மத்திய அரசின் மீன்வள மசோதா 2021-க்கு எதிர்ப்பு தெரிவித்து கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள பள்ளம்துறை மீனவர் கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசு தேசிய கடல் மீன்வள ஒழுங்குமுறை மற்றும் மேலாண்மை மசோதா 2021-ஐ நாடாளுமன்றத்தில் அமல்படுத்த உள்ளது. இந்த மசோதாவில் இடம்பெறும் பல விதிமுறைகள் மீனவர்களை பாதிக்கும் வகையில் அமைந்துள்ளன என குற்றம்சாட்டி மீனவ மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதில், குறிப்பாக கடற்கரையிலிருந்து 12 கடல் மைலுக்கு அப்பால் (22 கி.மீ.) மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லக்கூடாது; மீறினால் கடும் அபராதம் விதிக்கப்படும்; படகிலுள்ள அனைவரும் கைது செய்யப்படுவர் என அந்தச் மசோதா கூறுகிறது. மீனவர்கள் மீன்பிடித் தொழிலுக்காக கடலுக்குச் செல்லும் ஒவ்வொரு முறையும் அரசிடம் அனுமதி பெற வேண்டும். இதில், விதி மீறினால் தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படும்.
அதேபோல் வெளிநாட்டு மீன்பிடி கப்பல்கள் குறிப்பிட்ட கடல்பகுதிகளில் ஆதிக்கம் செலுத்த முடியும். இதன் மூலம் மீன் பிடிக்கும் உரிமையை பாமர ஏழை மீனவர் மக்களிடமிருந்து பறித்து, கார்ப்பரேட் முதலாளிகளுக்கு அளிக்கும் மசோதாவாக இது உள்ளதாகக் கூறி இன்று குமரி மாவட்டம் முழுவதும் மீனவ மக்கள் சார்பில் போராட்டகள் நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக நாகர்கோவில் அருகே உள்ள பள்ளம்துறை மீனவர் கிராமத்தில் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து 200-க்கும் மேற்பட்ட மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கரைகளில் நிறுத்தப்பட்டுள்ள படகுகளில் கருப்புக் கொடி கட்டி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்