ஏப்ரல் - ஜூன் காலகட்டத்தில் இந்தியாவில் 120.4 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 10.9 டன் தங்கம் மட்டுமே இறக்குமதி செய்யப்பட்டிருந்தது. இந்திய மக்களுக்கு தங்கத்தின் மீதான மோகம் எப்போதும் குறைவதேயில்லை என்பதை நிரூபிக்கும் விதமாக, கொரோனா பெருந்தொற்றுக் காலத்திலும் இந்திய மக்கள் அதிக அளவில் தங்கத்தை வாங்கியிருக்கிறார்கள் என்கிறது சமீபத்திய உலக தங்க கவுன்சிலின் அறிக்கை.
இந்த அறிக்கையின்படி, இந்தியாவில் தங்கம் இறக்குமதி செய்வதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் இருந்தாலும், இந்தியாவில் தங்கத்திற்கான தேவை 19.2% அதிகரித்து, கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் 76.1 டன்னாக உயர்ந்துள்ளது. இதனுடைய மதிப்பு ரூ.32,810 கோடியாகும். கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் இது ரூ.26,600 கோடியாக இருந்தது.
ஆபரணத் தங்கத்தின் தேவை கடந்த 2020-ம் ஆண்டைவிட தற்போது 25% அதிகரித்து, 55.1 டன்னாக உயர்ந்துள்ளது. இதனுடைய மதிப்பு கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, 29% அதிகரித்துள்ளது.
இந்நிலையில், தங்கம் விலை கடந்த 10 நாள்களில் சவரனுக்கு ரூ.1,400 அளவில் விலை குறைந்துள்ளது. கொரோனா பேரிடர் தாக்கத்தால் கடந்த ஆண்டில் தங்கம் விலை வரலாற்று உச்சத்தை தொட்டது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 5,365 ரூபாய்க்கு வர்த்தகமானது. ஆனால், இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,372-க்கு ரூபாய்க்கு விற்பனையாகிறது.
தொழில்துறை தேக்கத்தைத் தொடர்ந்து உலகம் முழுவதுமே தங்கம் விலையில் நிலையற்றத்தன்மை நிலவுகிறது. முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளில் கவனம் செலுத்த முடிவெடுத்து, பங்குச் சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என இருந்த முதலீடுகளை மாற்றித் தங்கத்தில் முதலீடு செய்யத் தொடங்கினர். இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்து, அதன் விலை கணிசமாக உயர்ந்து வந்தது.
கொரோனா வைரஸ் பாதிப்பால் ஏற்பட்ட பீதியாலும் தங்கம் விலையில் ஏற்ற இறக்கங்கள் நிலவி வந்தன. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் கொரோனா எதிரொலியாக வங்கி வட்டி விகிதங்கள் பெருமளவு குறைந்துள்ளன. இதனால் அந்நாடுகளின் முதலீட்டாளர்கள், முதலீட்டு நிறுவனங்கள் தங்கத்தை வாங்கி வருகின்றன. பங்குச்சந்தைகள் சில நாட்களாக உயர்ந்து வரும் நிலையில், தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது.
