நுட்பமே என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இங்குள்ள குகைகள் இரு காலகட்டங்களில் கட்டப்பட்டுள்ளன. கி.மு. 2-ம் நூற்றாண்டில் சாதவாகன மன்னர்கள் 9, 10, 12, 13 மற்றும் 15A எண்களுடைய குகைகளை அமைத்திருக்கிறார்கள். கி.பி. 5-ம் நூற்றாண்டில் ஹரிசேனா மன்னர் 20-க்கும் அதிகமான குகைகளை அமைத்துள்ளார். கி.பி 7-ம் நூற்றாண்டில் இந்தியா வந்த சீனப் பயணி யுவான் சுவாங் அஜந்தா குகைகளைப் பார்வையிட்டிருக்கிறார்.
குகைகளின் சிறப்பம்சங்கள்:
கோரா நதியின் இரண்டு கரைகளிலும் குதிரையின் பாதத்தைப் போன்று நீண்டு இருக்கும் உயரமான மலையின் சரிவில் வரிசையாகக் காணப்படுகின்றன இக்குடைவரைகள். இதுவரை சுமார் 30 குடைவரைக் கோயில்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலான குகைகள், சைத்யங்கள் என்று அழைக்கப்படுகின்றன. அதாவது பௌத்த வழிபாட்டுத் தலங்கள். இதுதான் உலகின் முதல் புத்த பெரிய கட்டுமான ஆலயமாகவும் கருதப்படுகிறது. தற்போது இங்குள்ள குகைகளை இந்தியத் தொல்பொருள் துறையினர் பராமரித்து வருகின்றனர்.
அஜந்தாவில் காணப்படும் புத்தர் சிலைகள் பெரும்பாலும் ஒரு பக்கத்திலிருந்து பார்த்தால் புன்னகைப்பது போலவும், மறுபக்கத்திலிருந்து பார்த்தால் சோகத்துடன் இருப்பது போலவும் அமைக்கப்பட்டிருக்கின்றன. அஜந்தா குகைகளிலேயே தனிச்சிறப்பு மிக்க சிற்பமாகக் கருதப்படுவது, எண் 26-ம் குகையில் உள்ள புத்தரின் பரிநிர்வாணக் காட்சிதான். புத்தர் இறப்பதற்கு முன்பு ஒரு பக்கமாகப் படுத்திருக்கிறார். அவருக்குக் கீழே அவரது சீடர்கள் அனைவரும் சோகத்துடன் அமர்ந்திருக்கிறார்கள். ஆனால், அவருக்கு மேலே, வானுலகத் தேவர்கள் அனைவரும் அவரது வருகையை எதிர்பார்த்து புன்னகையுடன் காத்திருக்கிறார்கள். இப்படி அந்தக் குகை முழுவதுமே உயிரோட்டமான சிற்பங்கள் நிறைந்துள்ளன. இங்கு, பெரும்பாலும் புத்தர் தொடர்பான கதைகளைக் கூறும் புத்த ஜாதகக் கதைகளே, ஓவியங்களாகத் தீட்டப்பட்டிருக்கின்றன. அதிலும் குறிப்பாக, மனநிலைக்கு ஏற்றவாறு பெண்களின் முகத் தோற்றத்தையும் தீட்டியிருக்கிறார்கள் ஓவியர்கள். அந்த ஓவியங்களில் உலகப் புகழ் பெற்றவை 17-வது குகையில் வரையப்பட்டிருக்கும் `வஜ்ரபாணி' மற்றும் `தாமரை மலருடன் காட்சி தரும் பத்மபாணி' ஓவியங்களே. குகைகளின் மேற்சுவரில் பூக்கள், பழங்கள், விலங்குகள் மற்றும் புராணக் கதைகளில் வரும் உயிரினங்களின் உருவங்களும் ஓவியங்களாகப் பதிக்கப்பட்டுள்ளது.
அங்கிருக்கும் அனைத்துக் குகைகளையும், அதில் காணப்படும் சிற்பங்கள் மற்றும் ஓவியங்களையும் பார்த்தப்பின், பள்ளத்தாக்கினுள் கீழிறங்கினால் வகோரா நதி மலை மீதிருந்து விழும் இடத்தை அடைய முடியும். நம் கண் எதிரே, தலைக்கு மேலே நிற்கும் உயர்ந்த மலை, அதை இரண்டாகப் பிளந்து ஓடும் வகோரா நதி, அதன் கரையில் அமைந்திருக்கும் குகைகள் என பார்ப்பதற்கே கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும் இடம்தான் அஜந்தா குகைகள்.
சுற்றுலாப் பயணிகள் கவனத்துக்கு...
சுற்றுலாப் பயணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த குகைகளைப் பார்வையிடலாம். சென்னையிலிருந்து பயணம் செய்கிறீர்கள் என்றால் 1,280 கி.மீ பயணத்தில் அஜந்தா உங்களை வரவேற்கும். மும்பையிலிருந்து 430 கிலோ மீட்டர் பயணத்தில் அஜந்தா கிராமத்தை அடையலாம். விமானம் மூலம் அவுரங்காபாத் சென்று அங்கிருந்து பேருந்து அல்லது வண்டி மூலம் அஜந்தாவை அடையலாம். அதேபோல், அஜந்தாவிற்கு அருகில் உள்ள ரயில் நிலையம் ஜல்கான் ஆகும். ஜல்கான் ரயில் நிலையத்திலிருந்து 52 கிமீ தொலைவில் அஜந்தா குகைகள் அமைந்துள்ளன.
கட்டணம்:
அஜந்தா குகைகளைச் சுற்றிப் பார்க்க விரும்பும் இந்தியப் பயணிகளுக்கு 40 ரூபாயும், இணையதளத்தில் முன்பதிவு செய்பவர்களுக்கு 35 ரூபாயும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பிற நாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு 600 ரூபாயும், இணையதளத்தில் முன்பதிவு செய்பவர்களுக்கு 550 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அதேபோல், குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, கார் பார்க்கிங் வசதி என பல்வேறு வசதிகள் தேவைப்படுவோருக்கு என 850 ரூபாய் மதிப்பிலும் டிக்கெட் விற்கப்படுகிறது. 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு நுழைவுக் கட்டணம் கிடையாது. சுற்றுலாவிற்குச் செல்ல விரும்புபவர்கள் https://asi.payumoney.com/tickets என்ற இணையதளம் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்துகொள்ளலாம்.
மலையேற்றத்தில் விருப்பம் இருப்பவர்கள், மலையேற்றம் மேற்கொள்ளவும் வழிவகை செய்திருக்கிறார்கள் தொல்லியல் துறையினர். சாகசம், பயணம், இந்தியத் தொன்மை, வரலாறு, ஓவியங்கள், சிற்பங்கள் மற்றும் இயற்கை மீது ஆர்வம் கொண்டவர்கள் நிச்சயம் வாழ்வில் ஒரு முறையாவது காண வேண்டிய இடம் அஜந்தா குடைவரைகள்.
(உலா வருவோம்...)
முந்தைய அத்தியாயம்: இந்திய பாரம்பரிய இடங்கள் 2: ஆக்ரா கோட்டை - பேரரசர்களை மயக்கிய கனவுக் கோட்டை!
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்