பெருந்தன்மையான அரசு என்பதற்கான அடையாளத்தை திமுகவிடம் நாம் எதிர்பார்க்க முடியாது என்று டிடிவி தினகரன் தெரிவித்தார்.
திருச்சி தொட்டியம் தொகுதி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ராஜசேகரன் இல்ல திருமணவிழாவில் பங்கேற்பதற்காக, அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் திருச்சி சென்றார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம்,
" சட்டப்பேரவையில் ஓபிஎஸ் பேசுகையில் 'நதியினில் வெள்ளம், கரையினில் நெருப்பு. இரண்டுக்கும் நடுவே இறைவனின் சிரிப்பு. இதுதான் என் நிலை'' என பேசியது பற்றி உங்களது கருத்து என்ன" என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு ஓபிஎஸ் என்ன அர்த்தத்தில் கூறினார் என்று தெரியவில்லை. எந்த அர்த்தத்தில் கூறினார் என்பதை அவரிடம்தான் கேட்க வேண்டும் என பதிலளித்தார்.
அடுத்ததாக, கோடநாடு கொலை வழக்கில் தன்னை சிக்க வைக்க முயற்சி நடப்பதாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, காவல் துறையினர் மீதும், தமிழக அரசின் மீதும் குற்றம்சாட்டுவது குறித்து உங்கள் கருத்து என்ன? என்ற கேள்விக்கு, 'மடியில் கனமில்லை என்றால் வழியில் பயமில்லை என்பார்கள். எந்தத் தவறும் செய்யாதவர் பயப்பட வேண்டிய அவசியமில்லை'' என்றார்.
ஜெயலலிதா பெயரில் இருந்த பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கும் தமிழ்நாடு அரசின் நடவடிக்கை குறித்த கேள்விக்கு, 'தேவையில்லாத விசயத்தைச் செய்கின்றனர். ஜெயலலிதா பெயரில் இருந்த பல்கலைக்கழகத்தை அப்பெயரை மாற்றாமல் அப்படியே தொடர அனுமதிப்பதுதான் பெருந்தன்மையான அரசுக்கு அடையாளம். அதை திமுகவிடம் நாம் எதிர்பார்க்க முடியாது' என்றார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்