ஆபரணத் தங்கத்தின் விலை 4 நாட்களில் பவுனுக்கு ரூ.1,144 சரிவடைந்துள்ளது. தங்கம் விலையில் கடந்த மாதம் தொடர்ந்து உயர்வு காணப்பட்டு சவரன் ரூ.36,000-ஐ தாண்டிவிட்டது. இதற்கிடையே இந்த மாத தொடக்கம் முதல் விலையில் ஏற்றத்தாழ்வு நிலவி வந்தது. சில நாட்களாக தங்கம் விலையில் தொடர்ந்து குறைவு காணப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், கடந்த 4-ம் தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.4,531-க்கும், சவரன் ரூ.36,248-க்கும் விற்கப்பட்டது. 5-ம் தேதி தங்கம் கிராமுக்கு 8 குறைந்து ஒரு கிராம் ரூ.4,523-க்கும், சவரனுக்கு ரூ.64 குறைந்து ஒரு சவரன் ரூ.36,184க்கும் விற்கப்பட்டது. 6-ம் தேதி கிராமுக்கு 22 குறைந்து ஒரு கிராம் ரூ.4,501-க்கும், சவரனுக்கு ரூ.176 குறைந்து ஒரு சவரன் ரூ.36,008-க்கும் விற்கப்பட்டது. 7-ம் தேதி தங்கம் விலை கிடு, கிடுவென சரிவை சந்தித்தது. அதாவது, கிராமுக்கு ரூ.61 குறைந்து ஒரு கிராம் ரூ.4,440-க்கும், சவரனுக்கு ரூ.488 குறைந்து ஒரு சவரன் ரூ.35,520க்கும் விற்கப்பட்டது. இதே சரிவு நிலை நீடித்து, சென்னையில் நேற்றைய நிலவரப்படி, 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.18 ரூபாய் ரூ.4,373-க்கு, அதாவது ஒரு சவரன் 144 ரூபாய் விலை இறங்கி ரூ.34,984-க்கு விற்கப்பட்டது. இப்படி தொடர்ச்சியாக 5 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,250-க்கும் மேலாக குறைந்துள்ளது.
தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள இந்த ஏற்றம், இறக்கம் குறித்து சென்னை தங்கம், வெள்ளி வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயந்திலால் சலானியை தொடர்பு கொண்டு கேட்டபோது, "கொரோனா காலகட்டத்தில், பங்குச் சந்தை மற்றும் பங்குச் சந்தை சார்ந்த முதலீடுகளைத் தவிர்த்து, பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை நினைத்து, முதலீட்டாளர்கள் அதிக அளவில் அதில் முதலீடு செய்தனர். இதனால் தங்கத்தின் விலை வரலாறு காணாத ஏற்றத்தைச் சந்தித்தது.
அதன்பிறகு, கொரோனாவின் தாக்கம் மெல்ல மெல்ல குறைய, மீண்டும் பங்குச் சந்தை மற்றும் அது சார்ந்த முதலீடுகள் ஏற்றத்தைச் சந்திக்க, முதலீட்டாளர்களின் கவனம் தங்கத்தின் மீதிருந்து மற்ற முதலீடுகளின் மீது திரும்பியது. அதேநேரத்தில் ரியல் எஸ்டேட், அமெரிக்காவின் புதிய வேலை வாய்ப்பு காரணமாகவும், ராக்கெட் வேகத்தில் ஏறிய தங்கத்தின் விலை, மளமளவெனச் சரிய ஆரம்பித்தது. தொடர்ந்து சரிந்துகொண்டே இருக்கிறது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இதே தேதியில் தங்கம் விற்பனையான விலையுடன், தற்போது விற்பனையாகும் தங்கத்தின் விலையை ஒப்பிடும்போது, ஒரு சவரனுக்கு ரூ.7,936 குறைந்து வர்த்தகமாகிறது. கடந்த 10 நாள்களில் மட்டும் ரூ.1,400 குறைந்துள்ளது.
இந்த வாரம் முழுவதும் தங்கம் விலை குறைந்து வருவதால், தங்க நகைகளை அதிகம் வாங்க நினைப்பவர்களுக்கும், முதலீட்டாளர்களுக்கும் இது பொன்னான நேரம். வரும் காலங்களிலும் திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகள் வரவிருப்பதால் தங்கத்தின் தேவை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அதேபோல் முதலீடுகளும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது" என்றார்.
பணத்தை முதலீடு செய்ய பல வழிகள் இருப்பினும், தங்கத்தில் முதலீடு செய்வதுதான் இன்றும் பல தரப்பு மக்களின் முதல் திட்டமாக இருக்கிறது. ஆனால், ஆபரணத் தங்கமும் முதலீடுதான் என்று பலரும் தவறாகப் புரிந்துகொண்டிருக்கின்றனர். அவர்களுக்கான எளிய வழிகாட்டுதல் இங்கே > ஆபரணம் வாங்குவது முதலீடு ஆகாது. ஏன்? - தங்கத்தில் முதலீடு செய்ய எளிய வழிகாட்டுதல்!
- ஜெனிபர் டேனியல்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்