கோடநாடு வழக்கில் தன்னை சேர்க்க சதி நடந்து வருவதாக எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்
கோடநாடு விவகாரம் தொடர்பாக தொடர்ந்து பேச அனுமதி மறுக்கப்பட்டதையடுத்து அதிமுகவினர் சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்டனர். இதனால் சபாநாயகர் அதிமுகவினரை வெளியேற்ற அவைக்காவலர்களுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து அவையில் இருந்து வெளீயேறிய அதிமுகவினர் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி, ''மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அவ்வப்போது கோடநாட்டுக்கு சென்று ஓய்வெடுப்பது வழக்கம். அவரது மறைவுக்கு பிறகு, அந்த கோடநாடு வீட்டில் சில கொள்ளை கும்பல், சயன் மற்றும் அவரது கூலிப்படையைச் சேர்ந்தவர்கள், ஜெயலலிதா தங்கியிருந்த இல்லத்தில் கொள்ளையடிக்க முயற்சி செய்திருக்கிறார்கள். அப்போது காவலாளியை தாக்கி அவர்கள் கொலை செய்துள்ளனர்.
கொலை, கொள்ளை தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. வழக்கு முடியும் தருவாயில் இருக்கும் இந்த சூழலில், திமுக வேண்டுமென்றே சயனுக்கு சம்மன் அனுப்பியிருக்கிறது. ரகசிய வாக்குமூலம் பெற்றிருப்பதாக செய்தி வெளியாகியிருக்கிறது. அதில் என்னையும், அதிமுகவினர் சிலரையும் சேர்த்துள்ளதாக பத்திரிகையில் செய்தி வெளியாகியிருக்கிறது. இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.
முக்கிய சாட்சிகள் விசாரிக்கப்பட்டு வழக்கு முடியும் நிலையில், 27ம் தேதி வழக்கு விசாரணைக்கு வரும் இந்த சூழலில் திமுக வேண்டுமென்றே அதிமுக தலைவர்கள் மீது வழக்கு பதிவு செய்து அச்சுறுத்த முயற்சிக்கிறது. அதிமுக அரசு நியாயமான முறையில் இந்த வழக்கை விசாரித்தது. கோடநாடு குற்றவாளிகளை காப்பாற்ற கடந்த காலங்களில் திமுக முயற்சித்ததை யாரும் மறக்க முடியாது. இந்த வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் 3 முறை தெரிவித்திருக்கிறது.
இப்படிப்பட்ட நிலையில், வேண்டுமென்றே மறுவிசாரணையை திமுக கோரியது. ஆனால், நீதிமன்றம் அனுமதிக்கவில்லை. ஸ்டாலின் அரசு அதிமுக மீது வீண் பழி சுமத்தபார்க்கிறது. அதிமுக எதற்கும் அஞ்சியது கிடையாது. பல எதிர்ப்புகளை கடந்துவந்த கட்சி அதிமுக. அதேபோல எல்லா தடைகளையும் தகர்ப்போம்.
வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல், அதனை மறைக்க இப்படியான அரசியல் நாடகத்தை திமுக நடத்தி வருகிறது.எங்களுக்கே இந்த நிலைமை என்றால் சாதாரண மக்களின் நிலைமையை சொல்லி தெரிய வேண்டியதில்லை. ஏற்கனவே நீதிமன்ற விசாரணையில் சயான் எதுவும் கூறாத நிலையில் மீண்டும் போலீஸ் விசாரணை ஏன்'' என அவர் கேள்வி எழுப்பினார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்