ஐடா புயல் தாக்கத்தால் அமெரிக்காவின் பல்வேறு நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் நியூயார்க் நகரில் அவசர காலநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் ஐடா புயல் கரையை கடந்தது. புயலின் பாதையில் சிக்கிய நகரங்கள் அனைத்திலும் சூறாவளி காற்று வீசியதோடு, கனமழையும் கொட்டித் தீர்த்தது. மேரிலேண்ட், நியூஜெர்சி, கனக்டிகட் என பல்வேறு நகரங்களும் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன. நியூயார்க் நகரில் கனமழை பெய்ததால் ரயில்வே சுரங்கப்பாதைகள், சாலைகள் மற்றும் வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்துள்ளது. இதனை மோசமான வானிலை என கூறியுள்ள நியூயார்க் மேயர் பிளாசியோ நகரில் அவசரநிலை பிரகடனம் செய்துள்ளார்.
நியூயார்க் மத்திய பூங்காவில் மட்டும் ஒரு மணி நேரத்தில் 8 சென்டிமீட்டர் மழை பெய்ததாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. நகரின் சுரங்கப்பாதைகள் மூடப்பட்டு, ரயில் மற்றும் விமான சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே ஐடா புயல் தாக்கிய லூசியானா மற்றும் நியூ ஆர்லியன்ஸ் மாகாணங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் மின் இணைப்பு மற்றும் தகவல் தொடர்பு இணைப்புகள் கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்