முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் சொத்துக் கணக்குகளை ஆய்வு செய்கிறது லஞ்ச ஒழிப்புத்துறை. வங்கி லாக்கர்களையும் சோதனை செய்ய திட்டமிட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் எஸ்பி.வேலுமணிக்கு தொடர்புள்ள 60 இடங்களில் நேற்று லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். சென்னை மாநகராட்சி மற்றும் கோயம்புத்தூர் முனிசிபல் கார்ப்பரேஷன் ஆகியவற்றில் 811 கோடி ரூபாய் டெண்டர் விவகாரத்தில் ஊழல் செய்திருப்பதாக இந்த சோதனை நடைபெற்றது.
இதையடுத்து சோதனையின் முடிவில் கணக்கில் காட்டப்படாத 13 லட்சம் ரொக்கம், நிறுவனங்களின் பணபரிவர்த்தனைகள், 2 கோடி வைப்பு;j தொகை ஆவணங்கள், மாநகராட்சி சம்பந்தப்பட்ட ஆவணங்கள், ஹார்டிஸ்க், வங்கி லாக்கர் சாவி உள்ளிட்ட பல முக்கிய ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்யும் பணியில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக அறக்கட்டளை மூலமாக பணப்பரிவர்த்தனைகள் நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், வங்கி லாக்கரில் அது தொடர்பான ஆவணங்கள் உள்ளதா என வேலுமணி மற்றும் அவரது குடும்பத்தினரின் வங்கி லாக்கர்களை சோதனை செய்ய லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் முடிவு செய்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து எஸ்பி வேலுமணியின் சொத்து விவரங்கள் தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்ய உள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.
இதனிடையே எஸ்பி வேலுமணி உட்பட 17 பேர் மீது இந்திய தண்டனை சட்டப்பிரிவு 120(பி) - கூட்டு சதி, 420 - மோசடி, 409 - நம்பிக்கை மோசடி, 109 - அரசு ஊழியர் லஞ்சம் பெற்றுக் கொண்டு சாதகமாக செயல்படுதல் மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் 2 பிரிவுகள் என மொத்தம் 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், சொத்துக் குவிப்பு வழக்குப்பதிவு செய்யப்படவில்லை.
இந்நிலையில், அவரின் குடும்பத்தினர் குறித்த சொத்து ஆவணங்களை ஆய்வு செய்ய உள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. கடந்த தேர்தல்களில் அவர் தாக்கல் செய்த ஆவணங்களை கைப்பற்றி ஆய்வு செய்யும் பணியில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள எஸ்பி.வேலுமணி உள்பட 17 பேருக்கும் தனித்தனியாக சம்மன் கொடுத்து விசாரணை நடத்தவும் லஞ்ச ஒழிப்புத்துறை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய சோதனையிலேயே எஸ்பி.வேலுமணி தொடர்பான சோதனையே பெரிய சோதனை என்று கூறப்படுகிறது. வருமானவரித் துறை சோதனைக்கு இணையாக 60 இடங்களில் நடந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்