ஓடிடி தளங்களைப் பொறுத்தவரை ஃபீல் குட் படங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. ஓடிடியில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன சமீபத்திய பல மலையாளப் படங்கள் ஃபீல் குட் படங்களாக இருப்பதை நாம் கவனிக்கலாம். அது போல தெலுங்கில் இவ்வாண்டு மெரிஸ் மெரிஸ் எனும் ஃபீல் குட் சினிமா வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அமேசானில் காணக் கிடைக்கும் இத்திரைப்படத்தில் தினேஷ் தேஜ், ஸ்வேதா அவஸ்தி, மணி எகுர்லா, பாலு, பிரசாத் போலி செட்டி, ஸ்ரீ தேவி தேசாய் ஆகியோர் நடித்திருக்கின்றனர். இப்படத்தை இயக்கி இருக்கிறார் பவன் குமார்.
இளமையும் கொண்டாட்டமும் நிறைந்த இப்படத்தில் தோன்றும் பொறுப்புள்ள இளைஞர்கள் தங்களின் எதிர்காலம், திருமண வாழ்க்கை குறித்த சரியான முடிவுகளை எடுக்கும் தருணங்கள் குறித்து அழகாக பேசுகிறது மெரிஸ் மெரிஸ்.
நாயகி வெண்ணிலாவுக்கு தான் ஒரு பேஷன் டிசைனர் ஆக வேண்டும் என்ற கனவு. சித்துவிற்கு தொழிலில் எப்படியும் ஒரு நல்ல இடத்திற்கு வந்துவிட வேண்டும் என்கிற ஆசை. திருமணம் முடிவானதற்கும் திருமண நாளுக்கும் இடையில் வெண்ணிலாவுக்கு சித்துவின் மீது காதல் பிறக்கிறது. வெண்ணிலாவை திருமணம் செய்ய இருந்த லண்டன் மாப்பிள்ளை போடும் ரூல்ஸ் கெடுபிடிகளில் இருந்து வெண்ணிலா தன்னை விடுவித்து சிறகடிக்கும் ஒரு நாளில் படம் நிறைவடைகிறது. நாகேஷ் பனேலின் ஒளிப்பதிவும் கார்திக் கோடகண்ட்லாவின் இசையும் படத்துக்கு பலம்.
தொழில் முயற்சிகளில் நண்பனாக வந்து சேர்கிறார் சித்து. அவருக்கும் வெண்ணிலாவுக்கும் இடையில் உருவாகும் நட்பு காதலாக மலரும் காட்சிகளை நோக்கி கலர்புல்லாக நகர்கிறது திரைக்கதை. எம்.எல்.ஏ மகனாக வருபவரின் நகைச்சுவை. சித்துவின் மார்டன் அப்பா என சில கதாபாத்திரங்கள் ரசிக்க வைக்கிறது. படத்தின் திரைக்கதை சுவாரஸ்யமாக அமைந்தாலும் படத்தின் கதை என்னவோ பழைய டெம்ப்ளேட் தான்.
இந்திய மொழிகள் அனைத்திலும் அரைத்த மாவை மீண்டும் தெலுங்கில் அரைத்திருக்கிறார்கள். பொதுபோக்காக படம் பார்க்க நினைப்பவர்களுக்கு ஒரு ஃபீல் குட் சாயிஸ் இந்த மெரிஸ் மெரிஸ்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்